Tuesday, October 28, 2008

நலந் தரும் பழங்கள்

சந்தைக்கு சென்றால் பழக்கடையை திரும்பிப் பார்க்காமல் செல்பவர்கள் யாராவது இருப்பார்களா?

அவை தமது அழகான வடிவங்களாலும், நிறங்களாலும், வாசனைகளாலும், சுவைகளாலும், கண், மூக்கு, நா மூன்றையும் கவர்ந்து போவோர் வருவோர் எல்லோரையும் வா வா என அழைக்கின்றன. எனவேதான் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உண்கின்றார்கள்.


புராதன காலம் முதலாக முனிவர், ரிஷிகள் சமைத்த உணவைத் துறந்து பெரும்பாலும் பால், பழம், ஆகியவற்றை உண்டார்கள். இல்லையேல் உப்பு புளி போன்ற சுவையூட்டிகளைத் தவிர்த்து தானியம், கிழங்கு வகைகளை அவித்தே உண்டார்கள். இதனால் நீண்ட காலம் திடகாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இதை எமது புராண இதிகாசக் கதைகளும் எடுத்து இயம்பியுள்ளன. நாரதர் கொடுத்த மாங்கனிக்காக விநாயகரும் முருகனும் போட்டியிட்ட கதையை நாம் அறிவோம். அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை உண்டதால் அவ்வைப் பிராட்டி நீண்டகாலம் வாழ்ந்த வரலாறு உண்டு.


பழங்களில் உள்ள சத்துக்கள் எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பழங்களில் பெரும்பாலும் விட்டமின் சீ சத்தும், கல்சியமும் அடங்கியுள்ளன. நார்ப்பொருளும் உண்டு. அதிலுள்ள கரட்டின் சத்து புற்று நோய்களைத் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள். பொட்டாசியம் சத்து பிரஸரைக் குறைக்குமாம்.



பழங்களை சாப்பிடுவதற்கு பலமணி நேரத்திற்கு முன்னர் வெட்டி வைத்தல் கூடாது. வெட்டி வைப்பதால் அதிலுள்ள விட்டமின் சீ சத்து அழிந்துவிடும். எனவே வெட்டியவுடன் சாப்பிடுவதே சிறந்தது.
இந்துக்கள் இறைவனுக்கு பழங்களைப் படைக்கும் வழக்கம் உடையவர்கள். கோயில்களில் பஞ்சாமிருதம் என்று எல்லாவித பழங்களையும் தேன் வெல்லத்துடன் கலந்து தயாரித்து பிரசாதமாக வழங்குவர். அதனால் உடலுக்கு வேண்டிய சக்தி யாவும் கிடைத்துவிடுகிறது. பழனிப் பிரசாதமும் பிரசித்தி பெற்றது.
பழங்களை ஜூஸ் வகையாகவும் தயாரித்து அருந்திக் கொள்ளலாம். புறுட் சலட்டுகளாகவும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பழங்களைச் சமையலில் பயன்படுத்தி உண்ணும் வழக்கம் உண்டு. பதப்படுத்தி ஜாம், கோர்டியல், மாமலைட் தயாரிப்பதுண்டு. பழங்களைப் பதப்படுத்தி ரின்களிலும் சந்தைப்படுத்துகிறார்கள்.
ஆயினும் நேரடியாகச் சாப்பிடுவதே நல்லது. அதனால் விட்டமின் சத்துக்கள் அழியாமல் முழுச் செறிவுடன் கிடைக்கும்.
மா, பாலா, வாழை எங்களது நாடுகளில் கூடுதலாகக் கிடைக்கும் பழங்களாகும். இவற்றிற்கு முக்கனிகள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
மாம்பழம்
மாம்பழத்தில் கலோரி 65, புரதம் 0.7, விட்மின் சீ 48 மி;கி உள்ளது. கரோட்டின் சத்து மிக அதிகளவு (2700 மைக்கிரோ கிராம்) உண்டு.
காயாகவும் பழமாகவும் உண்ணப்படுகிறது. சட்னி, குருமா, கேசரி, பாயாசம், மோர்க் குழம்பு, சாதம், ஊறுகாய், வடகம், பட்சணம், தோசை, அடை, எனப் பலவிதமாகப் பயன்படுத்தலாம்.
பலாப்பழம்
கலோரி 88, புரதம் 1.9, விட்மின் சீ 7 மி;கி உள்ளது. இதில் புரதம் சற்று அதிகமாக உள்ளதை அவதானித்து இருப்பீர்கள். இனிப்புச்சுவை கூடியது. எனவே நீரிழிவு நோயாளர்கள் கூடுதலாக உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
பட்சணங்களாகச் செய்யவும் பயன்படும். குருமா, சாதம், தோசை, அடை, கொழுக்கட்டை போன்ற பலவும் செய்து கொள்ளலாம். பொங்கலுக்குள் இட்டுச் சமைத்தால் சுவையாக இருக்கும்.
வாழைப்பழம்
கலோரி 94, புரதம் 1.3, விட்டமின் சீ 11 மி;கி உள்ளது. இதில் 25சதவிகிதம் மாப்பொருள் உண்டு. சிறுகுழந்தைகளுக்கும் ஆறாவது மாதத்தின் பின் கொடுக்கலாம்.
வயிற்றோட்டம் உள்ள குழந்தைகள் பெரியவர்களும் கப்பல் வாழைபழம் சாப்பிடுவது நல்லது. அளவான இனிப்புள்ள பழமாகையால் நீரிழிவு நோயாளருக்கு உகந்தது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மையும் உடையது.
பட்சணமாகவும், சலட்டாகவும், இனிப்புவகைகள், அடை, வடை, சப்பாத்தி, வாய்ப்பன் செய்யவும் உகந்தது.
முக அழகிற்காக பூசுவதும் உண்டு.
பப்பாளி
கரோட்டின சத்து அதிகம் உண்டு. கலோரி 39, புரதம் 0.6, விட்டமின் சீ 64 மி;கி உடையது. அழகு சாதனத்திற்காகப் பயன்படும். மலச்சிக்கலைப் போக்கும். நீரிழிவு, கொலஸ்டரோல் நோயாளருக்கு உகந்தது.
இதுவும் குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்தின் பின் கொடுக்கக் கூடியது. புருட் சலட்டாக செய்து கொள்ளலாம்.
பப்பாசிக்காய் அச்சாறு, கறிவகைகள் செய்யப் பயன்படும். இறைச்சி வகைகளை மெதுமைப்படுத்த பப்பாசிக் காயை சமைக்கும்போது பயன்படுத்தலாம்.
அழுக்குச் சவ்வுள்ள புண்களின் சவ்வை கரையச் செய்ய மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அன்னாசி
பொட்டாசியம், அமிலம் கூடிய பழம். சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். சமையல் அலங்காரத்திற்கும், பணியார வகைகள், கறிவகைகள், சலட், கேக் புடிங் என சகலதிலும் அசத்தும் இது. பாயாசம், புரியாணி, ரசம், பிட்சா, அச்சாறு. குருமா, மோர்க் குழம்பு எனப் பல வகையாவும் செய்து கொள்ளலாம்.
கலோரி 47, புரதம் 0.5, விட்டமின் சீ 40 மி;கி உடையது.
தோடை
கலோரி 45, புரதம் 0.9, விட்மின் சீ 64 மி;கி உடையது. நோயாளிகளைப் பார்க்கப் போகும் போது எல்லோர் கைகளிலும் ஆடும். கேக், புடிங், சாதம், ரசம், சலட், சூப் தயாரித்துக் கொள்ளலாம்.
சமையல் அலங்காரத்திற்கும் பயன்படுத்தலாம்.
எலுமிச்சை
புளிப்புச் சுவைக்காகப் பயன் படுத்துகிறோம். சூடான வெப்பத்தில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் சீ சத்து அழிந்துவிடும். எனவே ஆக்கிய உணவை ஆறவைத்த பின் கலந்து கொள்ளவும்.
எலுமிச்சையில் கரட்டின் சத்து மிகக் குறைவே. ஆசிட் கூடியது என்பதால் உணவில் அளவாகவே சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையல் அலங்காரம், முக அலங்காரத்திற்கும் உபயோகிப்பர்.
ஊறுகாய் செய்து கொள்ளலாம். புடிங் செய்யவும் பயன்படும்.கலோரி 41, புரதம் 0.8, விட்மின் சீ 45 மி;கி உடையது.
:- மாதேவி:-

2 comments:

  1. நன்றி நானானி.பழங்கள் பயனுள்ளவை என நம்புகிறேன். மற்றவர்களுக்கும் பயன்பட்டால் சந்தோசம்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்