Saturday, December 13, 2008

பாசிப்பயறு முளை சலட்


பயறு வகைளில் நிறைந்த புரொட்டின் இருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். பொதுவாகவே சமையலில் நாம் பயன்படுத்தி வரும் கடலை, பருப்பு வகைகள், செமிபாடடைவது சற்று சிரமமாக இருக்கும்.

அதைத் தடுக்க இவற்றை நாம் முளைக்க வைத்த பின் சமையலில் சேர்த்து செய்து கொண்டோமேயானால் விரைவில் அவை சமிபாடடையும். அத்துடன் கூடிய போஷணையைப் பெற்றுக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்

1. முழுப் பாசிப்பயறு – 1 கப்

2. தக்காளி – 2

3. வெங்காயம் - 1

4. குடமிளகாய் - 1 (விரும்பிய வர்ணத்தில்)


முறை 1


ஓலிவ் ஓயில் 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் ¼ ரீ ஸ்பூன்

உப்பு, மிளகு தூள் தேவையான அளவு

தேசிக்காய் சிறிதளவு


முறை 2


சோயா சோஸ் 2 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள், உப்பு தேவையான அளவு

ஒயில் 1 ரீ ஸ்பூன்

விரும்பினால் தேசிச் சாறு சிறிதளவு.



செய்முறை

பாசிப்பருப்பை தண்ணீரில் 8-9 மணித்தியாலம் ஊற வைத்து எடுக்கவும்.

வெள்ளை நப்கின் துணியை நீரில் நனைத்து எடுத்து அதில் பயறை வைத்து சுற்றி ஒரு கோப்பையில் போட்டு மூடி வையுங்கள்.

மறுநாள் காலையில் திறந்து பார்த்தால் சிறிது முளை வந்திருக்கும்.

துணி உலர்ந்திருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் மடித்து வைத்து மூடிவிடுங்கள்.

மறுநாள் காலையில் எடுத்தால் நன்றாக முளை விட்டிருக்கும்.

எடுத்து உணவு தயாரித்துக் கொள்ளலாம்.

(இப்பொழுது சுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற்றுகளாக முளைத்த பயறு கிடைக்கிறது)


சலட் செய்யும் முறை 1


தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள். ஒரு போலில் போடுங்கள்.

முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.

ஒலிவ் ஓயில் அல்லது சலட் ஓயில் உடன் பூண்டு பேஸ்ட், உப்பு மிளகு, தூள் கலந்து எடுத்து, சில துளி எலுமிச்சம் சாறு விட்டு வெஜிட்டபிள் மேல் ஊற்றி கலந்து விடுங்கள்.

பச்சைப் பயறாக நேரடியாக சாப்பிடுவது சிறந்தது.

சலட் செய்யும் முறை 2


தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஓயில் விட்டு முளைப் பயறைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி உப்பு, சோயா சோஸ், மிளகு தூள், தூவி கலந்து இறக்கி விடுங்கள்.

நல்ல மிளகு வாசனையுடன் இருக்கும்.

அத்துடன் வெட்டி வைத்த மரக்கறிகளை எடுத்து அவற்றிலும் சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.

விரும்பினால் தேசிச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிளேட்டில் எடுத்து வைத்து விடுங்கள்.சத்துச் செறிவு மிக்க சலட் உங்களை அழகுடன் சாப்பிட அழைக்கும்.


:- மாதேவி -:

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்