Sunday, February 10, 2013

பருத்தித்துறை ஓடக்கரைத் தோசை சாப்பிட வாரீர்களா?

எங்கள் எள்ளுப் பாட்டன் காலத்திலிருந்தே பருத்தித்துறையூரில் ஓடக்கரை மிகவும் பிரசித்தம் பெற்றிருந்தது. மிக ஜனநெருக்கடியான இடமாக இருந்திருக்கிறது.


அந் நாட்களில் பருத்தித்துறை துறைமுகம் பிரசித்த துறைமுகமாக விளங்கியது. கப்பல் வாணிபம் நடைபெற்றது. அதனால் அக்காலத்தில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள் பலவும் இந்நகரில் இருந்தன.


நாங்களும்  சிறுவயதில் மாவுக் கப்பல்கள் இத் துறைமுகத்தில் வந்து இறக்குவதை  கண்டிருக்கின்றோம்.

முன்னர் பர்மா இந்தியாவிலிருந்து தேக்கு மரங்கள் கப்பல்களில் கொண்டு வரப்பட்டு கோயில் கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தியதாக எங்கள் பாட்டி கூறியிருக்கிறார்.

பருத்தித்துறை துறைமுகம் தற்போது அழிந்த நிலையில்.

வீட்டு ஓடுகளும் இந்தியாவிலிருந்து கப்பல்களில் வந்து இறங்கியதாகச் சொன்னார். இந்திய, சீனப் பட்டுகளும் கொண்டுவரப் பட்டு விற்கப்பட்டன.  இந்நகர் வியாபார நகராக இருந்ததால் இந் நகரை அண்டியுள்ள பிரதேசங்களிலிருந்து தொழிலுக்காக பல மக்களும் இங்கு வந்து குடியேறினார்கள்.

இந்நாட்களில் படித்த சிலர் சிங்கப்பூர், பர்மா நாடுகளில் தொழில் புரியவும் சென்றார்கள். அதனால் அந்நாட்டு உணவு முறைகளையும் நாளடைவில் இந்நகர மக்கள் அறிந்திருந்தனர்.

அம்முறையில் பலவகை உணவுகளும் அறிமுகமாயின.


நகரத்தில் கூலிக்காக வேலை செய்பவர்களுக்கு உணவுத் தேவை ஏற்பட்ட வேளைகளில் வீடுகள் தோறும் சிறிய தட்டிகள் வைத்து உணவு விற்பனை செய்யும் வழக்கம் இத்தெருக்களில் ஏற்படலாயிற்று.

இங்கு தயாரிக்கும் உணவுகள் மிகவும் ருசிமிக்கதாக இருந்தது. அவற்றின் சுவையோ ஆகா சொல்லி மாளாது. அதனால் சுற்று வட்டாரத்தில் ஏறத்தாள ஆறு மைலகள் தூர வரையுள்ள மக்கள் இங்கு வந்து உணவை வாங்கிச் செல்லும் வழக்கம் உருவாயிற்று.

விசேடமாக இவர்கள் தயாரிக்கும் முட்டை அப்பம், வெள்ளை அப்பம், தோசை, பொரிவிளாங்காய், வெள்ளை முறுக்கு, இனிப்பு சிப்ஸ், தட்டை வடை,சீடை, கச்சான் தட்டு  இன்னும் பலப்பல சொல்லலாம். சீனாவிலிருந்து வரும் புட்டரிசி என்ற ஒரு அரிசியை ஆவியில் வேக வைத்து தேங்காய் சர்க்கரை சேர்த்து உண்பார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும் என எனது அம்மா சொல்லுவார்.

நகரைச் சுற்றியுள்ள மக்கள் தமது வாழ்க்கையில் ஓரிரு தடவையேனும் இவ்வுணவை ருசிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

மாலையானால் உணவு வாங்குவதற்காக சுற்று வட்டாரங்களிலிருந்து மக்கள் நடையாகவும், சைக்கிள்களிலும் ஓடக்கரையை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிறிய அகலம் குறைந்த அந்தப் பாதையால் செல்வோர் தொகை கணக்கில் அடங்காது. சைக்கிள்கள் அவசரமாக விரைந்தால் ஒன்றுடன் ஒன்று இடிபட்டுக் கிடக்கும். மிகவும் நிதானமாகவே இங்கு செல்லல் வேண்டும்.

அண்டிய ஊர்களில் காச்சல் வந்தவர்களுக்கு காச்சல் மாறியதும் பத்திய உணவாக முதல் முதல் கொடுப்பது இங்கு செய்யப்படும் வெள்ளை அப்பத்தையே. இது எங்கள் வீட்டிலும் நடக்கும். பலதடவைகள் நடந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ளது இவ்விடம்.

விசேடமாக இவர்கள் தயாரிக்கும் தோசை அதற்கான மூன்று நான்கு வகை அம்மியில் அரைத்த சட்னி,சம்பல் ,கறிவகைகள், பொடி சம்பல், என அனைத்தும் சுவையானது.



மெத்தென்ற தோசை அதன்மேல் பச்சை மிளகாய் சட்னி, அதன்மேல்தோசை சிவப்புக் காரச் சட்னி,


அதன்மேல்தோசை காரக்கறி, பொடி சம்பல், என மாற்றி மாற்றிஅடுக்கிக் கொடுப்பார்கள். கால ஓட்டத்தில்  இப்பொழுது ஓரிரு வீடுகளில் மட்டும் தட்டி வைத்து விற்பதைக் காணலாம்.


சம்பல் ஊறி மெத்தென இருக்கும். தோசை சாப்பிட வீட்டில் போட்டி நடக்கும்.
விசேடமாக தோசைக்கு ஒரு காரக்கறி வைப்பார்கள்.



காரத்தில் கண்ணில் நீர்வடிய நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு சாப்பிடுவதிலும் சுவை இருக்கத்தான் செய்தது. நானும் சாப்பிட்டிருக்கின்றேன். இவ்வகைக் கறி வீட்டிலும் செய்திருக்கின்றேன். உடலுக்கு அதிக காரம் கூடாது என்பதால் இப்பொழுது காரத்தைக் குறைத்துச் செய்வேன்.


மெத்தென்ற தோசை
 
தேவையானவை

உழுந்து - 1 கப்
வெள்ளைப் பச்சை அரிசி - 2 கப்
புளுங்கல் அரிசி - ½ கப்
வெந்தயம் - 2 ரீ ஸ்பூன்

அரிசியை 4-5 மணிநேரம் ஊற வைத்து உரலில் இட்டு இடித்து அரித்து மாவாக எடுங்கள்.


அரிக்கும்போது வரும் குறுணியில் 2 பிடியை எடுத்துவையுங்கள். அடுப்பில் 2 ரம்ளர் நீரை வைத்து நீர் கொதிக்க குறுணியை போட்டு கஞ்சி காய்ச்சி ஆற வைத்துவிடுங்கள்.

ஆட்டுக் கல்லில் அரைத்து எடுத்த உழுந்து மாவுடன் இடித்த மா, கஞ்சி அனைத்தையும் கலந்து தோசை மா பதத்தில் கரைத்து வையுங்கள்.
சுடும்போது உப்புக் கலந்து சுடலாம்.


மிகவும் மெதுவான மெத்தென்ற தோசை கிடைக்கும்.
இதை நாங்கள் இக்காலத்திற்கு ஏற்ப கிரைண்டர் அல்லது மிக்ஸியில் செய்து கொள்ளலாம்.


பச்சை மிளகாய் காரக்கறி

தேவையானவை

பச்சை மிளகாய் - 15 - 20
சின்ன வெங்காயம் - 1 கப்
தேங்காய் நீர் - ½ கப் ( மிளகாய் காரத்தை குறைப்பதற்காக )
உப்பு புளி - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - ½ ரீ ஸ்பூன்
சோம்பு -¼ ரீ ஸ்பூன்
வெந்தயம் - ¼  ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை 

மிளகாயை சிறியதாக வட்டமாக வெட்டுங்கள.;

வெங்காயத்தையும்  சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
தேங்காய் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.

ஓயிலில் பொருட்களை தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் கொட்டி வதக்குங்கள்.

உப்புக் கலந்து வதக்குங்கள்.

நன்கு வதங்கிய பின் புளித் தண்ணியை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க விட்டு இறக்கிவிடுங்கள்.

கொதிக்கும்போதே காரம் மூக்கைப் பிடுங்கும்.



மிளகாய் காரத்துடன் பச்சை மிளகாய் காரக் கறி தயாராகிவிட்டது.



குறிப்பு - பச்சை மிளகாய்க்குப் பதில் குடமிளகாய் பயன்படுத்தினால்; காரம் இருக்காது.தேங்காய்   நீரைத் தவிர்த்து விடுங்கள்.

எனது தோசைப் பதிவுகள்

அம்மா சுட்ட தோசைகள்

அம்மா சுட்ட தோசை 2

-மாதேவி-

Sunday, January 6, 2013

முல்லை நிலம் எங்கும் தேடி முல்லை கொய்து வந்தேனே!!


ஐவகை நிலத் திணைகளில் காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை நிலமென அழைக்கப்படும். இந்த நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.


சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒரு பகுதியாக முல்லைப் பாடலும் இருக்கிறது. இது முல்லைத் திணைக்குள்ள நூலாகும்.

நம்பூதனார் கவிநயத்தோடு எழுதியது முல்லைப் பாட்டு.

முல்லை மலர் என மல்லிகையில் மிகுந்த நறுமணமுள்ள ஒரு இனம் உள்ளது. Jasminium auriculatum  oleacea குடும்பத்தைச் சார்ந்தது. நீண்ட காம்புடன் கூடிய வெண்நிற சிறிய மல்லிகை இனம் இது. கொத்துக் கொத்தாக மலரும் செடி. பெரிய மரமாக வளரக் கூடியது முல்லை மல்லி என அழைப்பார்கள்.

நன்றி விக்கிபீடியா

முல்லைக் கொடி படர்வதற்கு தனது தேரைக் கொடுத்த பாரி வள்ளலும் நமது இலக்கியங்களில் வருகின்றார். முல்லை எனும் சொல் வனமுல்லையைக் குறிக்கும் என்கிறார்கள். பாரி வள்ளல் தேரை வழங்கியது இம் முல்லைக்குத்தான்.

நன்றி விக்கிபீடியா
 இதற்குக் காய்களும் இருக்கின்றனவாம்.

நன்றி விக்கிபீடியா
 முல்லைப் பூக்களில் பல வகைள். சாதி மல்லி,

நன்றி விக்கிபீடியா

நித்திய மல்லி, மௌவல் எனப்படும் மரமல்லி இது நள்ளிரவில் பூத்து மணக்கும்.

நன்றி விக்கிபீடியா
 முல்லை ஆறும் இருக்கின்றது.

இலங்கையில் முல்லைத் தீவு என்ற ஊரும் இருக்கிறது. திருக்கருகாவூர், வடதிருமுல்லைவாயில், திருக்காவிரிப்பூம்பட்டினம், திருக்கருப்பறியலூர். கோயில்களில் முல்லை தலமரமாக அமைந்து சிறப்புப் பெறுகிறது.

இப்பொழுது முல்லை என அழைக்கப்படும் முல்லை மல்லிகை செடி பூவுடன் நன்றி விக்கிபீடியா

200 மைல்களுக்குப் பிரயாணம் செய்து முல்லை நிலமெல்லாம் ஏறி இறங்கி நான் தேடிக் கொய்து வந்தது முல்லை என அழைக்கப்படும் கீரை வகை இலைச் செடி.


இந்த இலைக்கும் இயற்கை வாசம் உண்டு. இலையை ஒடித்தால் மணம் கமழும்.

கிராமத்தில் எங்கள் வீட்டில் எப்பொழுதும் செடி இருக்கும். மழைக்கால உணவாகவும் பலதடவை கை கொடுத்திருக்கின்றது.

எங்கள் வீட்டில் எங்களுக்காக வளர்ந்திருந்து காத்திருந்த முல்லைச் செடி

எமது கிராமத்துக் காணிகளில் தேடித் திரிந்து பறித்து வந்திருக்கின்றேன். இதற்கு விலை கொடுக்க முடியுமா? தேடினாலும் நகரங்களில் கிடைக்காதது. இவ் இலைகளை வைத்து சுவையாகச் சமைக்க முடியும்.

பால்சொதி, குழம்பு, செய்து கொள்ளலாம். முல்லை இலைக் கஞ்சி, ஒடியல் ஊழ், என்று பலவும் சமைக்கலாம்.


முல்லை இலை வாசத்துடன் சொதி கமகமக்க சாதத்தில் விட்டு குழைத்து சுவையாக உண்ணலாம்.

இடியப்பம், பிட்டு, பாணுக்குச் சுவைக்கும்.


எங்கள் அம்மா மீன் தலையுடன் முல்லை இலைகளைப் போட்டு சொதி வைப்பார்கள். முல்லை முருங்கை இலைகள் இரண்டையும் கலந்தும் சொதி செய்வோம்.

முல்லை இலைச் சொதி

தேவையானவை

முல்லை இலை

கட்டித் தேங்காய்ப்பால் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம்  - 6-7
முல்லை இலைகள் - 15-20
தேசிப்புளி - 1 ரீ ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு

செய்யும் முறை

நல்ல இலைகளாக தேர்ந்து எடுங்கள்.

இவ்வாறு பூச்சி பிடித்த இலைகளை தவிருங்கள்

இலைகளின்; காம்புகளை நீக்கி விடுங்கள். நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் வெங்காயம் வெட்டி வையுங்கள்.

பாத்திரத்தில் இலைகள், பச்சை மிளகாய் வெங்காயம் உப்புப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அவிய விடுங்கள். அவியும்போதே வாசம் தூக்கும்.

அவிந்த பின் தேங்காய்ப்பால் ஊற்றி தேசிப்புளி சிறிதளவு விட்டு கலக்குங்கள்.

கொதிக்கத்தொடங்க கலக்கி விட்டு மீண்டும் ஒரு கொதிவர இறக்குங்கள். பின்பு மீதி தேசிப்புளியைக் கலந்து கோப்பையில் ஊற்றி வையுங்கள்.


கமகம வாசத்துடன் முல்லை இலைச் சொதி தயாராகிவிட்டது.
( விரும்பினால் தாளித்துக் கொட்டுங்கள் )

:- மாதேவி -:

Thursday, December 13, 2012

கோழி இறைச்சி தேங்காய்ப் பால் குழம்பு


இவற்றில் பல்வகை இனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உண்ணும் பறவைகளாகும். பலருக்கும் பிடித்தமானது. காட்டுக் கோழியிலிருந்துதான ஏனைய இனங்கள் தோன்றின.


நாட்டுக் கோழி,




புரெயிலர், கறிக்கோழி, பாம்கோழி,




முட்டைக் கோழி, கினிக் கோழி,





சண்டைக் கோழி,




யப்பானிய காடை, வான்கோழி,




ஈமு கோழி



எனப் பல்வேறு இனங்கள் உள்ளன. உலகில் உள்ள பறவை இனங்களில் அதி கூடிய எண்ணிக்கையில் இருப்பது இவ்வினம்தான்.

2003 கணக்கீட்டின்படி உலகில் 24 பில்லியன் இருந்ததாகக் கணக்கிட்டிருந்தார்கள். முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வீடுகளிலும், பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றது.

கூட்டுக் கோழியாகவும்,


திறந்த கோழி வளர்ப்பு முறையிலும்,




வளர்க்கின்றார்கள். சேவல் சண்டைக்காக ஆசியா,ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டு காட்டுக் கோழி இனத்திலிருந்துதான் ஏனைய இனங்கள் தோன்றின. கி.மு 5ம் நூற்றாண்டு அளவிலேயே கிரேக்கத்திற்கும்,சின்ன ஆசியாவுக்கும் இந்தியாவிலிருந்து உள்ளுர்க் கோழிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்கிறார்கள்.




சேவல் இனத்திற்கு பூவென அழைக்கப்படும் சிவப்புக் கொண்டை இருக்கும். இறகுகள் கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும். வாலும் விரிந்து காணப்படும்.

Phasianidae குடும்பத்தைச் சேர்ந்தது. செல்லப் பிராணியாகவும் பலர் வளர்க்கிறார்கள். கொழும்பு மாநகரிலே சில மாடிகளில் செல்லமாக வளர்க்கும் சேவல் அதிகாலையில் கூவித் துயில் எழுப்புகின்றது.

கோழி வளர்ப்பு வருமானமும் கொடுக்க வல்லது. நோய் ஏற்படாதவாறு பாதுகாத்தல் வேண்டும். தடுப்பு ஊசிகள் வழங்கப்படல் வேண்டும். நோய் வாய்ப்பட்ட கோழிகளைப் பிரித்துவிட வேணடும்.

உலகில் கோழி வளரப்பில் வரிசைக்கிரமமாக
1.    ஐக்கிய அமெரிக்கா
2.    சீனா
3.    பிரேசில்
4.    மெக்சிகோ
5.    இந்தியா
6.    பிரித்தானியா
7.    தாயலாந்து
இடம் வகிக்கின்றன.

தமிழகத்தில் நாமக்கல் முதன்மையாக விளங்குகிறது. இந்தியாவிலிருந்து கோழிகள் இலங்கை, வங்காளம், நேபாளம் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
முட்டைகள் அமீரகத்திற்கும், குவெய்த்திற்கும், ஓமானுக்கும் ஏற்றுமதி ஆகின்றன.

இலங்கையின் கால்நடை உற்பத்தியில் 70வீதம் கோழியிறைச்சி முட்டை மூலம் ஈடு செய்யப்படுகிறது. கோழி இறைச்சியும் முட்டையும் அதிகளவில் நுகரப்படுகின்றது. கோழித் தீவனமும் உற்பத்தி செய்யப்படுகின்றது.





சிறிய கோழிக் குஞ்சுகள் பலருக்கும் பிடித்தமானவை. எனக்கும் செல்லமாக வளர்க்க பிடிக்கும். எங்கள் வீட்டில் ஒருபொழுதும் வளர்ததில்லை 15 வயதில் மிகவும் விரும்பிக் கேட்டதில் ஒரு அம்மாக் கோழியையும் 22 குஞ்சுகளையும் கூட்டுடன் வாங்கி வந்து கொடுத்தார் அப்பா. விடுமுறையில் மிக மகிழ்ச்சியாக வளர்த்து அவற்றை மேய்த்து வந்தேன். பல மாதங்கள் இருந்தன. சிறிய செட்டைகள் முளைத்து வளர்ந்து வந்தன. பிறகு வாங்கியவரிடமே கொடுத்துவிட்டோம்.




மகளுக்கும் கோழிக் குஞ்சு வளர்க்க மிகவும் பிடிக்கும். கோழிக்கறி சாப்பிடவும் பிடிக்கும்.

இரண்டு குஞ்சை வாங்கி வளர்ப்போம் எனச்சொல்வாள். வீடுகள் சிறியன என்பதாலும் க்ளீன் செய்ய வேண்டும் என்பதாலும் வளர்ப்பதில்லை.




100 கிராம் சிக்கன பிரெஸ்ட் (ரோஸ்ட்டில்) போஷணை
கலோரி 171.0 kcal
காபோஹைதடீரட் 1.7 g
புரதம் 26.5 g
கொழுப்பு 6.5 g
நார்ப்பொருள் 0.0 g

நாட்டுக் கோழியின் சுவையே மிகவும் ருசியானது.அதன் மணம் சமைக்கும்போதே ஊரைக் கூட்டி நிற்கும். நாட்டுக்கோழி சமைக்கும்போது சிறிது நேரம் எடுக்கும். இதன் இறைச்சி விறைப்பானதாக இருக்கும். புறைலர் கோழி மென்மையானது விரைவில் அவிந்துவிடும்.

கோழிசமையல்கள் பற்றி கூறவே தேவையில்லை கோழி பிரியாணி,சூப், வறுவல், செட்டிநாட்டு கோழிக் குழம்பு, ம.க.உ சிக்கன், சைனீஸ் சிக்கன், பிரை, சிக்கன் 65, டிரம்ஸ்ரிக், எனப் பற்பல.....; ஒருகாலம் நான் முட்டையும் இறைச்சியும் என வயிறு முட்ட பிடி பிடித்திருக்கின்றேன். இப்போது பல வருடங்களாக சைவ உணவுதான்.




மகள் லீவில் வந்தபோது மகளுக்காக சமைத்த காரக் குழம்பு.

தேவையான பொருட்கள்

கோழியிறைச்சி - ¼ கிலோ
பம்பாய் வெங்காயம் பெரியது  - 1
கட்டித் தேங்காய்ப்பால் - ½ கப்
தண்ணித் தேங்காய்பால் - ½ கப்
பச்சை மிளகாய் - 1
கறிவேற்பிலை  - சிறிதளவு
ரம்பை - சிறிதளவு
மிளகாய்;த் தூள் - 2 ரீ ஸ்பூன்
மல்லித் தூள் - 1ரீ ஸ்பூன்
சீரகத்தூள் - ½ ரீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ரீ ஸ்பூன்
பூண்டு, இஞ்சி பேஸ்ட் - 1 ரீ ஸ்பூன்
உப்பு  - தேவையானஅளவு
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
இறைச்சிச் சரக்கு - ¼ ரீ ஸ்பூன்
தேசிப்புளிச் சாறு - 1 ரீ ஸ்பூன்


செய்முறை


இறைச்சியை கழுவி பிழிந்து எடுங்கள்.; மிளகாய்த் தூள்;, மல்லித் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், பூண்டு, இஞ்சி பேஸ்ட், உப்பு தேவையான அளவு கலந்து நன்கு பிரட்டி அரை மணித்தியாலம் ஊறவிடுங்கள்.

பச்சை மிளகாய்,வெங்காயத்தை வெட்டி எடுங்கள்.

ஓயிலில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை, ரம்பை தாளித்து இறைச்சியைக் கொட்டி பிரட்டி மூடி போட்டு 2 நிமிடங்கள் விடுங்கள்.

பின்பு கிளறி மீண்டும் இரண்டு நிமிடம் வேகவிடுங்கள். ஓயிலில் பொரிந்து நன்கு வாசனை வரும். திறந்து தண்ணிப் பால் ஊத்தி மூடி போட்டு 5 நிமிடங்கள் விடுங்கள்.

கறி மணம் ஊரைக் கூட்ட கோழிஅவிந்துவிடும்.

மூடியைத் திறந்து கட்டிப் பால் ஊற்றி இறைச்சிச் சரக்கைப் போட்டு இறக்கி வையுங்கள்.

தேசிப்புளி கலந்து பிரட்டி மூடிவிடுங்கள்.

தேங்காய்ப் பால் இறைச்சிக் குழம்பு கமகமக்கும்.

பிரியாணி, சாதம், இடியப்பம், பிட்டு, பாண், ரொட்டி, சப்பாத்தி பரோட்டாவிற்கு சுவைக்கும்.