Saturday, July 11, 2009

ஆட்டுக்கல்லு உழுந்துக் கறி?

பாட்டி காலத்தில் பக்குவ சமையல் முறைகள் மிகவும் சுவையாக இருக்கும்.

அம்முறைகளில் செய்யும்போது நீண்ட நேரம் எடுக்கும் என இப்பொழுதுள்ள அவசர யுகத்தில் பலர் முணு முணுப்பார்கள்.

அவ்வாறுள்ள சமையல் முறைகள் பலவும் இன்று இலகுவான முறைக்கு கூர்ப்படைந்துள்ளன.

பழைய காலத்துப் பெண்கள் போன்று அதிகாலை நாலு மணி தொடக்கும் இரவு பத்து மணி வரைக்கும் சமையல் அறையே கதி என்று இருந்து வேலை செய்ய இன்றைய பெண்களுக்கு முடியாது.

சமையலை ஒரு மணித்தியாலயத்திற்குள் முடித்துக் கொள்ள விரும்புவார்கள். சமையலறை இயந்திர சாதனங்கள் பலவும் அதைச் சாத்தியமாக்கி உள்ளன.


பாட்டியின் பக்குவத்தில் உழுந்தை ஆட்டுக்கல்லில் அரைத்து எடுத்தபின் வாழையிலையில் தட்டி இட்லித் தட்டில் வைத்து வேகவைத்து எடுப்பர்.

ஆறியபின் சிறிய துண்டங்களாக வெட்டி ஓரிரு வாரங்கள் வெய்யிலில் காய வைத்து எடுத்து டின்களில் அடைத்து வைத்து பல மாதங்களுக்கு உபயோகிப்பர்.

தேவையானபோது எடுத்து எண்ணெயில் பொரித்து குழம்பில் கலந்துவிடுவார்கள்.

திருமணம், விசேட தினங்களுக்குக் கூட முற்கூட்டியே தயாரித்து எடுத்து வைத்து, குழம்பு ஆக்கினர்.

இம்முறையே இப்பொழுது விரைவில் தயாரிக்கக் கூடியதாக மாற்றம் பெற்றுள்ளது. அவித்து எடுக்காது ஓயிலில் சிறுசிறு உருண்டைகளாக போட்டு, பொரித்து எடுத்து, குழம்பில் கலந்து செய்யும் முறையாக வந்துள்ளது.

பொரித்தெடுத்த உருண்டைகளை சாதத்திற்கு பஜ்ஜியாகவும் ஈவினிங் டிபனாகவும் கூட யூஸ் பண்ணலாம்.


இதே முறையில் பாசிப்பருப்பு, கடலைப் பருப்பையும் ஊற வைத்து அரைத்து எடுத்து செய்து கொள்ளலாம்.

கொலஸ்டரோல், டயபடிஸ் என எண்ணெய் தவிர்க்க விரும்புவோர் கொதிக்கும் குழம்பில் சிறுசிறு உருண்டைகளாகக் போட்டு அவிய வைத்து எடுத்து ஹெல்தியாகச் சாப்பிடலாம்

தற்காலத்தில் குழம்பு தயாரிக்கவே பலர் சிரமப்படுவர். ஐஸ்கிறீம் போல உணவுகள் யாவும் பொக்ஸ்களில் விற்றால் வாங்கி வாயில் போட்டுக் கொள்ளும் நிலையில்தான் அனைவரும் இருக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்

உழுந்து – 1 கப்
சோம்பு – 1 ரீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 3
கறிவேற்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு

பொரிப்பதற்கு

ஓயில் - ¼ லீட்டர்

வறுத்து அரைத்து எடுக்க

ஏலம் - 2
கராம்பு – 1
கறுவா – 1

குழம்பு செய்வதற்கு

மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியாப்பொடி – ½ ரீ ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு தேவையான அளவு
எலுமிச்சம் பழம் - ½ மூடி

தாளிதம் செய்வதற்கு

கடுகு
உழுத்தம் பருப்பு
வெங்காயம்
கறிவேற்பிலை

செய்முறை

உழுந்தை ஊற வைத்து வடை மாவிற்கு அரைப்பது போல சோம்பு உப்புச் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுங்கள்.

இத்துடன் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேற்பிலை கலந்து விடுங்கள்.

எண்ணெயைக் கொதிக்க வைத்து மாவைக் கிள்ளி சிறுசிறு உருண்டைகளாக மெல்லிய பிரவுன் கலரில் பொரித்து எடுங்கள்.

சிறிது ஓயிலில் கடுகு, உழுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேற்பிலை தாளித்து தேங்காய்ப்பால் ஊற்றி உப்பு மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, பொரித்த உருண்டைகளைப் போட்டு கொதிக்க விடுங்கள்.

இடையிடையே மெதுவாகப் பிரட்டி எடுங்கள். மசாலாப் பொடி சேர்த்து, மெல்லிய தீயில் அடுப்பை வைத்து குழம்பு இறுக இறக்குங்கள்.

எலுமிச்சம் சாறு விட்டுப் பிரட்டிப் பரிமாறுங்கள்.

சாதம், பிரியாணி, புட்டு இடியாப்பத்திற்கு சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.

பிள்ளைகள் 'சைவ' இறைச்சிக் கறியெனக் கூறிச் சுவைப்பார்கள்.

மாதேவி

Saturday, June 27, 2009

சிம்பிள் ஹெல்த்தி புருட் சலட்

"தோடம்பழம் தோடம்பழம்
சோக்கான தோடம்பழம்
அம்மாவுக்கு ஒரு பழம்
அப்பாவிற்கு இரண்டு பழம்
பாட்டிக்கு ஒரு பழம்
அண்ணாவுக்கு ஒரு பழம்
தம்பிக்கும் எனக்கும் பாதிப் பழம்."

சிறுவயதில் ஆசிரியர் அபிநயத்துடன் சொல்லிக் கொடுத்து பாடிய பாடலின் நினைவுதான் இது.

பாடும்பொழுது கடைசி வரி பாடு முன்பே கவலை வந்துவிடும்.

"எனக்குப் பாதிப் பழம்" எனப் பாட விரும்பம் வராது.

அப்பாவின் அந்த இரண்டு பழத்தில் எனக்கு என்று மாற்றிப்பாடவே எண்ணம் வரும். எப்பொழுது அப்பாவின் இரண்டு பழத்தையும் பறிக்கலாம் என்ற நினைவே இருக்கும்.

இது எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்படும் இயல்பான குணமே. என்னையும் எப்பொழுது பெரியவனாக நினைப்பார்கள் என்ற ஆதங்கம் அவர்களுக்கு மேலோங்கி நிற்பதில் வியப்பில்லை.

"அணிலே அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டும் பழம் கொண்டு வா ...."

பாலர் வகுப்பில் அனைவரும் விரும்பிப் பாடிய பாடல்தான்.

'குண்டுப்பழம்' என்று சொல்லும் போதே எல்லோர் முகங்களில் மகிழ்ச்சியும், 'கொறித்துக் கொறித்துத் தின்னலாம்' எனப் பாடுகையில் வாயில் சிரிப்புமாக ரசித்து ருசித்து கூட்டாகப் பாடிய நாட்கள் அழியாத தொடர்களாக வந்து போய்க் கொண்டே இருக்கின்றன.

இப்பொழுது இதைப் படிக்கும்போது உங்களுக்கும் எத்தனையோ 'பழப் பாடல்கள்' நினைவுகளில் வந்து போகலாம்.

கொழும்பு கண்டி வீதியில் பயணம் செய்யும்போது கஜுகமவில் (Cadju Gama) கஜீ (முந்திரி) விற்பனை செய்யும் அழகிய பெண்களைக் காணலாம்.

இரவில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்ட குடிலில் பெற்றோல் மக்ஸ் வெளிச்சத்தில், அடர் வரணத்தில் பூக்களுடன் கூடிய பாரம்பரிய சிங்கள உடையான கம்பாயம் உடுத்திய பெண்களைக் காணலாம்.

கைகளிலே சுருக்கு வைத்துத் தைத்த டீப் நெக்குடன் கூடிய உடலை எடுப்பாகக் காட்டும் சிறிய பிளவுஸ் அணிந்திருப்பார்கள். அவர்கள் அழகை ரசிப்பதற்காகவே வாகனங்களை நிறுத்தி கஜீ வாங்குவோர் அதிகம்.

ரம்புட்டான், மங்குஸ்தான், அன்னாசி, டூரியான், பட்டர் புருட், கொய்யாப் பழங்கள் குவிந்து கிடப்பதையும் இப் பாதையால் பயணம் செய்வோர் கண்டு களிக்கக் கூடியதாக இருக்கும்.

பழங்களிலே யாழ்ப்பாணத்து கறுத்தக் கொழும்பு மாம்பழமும், ஊட்டி அப்பிளும், நுவரெலியா பியர்ஸ்சும், மல்வானை ரம்புட்டானும், மலை வாழப்பழமும், முல்லைத்தீவு பலாப்பழமும், அவுஸ்திரேலியன் மன்டரினும் என வேறு பலவும் சுவையில் பிரபலம் அடைந்துள்ளன.

இப்பொழுது கொழும்பு நகர் வீதிகளில் கூட தெருவோரங்களில் தள்ளு வண்டிகளில் எல்லா வகைப் பழங்களும் குறிப்பாக கறுத்தக் கொழும்பு மாம்பழமும், குவியல் குவியல்களாக கொட்டிக் கிடக்கின்றன. சீனிஆகாதோர் தவிர்த்து ஏனைய எல்லோருக்குமே கொண்டாட்டம்தான்.

பழங்கள் கெடாமல் இருப்பதற்கும், பளபளப்பு ஊட்டுவதற்கும் ரசாயன ஊட்டிகள் பயன்படுத்தப்படுவது வேதனைக்கு உரியதே. சம்பந்தப்பட்டோர் கவனத்தில் கொள்வார்களா?

பளபளப்பான, நீண்ட காலம் குளிர் ஊட்டியில் தவங் கிடந்த பழங்களை வாங்கி உபயோகிப்பதைத் தவிர்த்து இயன்றவரை புத்தம் புதிய பிரஸ் ஆன, மருந்தடிக்காத பழங்களை உண்பது நல்லது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதையெல்லாம் தேட முடியுமா?

இலகுவாகத் தயாரிக்கக் கூடிய புருட் சலட்


இதில் கலரிங், எசன்ஸ், கஸ்ராட், பால், எவையுமே சேர்க்கப்படவில்லை. அதனால் ஹெல்த்திற்கும் நன்மை தரும்.

இரண்டு மூன்று வகை பழவகைகள் இருந்தாலே இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம். விரும்பினால் நட்ஸ் பிளம்ஸ் சேருங்கள்.

தேவையான பொருட்கள்.

ஆப்பிள் - 1
ஒரேன்ஞ் - 1
பைன் அப்பிள் - 2 துண்டுகள்
பப்பாளி சிறியது – ½
கிறேப்ஸ் அல்லது மாதுளை முத்துக்கள் - சிறிதளவு
தேன் - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சீனி- 2 ரீ ஸ்பூன்
லைம் ஜீஸ் - பாதி
தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்

1. பழங்களை பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து ஒரு புருட் போளில் வையுங்கள்.
2. தண்ணீருடன் எலும்மிச்சம் சாறு சேர்த்துக் கலக்கி;க் கொள்ளுங்கள். இத்துடன் சீனி அல்லது தேன் கலந்து விடுங்கள்.
3. பழங்கள் மேல் ஊற்றி பிரிஜ் இல் வைத்து விரும்பிய நேரம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு
எலும்மிச்சம் சாறை புருட் சலட்டில் சேர்க்கும் பழங்களின் புளிப்பின் தன்மையைப் பொறுத்து அளவைக் கூட்டிக் குறையுங்கள்.

மாதேவி

Sunday, June 21, 2009

கத்தரி கடலைக் குழம்பு

கத்தரிக்காய் (brinjal) என்றாலே எண்ணெயில் பொரிய வைத்து எடுத்து, கடுகு பூண்டு, வெங்காயம், வெந்தயம், கறிவேற்பிலை தாளித்துக் கொட்ட ஊரெல்லாம் மணம் கூட்டும்.

பின் அதற்கு உப்பிட்டு மிளகாய்ப் பொடி சேர்த்து, புளிக் கரைசல், கெட்டித் தேங்காய்ப் பால் விட்டு அடுப்பில் ஏற்ற கமகமக்கும்.

இப்பொழுது சாப்பிட வாருங்கள் என வீட்டில் உள்ளோரை அழைக்கத் தேவையில்லை.

சமையலறையை தாமாகவே எட்டிப் பார்ப்பார்கள்.

வாய்க்கு ருசியான கத்தரிக்காய் காரக் குழம்பு அனைவரையும் மயக்குவதில் வல்லது.

எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகள் நாக்கிற்கு சுவை கொடுக்கும் எனச் சொல்லத் தேவையில்லை.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் அழிய வாய்ப்புண்டு. உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று கூற முடியாது.

எனவே இத்துடன் அவித்த கடலையைக் கலந்து கொண்டால் கத்தரிக்காய் குழம்பும் வித்தியாசமாக இருக்கும். கடலையின் புரதச் சத்தும் போனஸாகக் கிடைக்கும்.

ஒரு முறை செய்துதான் பாருங்களேன்.

முயற்சிக்கு தேவையானவை

கத்தரிக்காய் - 4
கடலை – ¼ கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4
இஞ்சி – 1 துண்டு
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியா பொடி - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
உப்பு – விருப்பத்திற்கு ஏற்ப
புளிக் கரைசல் – விருப்பத்திற்கு ஏற்ப
பொரிக்க எண்ணெய் - ¼ லீட்டர்
கடுகு
கறிவேற்பிலை
ரம்பை

வறுத்து அரைத்து எடுக்க

பட்டை – 1
கராம்பு – 2
ஏலம் - 2

கடலையை அவித்து எடுத்து வையுங்கள்.

பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல் அரைத்து எடுங்கள்.

வெங்காயம் மிளகாயை சிறியதாக வெட்டுங்கள்.

கத்தரிக்காயை இரண்டு அங்குல நீள மெல்லிய துண்டுகளாக தண்ணீரில் வெட்டி வையுங்கள்.

தக்காளியை நடுத்தரத் துண்டங்களாக வெட்டி வையுங்கள்.

எண்ணெயைக் கொதிக்க வைத்து பிழிந்து எடுத்த கத்தரிக்காய்த் துண்டுகளை பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள்.

இரண்டு டேபிள் ஸ்பூன் ஓயிலில் கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை, ரம்பை தாளித்து, தக்காளி சேர்த்து பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்றாகக் கிளறி புளிக் கரைசல் விட்டு, அரைக் கப் தண்ணீர் விட்டு உப்பு, மிளகாய்ப் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, அரைத்த மசாலாப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த பின் கடலை, பொரித்த கத்தரிக்காய் சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்குங்கள்.

சாதம், பிரியாணி, சப்பாத்தி, இடியாப்பம், பிட்டு, ரொட்டி, அப்பம் என எதற்கும் ஏற்ற சைட் டிஸ்சாக உதவும்.

மாறுதலுக்கு -

புளிக் கரைசலுக்கு பதிலாக சமைத்த பின் எலுமிச்சம் சாறு சேர்த்துக் கொள்ளலாம். வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தக்காளி சேர்ப்பதால் புளியை சற்று குறைத்து விட்டுக் கொள்ளுங்கள்.

கத்தரி பற்றிய விபரங்களுக்கு:-
http://www.thefreedictionary.com/brinjal

மாதேவி