Tuesday, October 28, 2008

நலந் தரும் பழங்கள்

சந்தைக்கு சென்றால் பழக்கடையை திரும்பிப் பார்க்காமல் செல்பவர்கள் யாராவது இருப்பார்களா?

அவை தமது அழகான வடிவங்களாலும், நிறங்களாலும், வாசனைகளாலும், சுவைகளாலும், கண், மூக்கு, நா மூன்றையும் கவர்ந்து போவோர் வருவோர் எல்லோரையும் வா வா என அழைக்கின்றன. எனவேதான் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உண்கின்றார்கள்.


புராதன காலம் முதலாக முனிவர், ரிஷிகள் சமைத்த உணவைத் துறந்து பெரும்பாலும் பால், பழம், ஆகியவற்றை உண்டார்கள். இல்லையேல் உப்பு புளி போன்ற சுவையூட்டிகளைத் தவிர்த்து தானியம், கிழங்கு வகைகளை அவித்தே உண்டார்கள். இதனால் நீண்ட காலம் திடகாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இதை எமது புராண இதிகாசக் கதைகளும் எடுத்து இயம்பியுள்ளன. நாரதர் கொடுத்த மாங்கனிக்காக விநாயகரும் முருகனும் போட்டியிட்ட கதையை நாம் அறிவோம். அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை உண்டதால் அவ்வைப் பிராட்டி நீண்டகாலம் வாழ்ந்த வரலாறு உண்டு.


பழங்களில் உள்ள சத்துக்கள் எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பழங்களில் பெரும்பாலும் விட்டமின் சீ சத்தும், கல்சியமும் அடங்கியுள்ளன. நார்ப்பொருளும் உண்டு. அதிலுள்ள கரட்டின் சத்து புற்று நோய்களைத் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள். பொட்டாசியம் சத்து பிரஸரைக் குறைக்குமாம்.



பழங்களை சாப்பிடுவதற்கு பலமணி நேரத்திற்கு முன்னர் வெட்டி வைத்தல் கூடாது. வெட்டி வைப்பதால் அதிலுள்ள விட்டமின் சீ சத்து அழிந்துவிடும். எனவே வெட்டியவுடன் சாப்பிடுவதே சிறந்தது.
இந்துக்கள் இறைவனுக்கு பழங்களைப் படைக்கும் வழக்கம் உடையவர்கள். கோயில்களில் பஞ்சாமிருதம் என்று எல்லாவித பழங்களையும் தேன் வெல்லத்துடன் கலந்து தயாரித்து பிரசாதமாக வழங்குவர். அதனால் உடலுக்கு வேண்டிய சக்தி யாவும் கிடைத்துவிடுகிறது. பழனிப் பிரசாதமும் பிரசித்தி பெற்றது.
பழங்களை ஜூஸ் வகையாகவும் தயாரித்து அருந்திக் கொள்ளலாம். புறுட் சலட்டுகளாகவும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பழங்களைச் சமையலில் பயன்படுத்தி உண்ணும் வழக்கம் உண்டு. பதப்படுத்தி ஜாம், கோர்டியல், மாமலைட் தயாரிப்பதுண்டு. பழங்களைப் பதப்படுத்தி ரின்களிலும் சந்தைப்படுத்துகிறார்கள்.
ஆயினும் நேரடியாகச் சாப்பிடுவதே நல்லது. அதனால் விட்டமின் சத்துக்கள் அழியாமல் முழுச் செறிவுடன் கிடைக்கும்.
மா, பாலா, வாழை எங்களது நாடுகளில் கூடுதலாகக் கிடைக்கும் பழங்களாகும். இவற்றிற்கு முக்கனிகள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
மாம்பழம்
மாம்பழத்தில் கலோரி 65, புரதம் 0.7, விட்மின் சீ 48 மி;கி உள்ளது. கரோட்டின் சத்து மிக அதிகளவு (2700 மைக்கிரோ கிராம்) உண்டு.
காயாகவும் பழமாகவும் உண்ணப்படுகிறது. சட்னி, குருமா, கேசரி, பாயாசம், மோர்க் குழம்பு, சாதம், ஊறுகாய், வடகம், பட்சணம், தோசை, அடை, எனப் பலவிதமாகப் பயன்படுத்தலாம்.
பலாப்பழம்
கலோரி 88, புரதம் 1.9, விட்மின் சீ 7 மி;கி உள்ளது. இதில் புரதம் சற்று அதிகமாக உள்ளதை அவதானித்து இருப்பீர்கள். இனிப்புச்சுவை கூடியது. எனவே நீரிழிவு நோயாளர்கள் கூடுதலாக உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
பட்சணங்களாகச் செய்யவும் பயன்படும். குருமா, சாதம், தோசை, அடை, கொழுக்கட்டை போன்ற பலவும் செய்து கொள்ளலாம். பொங்கலுக்குள் இட்டுச் சமைத்தால் சுவையாக இருக்கும்.
வாழைப்பழம்
கலோரி 94, புரதம் 1.3, விட்டமின் சீ 11 மி;கி உள்ளது. இதில் 25சதவிகிதம் மாப்பொருள் உண்டு. சிறுகுழந்தைகளுக்கும் ஆறாவது மாதத்தின் பின் கொடுக்கலாம்.
வயிற்றோட்டம் உள்ள குழந்தைகள் பெரியவர்களும் கப்பல் வாழைபழம் சாப்பிடுவது நல்லது. அளவான இனிப்புள்ள பழமாகையால் நீரிழிவு நோயாளருக்கு உகந்தது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மையும் உடையது.
பட்சணமாகவும், சலட்டாகவும், இனிப்புவகைகள், அடை, வடை, சப்பாத்தி, வாய்ப்பன் செய்யவும் உகந்தது.
முக அழகிற்காக பூசுவதும் உண்டு.
பப்பாளி
கரோட்டின சத்து அதிகம் உண்டு. கலோரி 39, புரதம் 0.6, விட்டமின் சீ 64 மி;கி உடையது. அழகு சாதனத்திற்காகப் பயன்படும். மலச்சிக்கலைப் போக்கும். நீரிழிவு, கொலஸ்டரோல் நோயாளருக்கு உகந்தது.
இதுவும் குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்தின் பின் கொடுக்கக் கூடியது. புருட் சலட்டாக செய்து கொள்ளலாம்.
பப்பாசிக்காய் அச்சாறு, கறிவகைகள் செய்யப் பயன்படும். இறைச்சி வகைகளை மெதுமைப்படுத்த பப்பாசிக் காயை சமைக்கும்போது பயன்படுத்தலாம்.
அழுக்குச் சவ்வுள்ள புண்களின் சவ்வை கரையச் செய்ய மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அன்னாசி
பொட்டாசியம், அமிலம் கூடிய பழம். சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். சமையல் அலங்காரத்திற்கும், பணியார வகைகள், கறிவகைகள், சலட், கேக் புடிங் என சகலதிலும் அசத்தும் இது. பாயாசம், புரியாணி, ரசம், பிட்சா, அச்சாறு. குருமா, மோர்க் குழம்பு எனப் பல வகையாவும் செய்து கொள்ளலாம்.
கலோரி 47, புரதம் 0.5, விட்டமின் சீ 40 மி;கி உடையது.
தோடை
கலோரி 45, புரதம் 0.9, விட்மின் சீ 64 மி;கி உடையது. நோயாளிகளைப் பார்க்கப் போகும் போது எல்லோர் கைகளிலும் ஆடும். கேக், புடிங், சாதம், ரசம், சலட், சூப் தயாரித்துக் கொள்ளலாம்.
சமையல் அலங்காரத்திற்கும் பயன்படுத்தலாம்.
எலுமிச்சை
புளிப்புச் சுவைக்காகப் பயன் படுத்துகிறோம். சூடான வெப்பத்தில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் சீ சத்து அழிந்துவிடும். எனவே ஆக்கிய உணவை ஆறவைத்த பின் கலந்து கொள்ளவும்.
எலுமிச்சையில் கரட்டின் சத்து மிகக் குறைவே. ஆசிட் கூடியது என்பதால் உணவில் அளவாகவே சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையல் அலங்காரம், முக அலங்காரத்திற்கும் உபயோகிப்பர்.
ஊறுகாய் செய்து கொள்ளலாம். புடிங் செய்யவும் பயன்படும்.கலோரி 41, புரதம் 0.8, விட்மின் சீ 45 மி;கி உடையது.
:- மாதேவி:-

Tuesday, October 21, 2008

யாரடி நீ மோகினி?




இனிய இடுகை நெஞ்சங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கிவிட்டது. சரவணாஸ், ஜெயச்சந்திரன், ஆர்.எம்.கே.வி விளம்பரங்கள் தொலைக்காட்சியில் அசத்துகின்றன.

நீங்கள் டிரஸ் எடுத்தாகிவிட்டதா? சற்றுப் பொறுங்கள். பட்டாசும் வாங்கி விட்டீர்களா?

விருந்தினர்களையும் வீட்டில் உள்ளோரையும் அசத்த உணவு மெனு தயாரித்து விட்டீர்களா? நிச்சயம் தயாரித்து இருப்பீர்கள். சுவையான காலை, மதிய, இரவு விருந்துகள். அத்துடன் தின்பண்டங்களும் தயாரிப்பதில் பொழுதைத் தொலைத்துக் கொண்டிருப்பீர்கள்.

இவ்வேளையில் மதியம் மற்றும் இரவு உணவின் பின்பு பரிமாறுவதற்கு ஏற்ற ஒரு ஸ்பெஷல். சைவப்பிரியர்களும் விரும்பி முட்டை இல்லாமல் இலகுவாக தயாரித்துக் கொள்ளக் கூடியதாக பால் புடிங் டெஸேட் வகைகள் சில.

விருந்தினர் வருகையின் போது சாப்பாட்டின் பின் வழங்குவதற்கு வழமையாகச் செய்து கொள்ளும் ரவா கேசரி, பாயாசம், குலாப்ஜாம் தவிர்த்து இவற்றைச் செய்து பரிமாறிக் கொள்ளலாம். கண்ணைக் கவர்வதுடன் வித்தியாசமாகவும் இருக்கும்.

ஜெலி வகைகள், பதப்படுத்தப்பட்ட பழவகைகள், பாதாம் பிட்ஸா, முந்திரி, நிலக்கடலை, பருப்புவகைகளில் ஏதாவதை விருப்பம் போல் இவற்றுடன் கலந்து தோற்றத்திலும் சுவையிலும் கலக்க வையுங்கள். அழகிலும் கவர்ச்சியிலும் ‘நம்பர் வன்’ என்பதால் மோகினி என்போமா?

ருசியுடனும் வர்ணத்துடனும் கூடியதாகையால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே கிடைக்கும்.

‘மோகினி’யின் ருசியில் மயங்கி மேலதிகமாக டிரெஸ் ஒன்றும் கிடைக்கும். எல்லாம் அயித்தான் கையில்தான் ..….

திரி லேயேர்ஸ் புடிங்

1.கராமல் புடிங்

தேவையான பொருட்கள்

1) கராமல் புடிங் மிக்ஸ் - 1 பைக்கற்
2) பால் - 400 மி.லி
3) சீனி – 2 டேபிள் ஸ்பூன்
4) கஜீ – 10-15 (சிறியதாக உடைத்து, வறுத்துக் கொள்ளுங்கள்)

செய்முறை

1. புடிங் மிக்ஸில் உள்ள கரமல் டொபிங்கை பெரிய கிளாஸ் போலில் ஊற்றி வையுங்கள்.
2. பாலில் கரமல் கலவையைக் கரைத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சீனி கலந்து விடுங்கள்.கொதித்து கலவை சற்றுத் தடிப்பாகும் வரை கலக்கி எடுங்கள்.
3. அடுப்பில் இருந்து எடுத்து கராமலுக்கு மேல் ஊற்றி விடுங்கள்
4. சற்று ஆற, வறுத்த கஜூவை மேலே தூவி பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இரண்டு மணித்தியாலயத்தின் பின்பு ஸ்ரோபெரியைத் தயாரியுங்கள்.

2.ஸ்ரோபெரி புடிங்

தேவையான பொருட்கள்

1) ஸ்ரோபெரி புடிங் மிக்ஸ் - 1 பைக்கற்
2) பால் - 500 மி.லி
3) சீனி – 2 டேபிள் ஸ்பூன்
4) ஸ்ரோபெரி அல்லது செரி – 4-5

ஒரு கப் பாலில் டெஸேட் கலவையை கரைத்துக் கொள்ளவும். மிகுதியாக உள்ள பாலை அக் கலவையோடு சேர்க்கவும்.

சீனி கலந்து அடுப்பில் வைத்து கொதித்து கலவை சற்று தடிப்பாக வர அடுப்பில் இருந்து இறக்கி சற்று ஆற, முன்பு பிரிட்ஜில் தயாரித்து வைத்திருந்த கராமல் மேல் ஊற்றி செரி சேர்த்து பிரிட்ஜில் வையுங்கள்.

மீண்டும் 2-3 மணித்தியாலங்கள் பிரிட்ஜில் வைத்து எடுங்கள்.

மூன்று மணித்தியாலயத்தின் பின்பு கஸ்டர்ட் தயாரியுங்கள்.

3.கஸ்டர்ட் புடிங்

தேவையான பொருட்கள்

கஸ்டர்ட் மிக்ஸ் - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 400 மி.லி
சீனி – 6 டேபிள் ஸ்பூன்
வனிலா சில துளிகள்
ஜெலி – 2-3 வர்ணங்களில்


செய்முறை

ஒரு கப் பாலில் கஸ்டர்ட்டை கரைத்து எடுத்து பாலில் ஊற்றி விடுங்கள். சீனி சேர்த்து அடுப்பில் வைத்து கவனமாகக் கிளறுங்கள்.

கட்டி படாமலும் இறுகாமலும் அளவான ஸோஸ் பதத்தில் எடுத்து இறக்கி சற்று ஆற, வனிலா சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து எடுத்த ஸ்ரோபெரி மேல் ஊற்றி விடுங்கள்.

செரி, ஜெலி, துண்டங்கள் கலந்து விடுங்கள்.

மீண்டும் பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

பரிமாறு முன் வேறொரு அழகான பிளேட்டில் புடிங் போலை தலை கீழாகக் கொட்டி எடுத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

வெட்டிப் பரிமாறுங்கள்.

மூவகை வர்ணத்துடன் முச் சுவைகளுடனும் கூடிய நட்ஸ், செரி, ஜெலி கலந்த கராமல், ஸ்ரோபெரி, கஸ்டர்ட் புடிங் தயார்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும். ருசியிலும் கூட.

குறிப்பு

இங்கு 2 நாளில் தட்டுக் காலியாகி விடும்.

-: மாதேவி :-

Wednesday, October 15, 2008

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்


கத்தரி
வெள்ளையாக
மாறுமா?
மாறும்!
வெள்ளையாக மட்டுமென்ன
செம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்

கத்தரி வாழையுடன் கூட்டிணைந்து
தேங்காய்ப் பாலில் முக்குளித்து,
தேசியுடன் கலக்கும் போது
வாசனை கமழும், வாயூறும்

அக்கம் பக்கமும்
பொட்டுக்குள்ளால்
எட்டிப் பாரக்கும்.

ஊர்க் கத்தரியானால்
ஊரே கூடும்.

சுவைப்போமா?

தேங்காய்ப் பால் கத்தரி

தேவையான பொருட்கள்

1. பிஞ்சுக் கத்தரிக்காய் - 2
2. வாழைக்காய் - 1
3. சின்ன வெங்காயம் - 5,6
4. பச்சை மிளகாய் - 2
5. வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
6. தேங்காய்த் துருவல் - ½ கப்
7. மஞ்சள் தூள் விரும்பினால்
8. தேசிப்பழம் - ½
9. கறிவேற்பிலை – 1 இலை
10. உப்பு தேவையான அளவு

தாளிக்க

1. சின்ன வெங்காயம் - 3,4
2. தாளிதக் கலவை - 1 ரீ ஸ்பூன் (கடுகு, உழுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு,)
3. கறிவேற்பிலை – 1 இலை
4. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1 ம் கெட்டிப் பாலை எடுத்து தனியே வைத்துவிடுங்கள். 2ம், 3ம் பாலை ஒரு கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.

கத்தரிக்காயை முழுதாகக் கழுவி எடுத்து தண்ணீரில் சின்னவிரலளவு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வாழைக்காயின் தோலை உட் தோலுடன் சீவிக் கழிக்கவும், காயை தண்ணீரில் கத்தரியைப் போல வெட்டிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் மிளகாயை தனித்தனியே நீளமாக வெட்டிக் வையுங்கள்.
அடுப்பில் வைக்கும் பாத்திரத்தை எடுத்து 2ம், 3ம் பாலை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகளை 2-3 தண்ணீரில் கழுவிக் கொண்டு பாத்திரத்தில் போடுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மஞ்சள், வெந்தயம் சேர்த்து இறுக்கமான மூடி போட்டு 5-7 நிமிடம் அவிய விடுங்கள்.

திறந்து பிரட்டிவிடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவியவிட்டு எடுத்து கிளறி, தண்ணிப்பால் வற்ற, 1ம் பாலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்துவிடுங்கள்.

எண்ணெயில் தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.
தேங்காய்ப்பால் மணத்துடன் குழந்தைகளும் விரும்பி உண்ணும் கறியாகிவிடும்.

குறிப்பு

வாழைக்காய்க்குப் பதில் உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை கலந்து கொள்ளலாம்.

அசைவம் உண்போர் கருவாடு சேர்த்துக் கொண்டால் சுவை தரும்.

-: மாதேவி :-