Tuesday, October 7, 2008

வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்


சலட் என்ற பெயரைக் கேட்டாலே அநேகம் பேருக்கு பசி கெட்டுவிடும். செமியாது, சாப்பிடுவதற்கு அலர்ஜி என்றெல்லாம் சாட்டுச் சொல்லுவார்கள். இதை எப்படித்தான் மேலைத் தேசத்தவர்கள் சாப்பிடுகிறார்களோ என்ற கேள்வியும் கேட்பார்கள்.

உடலுக்கு வேண்டிய சத்துக்கள் பலவும் அதில் அடங்கியுள்ளதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். எங்களில் பலர் இப்பொழுது சிலகாலமாகத்தான் உண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உப்பு, காரம், புளிப்பு அதிகம் சேர்த்து, சப்புக்கொட்டி உண்ணும் ஆசிய நாட்டவரக்ளுக்கு இது சுவையற்றதாக, சாப்பிடச் சிரமமாக இருக்கலாம். எங்கள் ருசிக்கு ஏற்ப உப்பு, காரம் சற்றுச் சேர்த்து தயாரித்துக் கொண்டால் சாப்பிடப் பழகிவிடும்.

உடற்பருமன் உடையவர்கள் உடல் எடையைக் குறைக்கவும் ஏனையோர் அழகாகவும், சருமம் பளபளப்பாகவும், ஹெல்தியாகவும் இருக்க சலட் கைகொடுக்கும். கொலஸ்டரோல், நீரிழிவு, பிரஸர் நோயுள்ளவர்கள் தினமும் ஒருவகை சலட் சாப்பிடுவது நல்லது. இது அவர்கள் உடல் நலத்தைப் பேண உதவும்.

ஏன் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருக்குமே உகந்தது. விட்டமின், கனிமங்கள், நார்ப்பொருள் நிறைந்தது. கலோரி அளவு மிகக் குறைவு என்பதால்தான் மேற்கூறிய நோயாளர்களுக்கு உகந்தது. மாமிச உணவை மட்டும் உண்பவர்களுக்கு அத்தியாவசியமானது. மலச்சிக்கலையும் நீக்கும்.

சலட் தயாரிப்பு முறைகளில் சில மாற்றங்கள் செய்து தயாரித்துக் கொண்டால் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக அமையும். சிறுவர்களையும் கவரும் விதத்தில் தயார்த்துக் கொள்ளலாம்.

இது வெஜிட்டபிள்ஸ், புருட்ஸ் இரண்டும் சேர்ந்த சலட். இரண்டும் சேர்வதால் வெஜிட்டபிள் தனியே சாப்பிட விரும்பாதவர்களும் விரும்பி உண்பார்கள்.


வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்

தேவையான பொருட்கள்

1. உருளைக்கிழங்கு – 1
2. கரட் - 1
3. வெள்ளரி – 1
4. தக்காளி -1
5. விதையில்லாத பச்சைத் திராட்சைப்பழம் - 10
6. விதையில்லாத சிவத்த திராட்சைப்பழம் - 10
7. பைன் அப்பிள் ¼ துண்டு
8. சிறிய சிவத்த அப்பிள் - 1
9. சிறிய பச்சை அப்பிள் - 1
10. ஆரேன்ஜ் - 1 (விரும்பினால்)
11. லெட்டியுஸ் - 6 இலைகள்
12. பிரஸ் கிறீம் - 2 டேபிள் ஸ்பூன்
13. உப்பு சிறிதளவு
14. பெப்பர் சிறிதளவு

தயாரித்தல்

உருளைக்கிழங்கு கரட்டை சிறு துண்டுகளாக வெட்டி நீராவியில் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளரி, தக்காளி சிறு துண்டுகளாக, அப்பிள் தோலுடன் வெட்டிக் கொள்ளுங்கள். திராட்சையை வெட்டாமல் அப்படியே எடுங்கள். ஆரேன்ஜ்யை தோல் நீக்கி, சுளைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உப்பு நீரில் கழுவி எடுத்த லெட்டியுஸ் இலைகளை சலட் பிளேட்டில் சுற்றிவர வட்டமாக அடுக்கிவிடுங்கள்.

புருட்ஸ், வெஸிட்டபில் அனைத்தையும் உப்பு பெப்பர் கலந்து பிளேட்டின் நடுவில் வைத்து மேலே பிரஸ் கிறீம் போட்டு பரிமாறுங்கள்.

கலர்புல் சலட்டாக இருப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், பழ வகைகளும் சேர்வதால் பல்சுவையையும் தரும்.

-: மாதேவி :-

1 comment:

  1. நான் "சலட்" இனின் தீவிர ரசிகை..:)

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்