Sunday, June 21, 2009

கத்தரி கடலைக் குழம்பு

கத்தரிக்காய் (brinjal) என்றாலே எண்ணெயில் பொரிய வைத்து எடுத்து, கடுகு பூண்டு, வெங்காயம், வெந்தயம், கறிவேற்பிலை தாளித்துக் கொட்ட ஊரெல்லாம் மணம் கூட்டும்.

பின் அதற்கு உப்பிட்டு மிளகாய்ப் பொடி சேர்த்து, புளிக் கரைசல், கெட்டித் தேங்காய்ப் பால் விட்டு அடுப்பில் ஏற்ற கமகமக்கும்.

இப்பொழுது சாப்பிட வாருங்கள் என வீட்டில் உள்ளோரை அழைக்கத் தேவையில்லை.

சமையலறையை தாமாகவே எட்டிப் பார்ப்பார்கள்.

வாய்க்கு ருசியான கத்தரிக்காய் காரக் குழம்பு அனைவரையும் மயக்குவதில் வல்லது.

எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகள் நாக்கிற்கு சுவை கொடுக்கும் எனச் சொல்லத் தேவையில்லை.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் அழிய வாய்ப்புண்டு. உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று கூற முடியாது.

எனவே இத்துடன் அவித்த கடலையைக் கலந்து கொண்டால் கத்தரிக்காய் குழம்பும் வித்தியாசமாக இருக்கும். கடலையின் புரதச் சத்தும் போனஸாகக் கிடைக்கும்.

ஒரு முறை செய்துதான் பாருங்களேன்.

முயற்சிக்கு தேவையானவை

கத்தரிக்காய் - 4
கடலை – ¼ கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4
இஞ்சி – 1 துண்டு
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியா பொடி - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
உப்பு – விருப்பத்திற்கு ஏற்ப
புளிக் கரைசல் – விருப்பத்திற்கு ஏற்ப
பொரிக்க எண்ணெய் - ¼ லீட்டர்
கடுகு
கறிவேற்பிலை
ரம்பை

வறுத்து அரைத்து எடுக்க

பட்டை – 1
கராம்பு – 2
ஏலம் - 2

கடலையை அவித்து எடுத்து வையுங்கள்.

பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல் அரைத்து எடுங்கள்.

வெங்காயம் மிளகாயை சிறியதாக வெட்டுங்கள்.

கத்தரிக்காயை இரண்டு அங்குல நீள மெல்லிய துண்டுகளாக தண்ணீரில் வெட்டி வையுங்கள்.

தக்காளியை நடுத்தரத் துண்டங்களாக வெட்டி வையுங்கள்.

எண்ணெயைக் கொதிக்க வைத்து பிழிந்து எடுத்த கத்தரிக்காய்த் துண்டுகளை பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள்.

இரண்டு டேபிள் ஸ்பூன் ஓயிலில் கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை, ரம்பை தாளித்து, தக்காளி சேர்த்து பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்றாகக் கிளறி புளிக் கரைசல் விட்டு, அரைக் கப் தண்ணீர் விட்டு உப்பு, மிளகாய்ப் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, அரைத்த மசாலாப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த பின் கடலை, பொரித்த கத்தரிக்காய் சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்குங்கள்.

சாதம், பிரியாணி, சப்பாத்தி, இடியாப்பம், பிட்டு, ரொட்டி, அப்பம் என எதற்கும் ஏற்ற சைட் டிஸ்சாக உதவும்.

மாறுதலுக்கு -

புளிக் கரைசலுக்கு பதிலாக சமைத்த பின் எலுமிச்சம் சாறு சேர்த்துக் கொள்ளலாம். வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தக்காளி சேர்ப்பதால் புளியை சற்று குறைத்து விட்டுக் கொள்ளுங்கள்.

கத்தரி பற்றிய விபரங்களுக்கு:-
http://www.thefreedictionary.com/brinjal

மாதேவி

6 comments:

  1. ஆகா மாதேவி பார்த்தேலே கத்தரிக்காய்,புளி சேர்த்து செய்வது சப்பு கொட்ட வைக்கிறது.நாங்களும் பல விதமாக இதை சமைப்போம்,

    ரொம்ப அருமை.


    மொச்ச கொட்ட கத்திர்க்காய் , பருப்பு கத்திரிக்காய்,தால்சா, கத்திரிக்காய் சார், மட்டனுடனும் சமைப்போம், உங்க காரக்குழம்பு இன்னும் சுவை அதிகமாக இருக்கும்

    ReplyDelete
  2. நன்றி வல்லிசிம்ஹன்

    ReplyDelete
  3. நன்றி Jaleela.
    ஆகா! மட்டனுடன் மிகவும் சுவையாக இருக்குமே. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. sinnutasty.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading sinnutasty.blogspot.com every day.
    no fax payday loan
    canadian payday loans

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்