Wednesday, December 24, 2008

மாங்கோ மில்க் புடிங் வித் கிறீம்


முதல் கொண்டாட்டம் அணிலுக்கு, பின் கிளிக்கு, அதற்கு பின்னர்தான் மனிதர்களுக்கு.

ஆம் மாமரம் காய்த்து பழுக்கத் தொடங்கும் போதுதான்.

வீட்டில் மரம் இல்லாதவர்கள் இப் பழத்தின் சுவையில் மயங்கி, சந்தையில் கொள்ளை விலை கொடுத்தேனும் வாங்கி பையை நிறைத்து பர்சைக் காலியாக்குவர்.

வயிறு அரை குறைதான் நிரம்பும். வாய் மட்டும் சப்புக் கொட்டும்.

மாம்பழம் சேர்ந்த டெசேட் ஒன்று.

பால், இனிப்புடன் பழமும் சேர்வதால் சுவையுடன் பழச் சத்தும் கிடைக்கும். செய்து உண்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

1. மாம்பழத் துண்டுகள் - 1 கப்

2. பால் - ¼ கப்

3. சீனி – 4 டேபிள் ஸ்பூன்

4. சவ்வரிசி – 50கிறாம்

5. பிரஸ் கிறீம் - 2 டேபிள் ஸ்பூன்

6. ஜெலி சிறிதளவு (விரும்பிய பிளேவர்)

7. செரி -1

8. வனிலா சிறிதளவு

செய்முறை

இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து சவ்வரிசை போட்டு அவிய விடுங்கள்.

அவிந்ததும் சவ்வரிசி வெள்ளை நிறம் மாறி பளபளப்பாக வரும்.

அப்பொழுது சீனி சேர்த்து கிளறுங்கள். சீனி கரைய பால் விடுங்கள்.

கொதித்து வரக் கிளறி மாம்பழத் துண்டுகள் சேர்த்து இறக்கி சற்று ஆற வனிலா சேர்த்து கப்களில் ஊற்றி பிரிஜ்ஜில் வையுங்கள்.

பரிமாறு முன் மேலே பிரஸ் கிறீம், நீளமாக வெட்டிய மாம்பழத் துண்டுகள், ஜெலி போட்டு நடுவில் செரி வைத்து பரிமாறுங்கள்


***** மாதேவி *****

Saturday, December 20, 2008

கீரை வித் மாங்காய் சலட்


சாதாரண கீரை மசியல், கீரைப் பொரியல், இரண்டும் சாப்பிட்டு அலுக்கும் போது இப்படி செய்து கொண்டால் சுவை கொடுக்கும்.

குழந்தைகளும் கீரையை தனியே சாப்பிட அடம் பிடிப்பார்கள். மாங்காய் சலட்டுடன் கலந்து கொடுக்கும் போது அடம் பிடிக்காமல் கீரையைச் சாப்பிடுவார்கள்.

அதில் இரு வகை ருசி இருப்பதால் கலந்து சாப்பிடும் போது வித்தியாசமான சுவையைத் தரும்.

சமைத்துத்தான் பாருங்களேன். கீரைக்கு புளிப்பு சலட் சேரும்போது ஆகா சொல்லத் தோன்றும்.


செய்யத் தேவையான பொருட்கள்

1. முளைக்கீரை – 1 கட்டு

2. பச்சை மிளகாய் - 4

3. சாம்பார் வெங்காயம் - 6-7

4. பூண்டு – 4

5. மிளகு, சீரக்கப் பொடி, பெருங்காயப் பொடி – சிறிதளவு

6. அரைத்த தேங்காய் கூட்டு - 1 டேபிள் ஸ்பூன்

7. கெட்டித் தேங்காய்ப்பால் - 2 டேபிள் ஸ்பூன்

8. உப்பு தேவைக்கு ஏற்ப


சலட் செய்ய

1. மாங்காய் -1

2. சாம்பார் வெங்காயம் - 5-6

3. பச்சை மிளகாய் -1

4. சீனி – 1 ரீ ஸ்பூன்

5. உப்பு தேவைக்கு ஏற்ப


செய்முறை

கீரையைத் துப்பரவு செய்து 4-5 தரம் நீரில் கழுவி எடுத்து சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் 2-3 துண்டுகளாக வெட்டுங்கள்.

மிளகாய் நீளமாக வெட்டி எடுங்கள்.

பூண்டு பேஸ்ட் செய்து வையுங்கள்.


பாத்திரத்தில் கீரையைப் போட்டு மிளகாய் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அவிய விடுங்கள்.

அவிந்ததும் சற்று மசித்து பூண்டு பேஸ்ட் மிளகு சீரகப் பொடி வெட்டிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறுங்கள்.

பின் அரைத்த தேங்காய் கூட்டு, தேங்காய்ப் பால் விட்டு இறக்கி வையுங்கள்.

விரும்பினால் கடுகு வறமிளகாய் தாளித்துக் கொட்டி கலந்து விடுங்கள்.


சலட் செய்முறை

மாங்காயைத் துருவி எடுங்கள்.

புளிமாங்காய் என்றால் சிறிதளவு உப்பு நீர் விட்டு பிழிந்து எடுங்கள்.

வெங்காயத்தை சிறியதாக வெட்டி கலந்து விடுங்கள்.

மிளகாயை 5-6 துண்டுகளாக வெட்டி விடுங்கள்.

சீனி உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.

பிளேட் ஒன்றில் கிறீன் லீப் கறியை இரு புறமும் வைத்து சலட்டை நடுவில் வைத்து பரிமாறுங்கள்.

புளிப்புச் சுவையுடன் கூடிய சலட் வித்தியாசமாக இருப்பதால் அனைவரையும் கவரும்.

:- மாதேவி -:

Saturday, December 13, 2008

பாசிப்பயறு முளை சலட்


பயறு வகைளில் நிறைந்த புரொட்டின் இருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். பொதுவாகவே சமையலில் நாம் பயன்படுத்தி வரும் கடலை, பருப்பு வகைகள், செமிபாடடைவது சற்று சிரமமாக இருக்கும்.

அதைத் தடுக்க இவற்றை நாம் முளைக்க வைத்த பின் சமையலில் சேர்த்து செய்து கொண்டோமேயானால் விரைவில் அவை சமிபாடடையும். அத்துடன் கூடிய போஷணையைப் பெற்றுக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்

1. முழுப் பாசிப்பயறு – 1 கப்

2. தக்காளி – 2

3. வெங்காயம் - 1

4. குடமிளகாய் - 1 (விரும்பிய வர்ணத்தில்)


முறை 1


ஓலிவ் ஓயில் 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் ¼ ரீ ஸ்பூன்

உப்பு, மிளகு தூள் தேவையான அளவு

தேசிக்காய் சிறிதளவு


முறை 2


சோயா சோஸ் 2 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள், உப்பு தேவையான அளவு

ஒயில் 1 ரீ ஸ்பூன்

விரும்பினால் தேசிச் சாறு சிறிதளவு.



செய்முறை

பாசிப்பருப்பை தண்ணீரில் 8-9 மணித்தியாலம் ஊற வைத்து எடுக்கவும்.

வெள்ளை நப்கின் துணியை நீரில் நனைத்து எடுத்து அதில் பயறை வைத்து சுற்றி ஒரு கோப்பையில் போட்டு மூடி வையுங்கள்.

மறுநாள் காலையில் திறந்து பார்த்தால் சிறிது முளை வந்திருக்கும்.

துணி உலர்ந்திருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் மடித்து வைத்து மூடிவிடுங்கள்.

மறுநாள் காலையில் எடுத்தால் நன்றாக முளை விட்டிருக்கும்.

எடுத்து உணவு தயாரித்துக் கொள்ளலாம்.

(இப்பொழுது சுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற்றுகளாக முளைத்த பயறு கிடைக்கிறது)


சலட் செய்யும் முறை 1


தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள். ஒரு போலில் போடுங்கள்.

முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.

ஒலிவ் ஓயில் அல்லது சலட் ஓயில் உடன் பூண்டு பேஸ்ட், உப்பு மிளகு, தூள் கலந்து எடுத்து, சில துளி எலுமிச்சம் சாறு விட்டு வெஜிட்டபிள் மேல் ஊற்றி கலந்து விடுங்கள்.

பச்சைப் பயறாக நேரடியாக சாப்பிடுவது சிறந்தது.

சலட் செய்யும் முறை 2


தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஓயில் விட்டு முளைப் பயறைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி உப்பு, சோயா சோஸ், மிளகு தூள், தூவி கலந்து இறக்கி விடுங்கள்.

நல்ல மிளகு வாசனையுடன் இருக்கும்.

அத்துடன் வெட்டி வைத்த மரக்கறிகளை எடுத்து அவற்றிலும் சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.

விரும்பினால் தேசிச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிளேட்டில் எடுத்து வைத்து விடுங்கள்.சத்துச் செறிவு மிக்க சலட் உங்களை அழகுடன் சாப்பிட அழைக்கும்.


:- மாதேவி -: