Friday, May 18, 2012

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை

குளர்மையுடையது எனப் போற்றப்படும் இது இடைவெப்ப வலயத்திற்குரிய மரம். Lythraceae குடும்பத்தைச் சார்ந்தது.
  • ஈரான் ஆப்கனிஸ்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. 
  • எகிப்து இஸ்ரேலில் காட்டுச் செடியாக வளர்ந்தது. 
  • பின் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு பரவியது என்கிறார்கள். 
  • இமாலயா பகுதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

எங்கள் தோட்டத்தில் பூவாக காயாக பழமுமாக
மாதுளை, மாதுளங்கம், என்ற பெயர்களில் அழைப்பார்கள். தாவரவியல் பெயர் Punica Granatum. இதில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு என மூன்று வகைகள் உள்ளன. இதை "சூப்பர் புருட் " (Super fruit ) என்றும் அழைக்கின்றார்கள்.

வீட்டுத் தோட்டங்களிலும் சிறிய இனங்களை பெரிய சாடிகளிலும் பயிரிட்டுக்கொள்ளலாம். இம் மரத்தின் பூ, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணமுடையது என்கிறார்கள்.

சிறிய மரம் 8 மீற்றர் உயரம் வரை வளரும். 100- 150 பழங்கள் வரை கொடுக்கும். நல்ல வடிகால் கொண்ட வண்டல் மண் மாதுளம் செடி வளர்வதற்கு ஏற்றது.

பொதுவாக மழைக்கால டிசம்பரில் வெட்டிவிட்டால் பெப்ரவரி மார்ச்சில் பூத்து யூன் ஆகஸ்டில் பழம் கிடைக்கும் என்கிறார்கள்.

வரிசைக்கு வரிசை நாலு மீற்றரும் செடிக்கு செடி 2 மீற்றரும் இருக்குமாறு மாதுளை நடவு செய்வது சிறந்தது என்கிறார்கள்.


மாதுளம் பயிர்ச் செய்கை
கறுத்தத் தோலுடைய மாதுளம் பழம் பார்த்திருக்கிறீர்களா, Saveth இனம். கறுத்த இனத்திற்குள் இருப்பதும் சிவத்த முத்துக்கள்தான்.




சித்த ஆயுள்வேத மருத்துவங்களில்

சித்த ஆயுள் வேத மருத்துவ முறைகளில் இதற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

  • இரத்த விருத்திக்கு நல்லது 
  • இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைத் தரவல்லது. 
  • குடற்புண்களைக் குணப்படுத்துகிறது. 
  • நோயினால் பாதிப்படைந்தவர்கள் உடல் தேறவும் பலம் பெறவும் இப்பழம் பெரிதும் உதவும்.
மேலும்.....
  • பித்தத்தைத் தவிர்க்கும். 
  • மலட்டுத்தன்மையை நீக்கும். 
  • உடற்சூட்டைத் தணிக்கும். 
  • மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து பருக வாந்தி நிற்கும் 
  • மாதுளம் பழம் விதையுடன் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். 
என ஆயுள்வேத சித்த வைத்தியங்களில் சொல்லப்படுகிறது.
முத்தனைய மாதுள முத்துக்கள்
உணவுவகைகள்

தாகத்தைத் தணிக்கும். என்பதால் கோடையில் சாப்பிடச் சிறந்தது. ஜீசாகவும் மில்க் ஜேக், சர்பத், மாதுளை லசி, மாதுளம் சாதம், மாதுளம் சலட், புருட் சலட், பஞ்சாமிர்தம், எனத் தயாரித்து உட்கொள்ளலாம்.

புடிங் வகைகளில் கலக்கலாம்.

வாட்டிய இறைச்சி வகைகளிலும் சலட்இலைகளுடன் கலக்கின்றார்கள்.

பேசியன் சூப்பில் போடுகின்றார்கள்.

மாதுளம் பானமாகவும் விற்கப்படுகிறது.

ஆர்மேனியாவில் வைன் தயாரிக்கிறார்கள்.

கலிபோர்ணியா, அரிசோனாவிலும்  ஜீஸ் தயாரிக்கப் பயிரிடுகின்றார்கள்.

இந்தியாவில் மஹாராஸ்ரா குஷராத் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது.

விஞ்ஞான ஆய்வுகளில்

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை இப் பழத்திற்கு உண்டு என்கிறார்கள் ஆராச்சியாளர்கள். இப்பழத்தில் Phytochemical உள்ளது. எலஜிக் அமிலம் என அழைக்கபடும் இது புற்றுநோய் கலங்களைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறார்கள். இது ஆய்வக முடிவுதான். இன்னமும் மனிதர்களில் பரீட்சித்துப் பாரக்கவில்லை.

மாதுளம் பிஞ்சு என் அக்கா கையில்

மேலும் சுவாசப்பை புற்று நோய், புரஸ்ரேட் புற்று நோய், ஆகியவை தோன்றுவதற்கான சாத்தித்தைக் குறைக்கும் என எலிகளில் செய்யபட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Pomegranate Health Benefits வீடியோவில் பார்க்க

அல்சிமர் நோய் தீவிரமடைவதைத் தாமதமாக்கும் என எலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு தெரிவித்தது.


 எலும்புத் தேய்வு நோயான ஒஸ்டியோ ஆரத்திரைடிஸ் நோயில் குருத்தெலும்பு தேய்வதைக் குறைக்கக் கூடும் என மற்றொரு ஆய்வு தெரிவித்தது.


தினமும் 1.7 அவுன்ஸ் மாதுளம் சாறு குடித்தால் உயர் இரத்த அழுத்தமானது 5 சதவிகிதத்தால் குறையும் என ஒரு ஆய்வு கூறியது.

அதேபோல பற்களுக்கும் முரசுகளுக்கும் இடையே காரை படிவது dental plaque குறையலாம் எனவும் வேறொரு ஆய்வு கூறியது.

இத்தகைய ஆய்வுகளும் பெரும்பாலும் மாதுளை உற்பத்தியாளர்களின் அனுசரணையுடன் செய்யப்பட்டதால் நம்பகத்தன்மை குறைவு என்கிறார்கள்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இவற்றின் நன்மையை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஆண்மைக் குறைப்பாடு பற்றி செய்திகளுக்கு உதவுவது பற்றி ஆதாரம் இல்லை என்கிறது.

படிக்க  Evidence from pomegranate study not firm




 
இதில் உள்ள போஷணைப் பொருட்கள் என்ன? எவ்வளவு இருக்கின்றன? அமெரிக்காவின் USDA தரும் தகவல்கள் கீழே உள்ளன

 
Pomegranate, arils only
Nutritional value per 100 g (3.5 oz)
Energy 346 kJ (83 kcal)
Carbohydrates 18.7 g
- Sugars 13.7 g
- Dietary fiber 4.0 g
Fat 1.2 g
Protein 1.7 g
Thiamine (vit. B1) 0.07 mg (6%)
Riboflavin (vit. B2) 0.05 mg (4%)
Niacin (vit. B3) 0.29 mg (2%)
Pantothenic acid (B5) 0.38 mg (8%)
Vitamin B6 0.08 mg (6%)
Folate (vit. B9) 38 μg (10%)
Vitamin C 10 mg (12%)
Calcium 10 mg (1%)
Iron 0.30 mg (2%)
Magnesium 12 mg (3%)
Phosphorus 36 mg (5%)
Potassium 236 mg (5%)
Zinc 0.35 mg (4%)
Percentages are relative to
US recommendations for adults.
Source: USDA Nutrient Database

குறைந்தளவு கலோரிச் சத்தும் கொழுப்பும்  இருப்பதால் உடலுக்கு தீமையளிக்காது.  சிறிதளவாவது நன்மையளிக்கும் என நம்பலாம். அழகிய பழமாகவும் கவர்வதால் விரும்பி  உண்ணப் படுகின்றது. சுவையாகவும் இருக்கின்றதல்லவா அதனால் உண்பது நல்லதே.

சலட் செய்ய

தேவையானவை 

மாதுளம் பழம் - 1
தயிர் - 1 கப்
கப்பல் வாழைப்பழம் -  2
சீனி -  1 ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு

தயாரிக்க

  • தயிரை நன்கு அடித்து சீனி, உப்பு கலந்துவிடுங்கள். 
  • பழங்களைக் கழுவி தோல் நீ்க்கி எடுங்கள்.
  • வாழைப்பழத்தை 1/2 அங்குல வட்டமாக வெட்டி அடித்து வைத்த தயிரில் கலவுங்கள்.
  • மாதுளை முத்துக்களை உடைத்து எடுத்து கலந்துவிடுங்கள்.
  • குளிரூட்டியில் வையுங்கள்.
  • கண்ணுக்கு கலர்புல்லாக இருக்கும். நாவுக்கு குளிர்ச்சியான சலட்.
தனியாகவும் சாப்பிடலாம்.

சாதத்துடன் கலந்து சாப்பிட கோடை வெப்பத்திற்கு குளிர்ச்சி தரும்.

கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான சலட் பற்றிய முன்னைய பதிவுகள்

 1. ஜில்லென்று ஒரு சலட்
 2. வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்


-: மாதேவி :-

Saturday, April 28, 2012

இஸ்சோ வடே.... இறால் காரக் குழம்பு


"வடே வடே வடேய் இஸ்சோ வடே.."

இந்தக் கூவலைக் கேட்காமல் நீங்கள் இலங்கைப் பேருந்துகளிலும், இரயில்களிலும் பிரயாணம் பண்ணியிருக்க முடியாது.

அவ்வளவு பிரசித்தம், பெரு விருப்பு இந்த இஸ்சோ மீது.


இஸ்சோ என்றால் வேறொன்னும் இல்லை! நம்ம இறால்தான்

இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நாடு.  இங்கு மீன் உற்பத்தி பலகாலம் தொட்டு நடைபெற்று வருகிறது. இத்தொழில் கைத் தொழிலாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

முதலில் புத்தளம் மாவட்டத்தில் இறால் மீன் பிடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வருடம் ஒன்றிற்கு 4360 மெட்ரிக் தொன் இறால்கள் இங்கு கிடைத்தன. பின்னர் வெள்ளைப் புள்ளி நோயினால் வீழ்ச்சி ஏற்பட்டது. 1570 மெட்றிக் தொன் ஆகக் குறைந்தது. இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் சுமார் 2900 ஹெக்டரில் இறால் பண்ணைகள் அமைக்க கடற்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இறால் பண்ணைகளை ஆரம்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகளையும் வழங்க தீர்மானித்துள்ளார்கள்.

இறால் பிரியர்களுக்கு ஒரு அமோக செய்தி. இத் திட்டத்தின் படி வடக்கிலும்

கிழக்கிலுமாக 4000 ஹெக்டரில் இறால் வளரப்புப் பண்ணைகளை முன்னெடுக்க முடியும் என்கிறார்கள். இனி என்ன? இறால் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.


அலர்ஜி உள்ளவர்களுக்கு திண்டாட்டம் கூடி வரும் எனச் சொல்லத்தேவையில்லை.

இறால் மிகவும் சுவையான உணவாக இருப்பதால் அதற்கு கிராக்கி அதிகம். அதியுயர் பெறுமதி மிக்க உணவாக இருக்கின்றது. 500 கிறாம் 450 ரூபாவிற்கு மேல் விற்பனையாகிறது.

இலங்கையில் கரையோரப் பகுதிகளில் இறால் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இத்துடன் கடல் நீர் ஏரிகளிலும் இறால் மீன்பிடிப்பதைக் காணலாம்.



தொண்டைமனாற்றுக் கடல் வல்லைவெளி, காரைநகர், மழைநீர்த் தேக்கங்களில் கூடுகட்டி வலை வீசி இறால் மீன் பிடிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

இறால் நன்நீரிலும் உவர் நீரிலும் வாழும். பின்புறமாகவும் நீந்தும். கழிவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன.

மட்டக்களப்பு சிங்கை இறால் மிகவும் பிரசித்தமானது. ஆசிய நாடுகள் இறால் உற்பத்தியி;ல் முன்னணியில் நிற்கின்றன. சீனா, தாய்லாந்து இந்தியாவின் ஆந்திரா இறால் உற்பத்தி அதிகம். உலகில் தாய்லாந்து இறால் ஏற்றுமதியில் முதல் இடம் வகிக்கின்றது.



இறாலில் உள்ள போசனைப் பொருட்கள் எவை?


ஒரு சேர்விங் 3 அவுன்ஸ் என எடுத்துக் கொண்டால் அதில்
  • புரதம் 18 கிறாம் உள்ளது. 
  • கலோரி அளவு 92 மட்டுமே. 
  • நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே உண்டு. 
  • கொலஸ்டரோல் அளவு மிக அதிகம் 199 மி.கிராம் உள்ளது.
  • இரும்புச் சத்து 15 சதவிகிதம்
  • விற்றமின் சீ  3 சதவிகிதம்
  • விற்றமின் ஏ  4 சதவிகிதம்
  • கல்சியம்  3 சதவிகிதம்
குருதிக் கொலஸ்டரோலும் உணவுக் கொலஸ்டரோலும்

 எமது குருதிக் கொலஜ்டரோலைப் பொறுத்தவரையில் உணவிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் கொலஸ்டரோலை விட நிரம்பிய கொழுப்புகளால் எமது உடல் உற்பத்தி செய்யும் கொலஸ்டரோலே அதிக பாதகம் கொண்டது.
  • இறாலில் நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே இருப்பதால் பாதிப்பு அதிகம் இல்லை. 
  • ஆனால் அதிகளவு கொலஸ்டரோல் இருக்கிறது. 
  • மனிதர்களது உணவில் உண்ணப்படும் நேரடிக் கொலஸ்டரோல் 300 மி.கி தாண்டக் கூடாது என்கிறார்கள். முட்டையில் 250 மிகி இருப்பதால் அளவோடு சாப்பிட வேண்டும் என்கிறார்கள். இறாலில் 199 இருப்பதால் அதையும் ஓரளவு மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஆனால் இறால் முட்டை, இறைச்சி எல்லாவற்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இலங்கையில் இஸ்சோ வடை Isso Vade மிகவும் பிரபலம். 



கூனி இறால் என அழைக்கப்படும் சிறு இறால் போட்டு புட்டு அவித்து உண்பார்கள். சிறிய இறால் கருவாடும் பிரபலம். பருப்பு, பலாக்காய் கறிகளில் கலந்து கொள்வார்கள். இறால் பிரியாணி, ப்ரைட் ரைஸ், புட்டு, இடியாப்ப பிரியாணி, நூடில்ஸ் என மக்கள் வெளுத்துக் கட்டுவார்கள்.

சைனீஸ்தாய் குக்கிங் இல் புரொன் டிஸ்சஸ் முக்கியத்துவம் வகிக்கின்றன. ஹார்லிக் புரொன் பெப்பர் புரொன், ஸ்வீற் அன்ட் சவர் புரொன், புரொன் சூப், கிறில்ட் புரொன், பட்டர் புரொன், புரொன் பாஸ்ரா, ஹாட் சில்லி புரொன், ஸ்பைசி ரொமாட்டோ புரொன், என இன்னும் பல விதங்களாக உணவுகள் தயாரிக்கலாம்.

சிப்ஸ் பிரியர்களுக்காக இறால் ப்ளேவட் சிப்ஸ்சும், பைக்கற்களில் விற்பனை ஆகின்றன.

இலங்கை இந்தியச் சமையல்களில் இறால் முருங்கைக் காய், கத்தரிக்காய் குழம்பு, பலராலும் விரும்பப்படும் உணவாகும்.

இறால் வறை, சலட், பொரியல், தேங்காய்ப்பால் கறி, சொதி, தொக்கு, கூழ், சம்பல், பஹோடா, எனப் பலவாறு உண்ணப்படுகிறது.

இறால் தேங்காய்ப் பால் காரக் குழம்பு

சேகரிக்க வேண்டியவை

இறால் -  20
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பெரும்சீரகம் - ¼ தேக்கரண்டி
வெந்தயம்  - ¼ தேக்கரண்டி
தட்டிய பூண்டு - 4
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
மல்லித் தூள் - ½ ரிஸ்பூன்
மஞ்சள் - ¼ ரிஸ்பூன்
தேங்காய்ப்பால் - ¼ கப்
உப்பு - தேவைக்கு
புளிக்கரைசல் - தேவைக்கு
ரம்பை - 4 துண்டு
கறிவேற்பிலை - சிறிதளவு.
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்

தயாரிப்பு

இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள்.

உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள்.

ஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.

ரம்பை, கறிவேற்பிலை சேருங்கள்

இறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்பொடி. மஞ்சள்பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள்.

மணம்; ஊரையெல்லாம் கூட்டி வயிற்றைக் கிளறும்.

சாப்பிடாதவர்களுக்கு வயிற்றைக் குமட்டும். மூக்கைப் பொத்தி வீட்டைவிட்டே ஓட வைக்கும்.

புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். இறுதியாக தேங்காய்பால் ஊற்றி பரிமாறும் போலில் மாற்றி விடுங்கள். நாலுகால் பூனைகளுடன் இரண்டுகால்
பூனைகளும் களவு எடுக்க வரும்.

(  குறிப்பு - மகளுக்காக சமைத்தது  )

மாதேவி

0.0.0.0.0.0.0.0

Sunday, March 18, 2012

நல்ல உணவும் குப்பை உணவும்


உயிரினம்  வாழ்வதற்கு உணவும் நீரும் அத்தியாவசியமானவை. காற்றைப் பற்றிச் சொல்லவில்லை என நிகைக்காதீர்கள். அதையும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் அது சமையலில் சேராதே!

இவை யாவும் அவசியமாக இருந்தபோதும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் என்ற கேள்வி பலர் மனங்களிலும் எழுகின்றது.

நாவுக்கு சுவை தரக் கூடிய உணவுகளையே மனம் நாடி நிற்கும். இனிப்பு,காரம் உப்புக் கலந்த,  எண்ணெயில் பொரித்த சுவையான உணவுவகைகளை விரும்பி உள்ளே தள்ளிக் கொண்டிருக்க யாருக்குத்தான் ஆசையில்லை.

கொழுப்பு நிறைந்த பிட்ஷா, பர்ஹர், சிப்ஸ், பேஸ்டி, கேக், டோனட் உணவுக் கூடங்களை மக்கள் அலையாக மோதுவதைக் காண்கின்றோம்.

குப்பை உணவு junk food என்ற சொல்லை இப்பொழுது ஆங்கிலத்தில் உபயோகிக்கிறார்கள். ஆனால் குப்பையை அள்ளி வாயில் போடுவதில்தான் பலருக்கு நாட்டம்.

குப்பை உணவு

குப்பை உணவு என்றால் என்ன?

போஷாக்கு மிகவும் குறைவான உணவுகள் அவை.
  • அதே நேரம் அவற்றில் மிக அதிகமாக எண்ணெய், கொழுப்பு, இனிப்பு கலந்திருக்கும் 
  • அவற்றின் கலோரிப் பெறுமானம் மிக அதிகமாக இருக்கும். 
  • உப்பும் பொதுவாக அவற்றில் மிக அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். 
  • ஆனால் போஷாக்குக் கூறுகளான புரதம், விற்றமின்கள், தாதுப் பொருட்கள் மிகக் குறைவாகவே இருக்கும்.

இவ்வகையான கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்துதான் இருக்கின்றோம்.

இருந்தும் இந்த நாக்கு எம்மை விட்டபாடில்லை. கணக்கு வழக்கின்றி இவற்றை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

ஏன் எமது நாக்குகள் இவற்றை விட்டுவிடாது துரத்திப் பிடிக்கின்றன என்பதை பின்னர் பார்ப்போம்.


நாம் தினசரி உணவுகளை எந்த விகிதத்தில் உண்ண வேண்டும் என்பதை உணவு பிரமிட் சுட்டிக் காட்டுகிறது.

தானியங்களினால் உணவு அதுவும் முக்கியமாக தீட்டி தவிடு நீக்கப்படாத தானியங்களினாலான உணவு அதிகம் சாப்பிட வேண்டியதாகிறது. தினசரி 6 சேர்விங் என்கிறார்கள். இவை முக்கியமாக மாச்சத்தைத் தருகின்றன.

அடுத்து காய்கறிகளும் பழங்களும் கிட்டத்தற்ற அதற்கு இணையாண அளவு உட்கொள்ளப்பட வேண்டியவையாகும். அதாவது காய்கறிகள் 3 சேர்விங் மற்றும் பழ வகைகள் 2 சேர்விங் என மொத்தம் 5 ஆகிறது. இவற்றில் இருந்து பெருமளவு நார்ப்பொருளும், விற்றமின் கனியங்கள் கிடைக்கின்றன.

புரதங்களைப் பொறுத்த வரையில் பால், தயிர், யோர்கட். சீஸ் போன்றவை 3 சேர்விங், மீன், இறைச்சி, கோழியிறைச்சி, பருப்பு பயறு கடலை போன்றவையும், விதைகளுமாக 2 சேர்விங்  உட்கொள்ள வேண்டும்.



ஆனால் மிகக் குறைந்த அளவு எடுக்க வேண்டியவை கொழுப்பு, எண்ணெய், இனிப்புகளாகும். இந்த குறைந்தளவு எடுக்க வேண்டிய உணவின் கூறுகளே குப்பை உணவுகளில் அதிகம் கலந்துள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் அதிகமாக எடுக்க வேண்டியது நீர். அதாவது சாதாரண நீர் மட்டுமே.

மென்பானம், குளிர்பானம், மதுபானங்கள் போன்றவை இதில் அடங்கவில்லை என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.

அடிமையாகும் நாக்கு

ஏன் எமது மனமும் நாக்கும் வேண்டாத உணவு வகைகளுக்கு அடிமையாகின்றன?

இது பற்றி 2008 ல்  Paul Johnson and Paul Kenny ஆகியோர் ஒரு ஆய்வு செய்தார்கள். அதன்படி குப்பை உணவுகள் எனப்படுபவை எமது மூளையின் கலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அதை நாடச் செய்கிறது என்கிறார்கள். இது கொகேயின், ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் தமக்கு எம்மை அடிமையாக்குவதற்கு ஒத்ததாகும்.

பல வாரங்களுக்கு அத்தகைய குப்பை உணவுகளை அளவுகணக்கின்றி உண்பதால் மூளையில் உள்ள இன்ப மையங்கள் (pleasure centers) அவற்றிற்கு இசைவாகி மேலும்மேலும் மகிழ்ச்சிக்கான உணவையே நாடும்.

கருவிலும் பாதிக்க ஆரம்பிக்கிறது

இத்தகைய குணமானது வளர்ந்த மனிதர்களை மாத்திரம் பாதிக்கிறது என எண்ணிவிடாதீர்கள். கர்ப்பமாயிருக்கும் தாய் இவ்வாறான தவறான உணவுப் பழக்கத்தில் மூழ்கி இருந்தால் கருவில் வளரும் குழந்தைகள் பிறந்த பின்னர் இத்தகைய தவறான உணவுப் பழக்கத்தையே நாடும் என 2007ல் British Journal of Nutrition செய்த ஆய்வு கூறுகிறது.

அவசரத் தீனிகள்

இத்தகைய குப்பை உணவுகளின் தாயகம் கடை உணவுகள்தான். பெரும்பாலான உடனடியாக உண்ணும்படி வாங்கும் உணவுகள் இத்தகையவை. அவசர உணவுகள்,  திடீர் உணவுகள் (Fast foods) என்றெல்லாம் அழைக்கிறார்கள். வசதியான உணவுகள் convenience foods என்ற மற்றொரு பதமும் உண்டு.

அவசரத் தீனிகள் ஏன்? 


 இதற்குக் காரணம் இன்றைய வாழ்வானது அவசரமும் இயந்திர மயமும் ஆகிவிட்டது.

இத்தகைய உணவுகள்
  • உடனடியாகக் கிடைப்பது மாத்திரமின்றி, 
  • அதிக விலையுமற்றவை. 
  • இதனால் அனைத்துத் தரத்தினரையும் ஒருங்கு சேர அழைக்கிறது. 
  • இவற்றில் விலை குறைந்த கொழுப்பு இனிப்பு, உப்பு, தவிடு நீக்கபட்ட தானியங்கள் அல்லது அவற்றின் மா ஆகியவையே அடங்கும். 
  • ஆனால் சற்று விலை அதிகமான பொருட்களான போஷனைப் பொருட்களான பழ வகைகள், காய்கறிவகைகள், கொழுப்பற்ற இறைச்சி வகைகள் இருப்பது குறைவு.
இவற்றைத் தடுக்க இந்த நவீன உணவுப் பிரமிட் என்ன சொல்கிறது என்பதையும் பாருங்களேன். தெளிவாப் படிக்க மேலே கிளிக் பண்ணுங்கள்.


புதிய உணவுப் பிரமிட்டானது உணவு வகைகளைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் நின்று விடாது தினசரி உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்பு வேண்டும் என்கிறது.

வளர்ந்தவர்களுக்கு தினசரி 30 நிமிடங்களும், வளரும் குழந்தைகளுக்கு 60 நிமிடங்களும் என்பதை வலியுறுத்துகிறது.

எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கும் குறைந்த எடை மீண்டும் ஏறக் கூடாது எனத் தடுப்பதற்கும் இது 90 நிமிடங்களாகும்.

நோய்களை விதைக்கிறது

இத்தகைய உணவு முறைகளால் இன்று பலரும் அதீத எடை கொண்ட குண்டு மனிதர்களாக மாறி வருகின்றனர்.

ஒருவரது எடை எவ்வளவாக இருக்க வேண்டும். அவரது உயரத்திற்கு ஏற்பவே எடை இருக்க வேண்டும். இது ஆங்கிலத்தில் Body mass index எனப்படுகிறது. சுருக்கமாக BMI என்பார்கள் அதையே தமிழில் இப்பொழுது உடல் நிறை குறியீட்டெண் என அழைக்கிறார்கள். ஒருவருடைய உயரத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல் எடையை மதிப்பிடுவதற்கு இக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

உங்களது  BMI எவ்வளவு?

உங்களது  BMI யை அறிவது எப்படி? உங்களது எடையை கிலோகிறாமில் அளந்து அதை மீற்றரிலான உங்கள் உயரத்தின் வர்க்கத்தால் பிரிப்பதாகும். இந்த இடியப்பச் சிக்கல் எனக்குப் புரியவில்லை என்பவர்களுக்கு வழி சொல்கிறேன்.

இந்த இணைப்பிற்குச் சென்று நீங்களே சுலபமாக அறிந்து கொள்ளலாம்


இது இலங்கை இந்தியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கானது. இலங்கை அரசின் சுகாதரத்துறை அமைச்சினால் வெளியிட்ப்பட்டுள்ளது.
உங்களது உயரத்திற்கு ஏற்றதா? அதிகமா? குறைவா என்பதைத் தருவதுடன் உங்களது உயரத்திற்கு எந்தளவு எடை இருப்பது நல்லது என்பதையும் அறிவுறுத்துகிறது.


நவீன உலகின் உயிர்கொல்லி நோய்களாக
  • நீரிழிவு, 
  • இருதய நோய்கள், 
  • உயர் இரத்த அழுத்தம், 
  • புற்று நோய்கள் 
ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன.

இவை தொற்று நோய்களை விட வேகமாகப் பரவி கணக்கிலடங்காத உயிர்களைக் காவு கொள்வதற்கு முக்கிய காரணம் இத்தகைய போஷாக்கற்ற உணவு முறைகளே. அவற்றுடன் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும், மாசடைந்த சூழலும் காரணங்களாகின்றன என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

உடல் ஆரோக்கியமாக எவ்வளவு உண்ண வேண்டும்.


அதற்கு எவ்வளவு உண்ண வேண்டும்?


அதாவது எமது தினசரி கலோரித் தேவை எவ்வளவு என்பதைக் கண்டறிய இந்த இணைப்பைக் கிளிக் பண்ணுங்கள்

உங்கள் தினசரி கலோரித் தேவை எவ்வளவு

அதெல்லாம் சரி! ஆரோக்கியமான உணவுகள் எவை என்று சொல்லவில்லையே எனக் கேட்கிறீர்களா? whfoods.com இவற்றைப் பட்டியலிடுகிறது.



என்ன இவற்றில் சில எங்கள் நாட்டிற்குக் கிடைக்காதா என்கிறீர்களா? உண்மைதான். இருந்தாலும் இங்கு கிடைக்கும் பல வகை உணவுகளையும் சொல்கிறதே. அவற்றைப் பயன்படுத்திப் பலன் பெறலாமே.

மாதேவி

0.0.0.0.0.0