Friday, August 22, 2008

கண்டவுடன் தட்டுக் காலிதான்.



எங்கள் அம்மம்மா, அம்மா யாவரும் செய்ததுதான். இப்பொழுது நாங்கள். இனிப் பிள்ளைகளும் கூட செய்வார்கள். பழகிய சிற்றுண்டிதான். ஆனாலும் என்றுமே கண்டவுடன் தட்டுக் காலிதான்.

பெரியோர் முதல் குழந்தைகள் வரை விரும்பும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று.

பற்றிஸ்

கறி செய்யத் தேவையான பொருட்கள்.

1. எலும்பில்லாத மட்டன் - ¼ கிலோ

2. வெங்காயம் - 1
3. மிளகாயத் தூள் - 1 ரீ ஸ்பூன்
4. தனியாத் தூள் - ½ ரீ ஸ்பூன்
5. சீரகத்தூள் - ½ ரீ ஸ்பூன்
6. மஞ்சள் தூள் - சிறிதளவு
7. மட்டன் மசாலா - 1 ரீ ஸ்பூன்
8. இஞ்சி உள்ளி பேஸ்ட் 2 ரீ ஸ்பூன்
9. உப்பு தேவையானளவு
10. கறிவேற்பிலை - சிறிதளவு
11. எலுமிச்சைச் சாறு – சில துளிகள்
12. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை

இறைச்சியை அரைத்து எடுத்து அதனுடன் உப்பு, தனியாத் தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலாத் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி உள்ளி பேஸ்ட் பிரட்டி, 15 நிமிடம் ஊறவிடுங்கள்.

பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேற்பிலை போட்டு, இறைச்சியைச் சேர்த்து வதக்குங்கள். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி அவியவிடுங்கள். இடையிடையே பிரட்டி விடுங்கள். எண்ணெய் தண்ணீரிலேயே இறைச்சி அவிந்துவிடும்.

அவிந்ததும் தேசிச்சாறு சேர்த்து இறக்கி வையுங்கள்.

பற்றிஸ் மேல்மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்.

1. மைதா மா – 250 கிராம்

2. உப்பு – சிறிதளவு
3. பேக்கிங் பவுடர் - சிறிதளவு
4. பட்டர் - 1 ரீ ஸ்பூன்
5. பொரிப்பதற்கு எண்ணெய்

மாவை கோப்பையில் இட்டு உப்பு, பேக்கிங் பவுடர், பட்டர் சேர்த்துக் கிளறி தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவுபோல இறுக்கமாக நன்றாகக் குழைத்து எடுத்து இறுக்கமாக மூடி 3-4 மணித்தியாலம் வைத்து விடுங்கள்.

பின்பு எடுத்து போட்டில் சிறிது மாவு தூவி, குழைத்து வைத்த மாவில் சிறிய அளவாக பந்துபோல உருட்டி எடுத்து, போட்டில் வைத்து வட்டமாகவும் மெல்லிதாகவும் உருட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் கறியை வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களை மடித்து விடுங்கள். (அச்சில் போட்டும் வெட்டிக் கொள்ளலாம்.)

மிகுதியையும் இவ்வாறே செய்து கொள்ளுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு கொதித்ததும் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளி ஸோசுடனும், கடிப்பதற்கு வெங்காயம் தக்காளி துண்டங்களும் வைத்துக் கொண்டால் இறைச்சிச் சுவையுடன் தட்டுக் காலியாகிவிடும்.

குறிப்பு

சைவம் உண்பவர்கள் கிழங்குக்கறி, சோயாக்கறி போன்ற ஏதாவது ஒன்றை வைத்து தயாரித்துக் கொள்ளலாம்.

-: மாதேவி :-

4 comments:

  1. எனக்கும் மிகவும் பிடிக்கும் :)

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. jesus christ, first i read "kandavudan Kattu Thaali". like naataamai dialogue 'katra thaali' or something like that :))

    ReplyDelete
  4. O realy. I never thought it will sound like that.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்