Saturday, June 1, 2013

இனிக்கவும் காரமாகவும் உழுந்து மா ஆலங்காய் பிட்டு

இது சிறிய வகைத் தாவரம். இதிலிருந்து கிடைக்கும் பருப்பை உழுத்தம் பருப்பு என அழைக்கின்றோம்.

Thanks :- www.indiamart.com
Fabaceae குடும்பத்தைச் சார்ந்த uradbean,bignanungo.  black gram எனவும் அழைக்கப்படுகின்றது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட தாவர இனம். தெற்காசிய மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருக்கிறது. இப்பொழுதும் இங்குதான் பெரும்பான்மையாக பயிரிடப்படுகிறது. பயிர் விளைந்து 80 - 90 நாட்களில் அறுவடைக்கு வரும். மழை வெள்ளம் கூடினால் பயிர் செய்கை அழிந்துவிடும்.

இலங்கையில் பரவலாக வரண்ட பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. அனுராதபுரம், பொலனறுவ, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, புத்தளம் போன்ற பல மாவட்டங்களிலும் உழுந்து பயிரிடப்படுகிறது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

சிங்களத்தில் முங் அற்ர, மலையாளத்தில் Uzhuna  தெலுங்கில் minumulu கன்னடம் uddinabele நேபாளி uridemass. என்று அழைக்கிறார்கள்.


சங்ககாலத்தில் உழுத்தம் பருப்பு, உழுத்தம் சோறு, பொங்கல் என்பன திருமண விருந்து, மங்கள நிகழ்ச்சிகளில் பரிமாறப்பட்டன என்று அகநானூறு (86-1-2) பாடலில் சொல்லப்பட்டிருக்கின்றது. இலக்கியங்களில் உழுந்து புகழப்பட்டிருக்கின்றது.

தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப் பட்டதை சங்க இலக்கிய சான்றுகள் கூறுகின்றன 'உழுந்தின் அகல இலை வீசி' என நற்றிணைப் பாடலில் வருகின்றது.


தென்னிந்திய, இலங்கை உணவுகளில் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.

இட்லி, தோசை, வடை, ஊத்தப்பம்,குழிப்பணியாரம், உழுந்துக் கறி, உழுத்தஞ் சோறு, களி, ஆடிக்கூழ், உழுத்தம் பச்சடி, பப்படம், முறுக்கு, தட்டை, என முக்கிய பங்கு வகிக்கிறது.


பஞ்சாப் சமையலில் மிகவும் பிரசித்தமானது.

ஓரிசாவில் சக்குலிப் பித்தா எனப்படும் அரிசிமா, உழுந்து, நெய், வெல்லம், தேங்காய் கலந்து தயாரிக்கப்படும் பாரம்பரியமான உணவு பிரசித்தமானது.

உழுத்தம் பருப்பின் சக்கை ஆடு, மாடு, குதிரைகளுக்கு நல்ல தீவினமாகவும் இருந்து வருகிறது.

உழுந்துடன் நல்லெண்ணெய் சேர்த்து செய்த களி உணவு பூப்படைந்த பெண்களுக்கும் , கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறந்த உணவாகக் கொள்ளப்படுகிறது. இது கர்ப்பப்பை இடுப்பு எலும்புகள் பலமடைய உதவும்.

சத்து மா உருண்டைகளில் உழுந்து மாவும் கலக்கப்படுகிறது. மனித உடலுக்கு சத்துக்கள் தரக் கூடிய புரதம், மினரல்ஸ், விற்றமின்கள் அதிகம் அடங்கியுள்ளது.

இன்று அரிசிமாவும் உழுந்துமாவும் கலந்து செய்யப்படும் மாலைஉணவு ஆலங்காய் பிட்டு. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு.

ஏன் பெரியவர்களுக்கும் கூடத்தான்.        
         

அரிசியில் 

கலோரி 365 புரொட்டின் 8.6, நார்ப்பொருள் 3.5, விற்மின் B1, B2, B6 மற்றும் மினரல்ஸ் அடங்கி இருக்கின்றது.

100 கிறாம் உழுந்தில்......


நீரிழிவு நோயாளர்கள் வெல்லம் தவிர்த்து செய்து எடுத்துக்கொள்ளுங்கள். காரத்தாளிப்பு செய்து அதற்குள் போட்டு மெதுவாக ஒரு பிரட்டுப் பிரட்டி எடுத்துக்கொண்டு சுவைத்திடுங்கள்.

தேவையானவை


  • வறுத்த அரிசிமா – 1 கப்
  • வறுத்த உழுந்துமா- ½ கப்
  • வெல்லம் அல்லது சீனி – ¼ கப்
  • தேங்காய் பால் - ½ கப்
  • உப்பு தேவையான அளவு
விரும்பினால்  
  • தேங்காய் துருவல் - 4 டேபல் ஸ்பூன்
  • வெட்டிய முந்திரி, பிளம்ஸ் - 10 -15
  • ஏலப்பொடி சிறிதளவு.


செய்முறை

தேங்காய் பால் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள்.

ஏனைய பொருட்களை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பால் கொதித்துவர மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறுங்கள்  மா உறுண்டு வர வேண்டும்.

பால் போதாமல் இருந்தால் தண்ணீர் தெளித்து உருட்டிப் பிடியுங்கள்.



சிறு சிறு உருண்டைகளாக விரல்களால் உருட்டி வையுங்கள்.

ஸ் ரீமர் பாத்திரத்தில் நீரை கொதிக்க வையுங்கள் நன்கு கொதித்து ஆவி வந்த பின் உருண்டைகளை மெதுவாக பரவலாக கொட்டி 10 -15 நிமிடங்கள் அவியவைத்து எடுங்கள்.

அவியும் பொழுதே வாசம் மூக்கை துளைத்து பசிக்க வைக்கும்.



அவிந்ததும் இறக்கி சிறுகோப்பைகளில் போட்டு சற்று ஆற வைத்து சுவைத்திடுங்கள்.

படிக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் எத்தனை கோப்பையும் உள்ளே போகும்.

0.0.0.0.0
.

Tuesday, May 14, 2013

பூவாகி காயாகி வடகமும் ஆகி - வேப்பம் பூ

கிராமங்களில் வீட்டு முற்றத்து வாயிலில் நிழலுக்காக நாட்டி இருப்பார்கள். பல இடங்களில் தெய்வமரமாகவும் வழிபடப்படுகின்றது. பழைய காலத்தில் தோப்புக்களாகவும் இருந்தன.

இதனின்று வீசும் இதமான காற்று உடலுக்கு நன்மைகள் தரும். இள வேனிற் காலத்தில்; பூக்கும் வேப்பம் பூவின் வாசம் காற்றில் கலந்து வந்து சுகந்த மணத்தை தரும்.

இந்தியா,இலங்கை, பர்மாவில் வளரும் மூலிகை மரம் இது. 15- 20 மீற்றர் உயரம்வரை வளரக் கூடியது. 5 வருடங்களின் பின் பூத்துக் காய்கும்.


தாவரவியல் பெயர் Azadirachta  Indica.  குடும்பம் Meliaceae .  ஹிந்தியில் கடன் வாங்கி ஆங்கிலத்தில் Neem என்கிறார்கள். Indian Lilac என்றும் சொல்வதுண்டு.

4000 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டே இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என்கிறார்கள்.

மருத்துவ குணம் நிறைந்த மரம். சர்வரோக நிவாரணி மருந்தாகவும் இருந்து வருகின்றது. சமஸ்கிருதத்தில் நிம்பா என்றழைத்தார்கள். மரம், இலை, பூ, காய், பட்டை, வேர், எண்ணை, பிசின் என அனைத்துமே மருந்தாகப் பயன் படுத்தப்படுகின்றது.

  • இலை தோல்நோய்களை நீக்கும். 
  • பழம் குடல்கிருமிகளை ஒழிக்கும். 
  • நெருப்புக்காச்சல், டெங்கு தொற்றுநோய்கள் வராமல் இருக்க வேப்பம் குச்சியை அவித்துக் குடிப்பார்கள்.

கை,கால், தொண்டை நோவுக்கு எண்ணை பூசுவார்கள் மருந்தாகவும் குடிப்பார்கள்.

முன்னைய காலம் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு வேப்பம் எண்ணையை பூசிவிடுவார்கள்.

அம்மை நோய் வந்தவர்களுக்கு இலைகளைப் பரப்பி அதன்மேல் படுக்க விடுவார்கள். இவ் இலைகள் நோயை தணிக்கும் என்பார்கள்.

கரகம் ஆடுபவர்கள் கரகத்தில் வேப்பிலை கட்டி இருக்கும். அறிவியல் வளர்ச்சி நெருங்காத பின்தங்கிய கிராமங்களில் பேயை விரட்ட வேப்பிலையால் அடிக்கும் வழக்கம் இருந்தது.

உடல் உழைவு, நோவுகளுக்கு இலை, பட்டையை அவித்த நீரில் குளிப்பார்கள். பழைய காலத்தில் குழந்தை பெற்ற தாய்மாருக்கு கிருமி தொற்று வராமல் இருக்க பட்டை அவித்த நீரை ஊற்றுவார்கள்.

கிராமங்களில் காய்ந்த வேப்பம் பழங்களைப் பொறுக்கி எடுத்து வைத்து நெருப்பில் இட்டு புகை போட்டு நுளம்பை விரட்டுவார்கள்.

உறுதியான மரத்தளபாடங்கள் செய்ய முற்றிய மரம் பயன் கொடுக்கிறது.

பயிர்களுக்கு பாதுகாப்புத் தரும் கிருமி நாசினியாகவும், பசளையாகவும் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம்  வீடுகளுக்கு வந்து வேப்பம் குழைகளை வெட்டி மாட்டு வண்டிகளில் கட்டி எடுத்து தோட்டத்துக்கு கொண்டு செல்வதை கண்டிருக்கின்றோம். அன்றைய பொழுது எமக்கும் குழை விளையாட்டில் கழியும்.


ஒரு மரம் சராசரியாக 20- 30 கிலோ பழங்களை கொடுக்கும் இப் பழவிதைகளை கூட்டெரு தயாரிக்கும்போது கலந்து பயன்படுத்தினால் பூச்சித் தாக்கம் குறையும் என்கிறார்கள்.

கோவா பயிரைத்தாக்கும் வெட்டுப் புழக்களையும் கட்டுப் படுத்தலாம். அவரை, பூசணியை தாக்கும் வண்டுகளையும் தடுக்கலாம் என்கிறார்கள். வேப்பம் பிண்ணாக்கு சிறந்த சேதனப் பசளையாகும்.

எங்களது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு காணி இருந்தது. மின்சாரம் இல்லாத போர்க் காலத்தில் அங்கு வளர்ந்திருந்த பெரிய வேப்ப மரத்தின் தண்மையான காற்று எங்களுக்குஇரவுகளில் நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்தது.

அந்த மரத்திலிருந்து விழும் பூக்களால் எமது முற்றம் மெத்தையென மென்மையாகக் படர்ந்து கிடக்கும்.

வானில் இருந்து விமானங்கள் குண்டு வீச்சு நடந்த காலத்தில் அதிலிருந்து தப்புவதற்காக இந்த மரத்தின் நிழலில் ஒரு பங்கர் அமைத்திருந்தோம்.

நீம் சோப்பாகவும் கிடைக்கின்றது. கொசுவர்த்தியும் பாவனையில் உண்டு.

குருத்து இலைகளில் சட்னி செய்து உண்பார்கள்.

ஜனவரி -மார்ச் மாத காலத்தில் பூக்கும். மரம் பூக்கள் நிறைந்து காணப்படும். மரத்தின் கீழ் பாயை விரித்து வைத்து பூக்களை எடுப்பார்கள். சிலர் மரத்தில் ஏறி பறித்து வெயிலில் காயவைத்து எடுப்பார்கள்.


பூவை துவையலாகவும், பச்சடிகளாகவும், ரசமாகவும் செய்யலாம்.

உலர்த்திய பூவை நெய்யில் வதக்கி எடுத்து சாப்பிடுவார்கள்.

பூவில் வடகம் செய்து சாப்பிடுவது நம்ம ஊரில் பாரம்பரிய வழக்கம். வயிறு சுத்தமாகவும், ஏப்பத்தை போக்கவும் வேப்பம் பூ உதவுகிறது. இன்று வேப்பம்பூ வடகம் செய்வோம்.




தேவையானவை –

வேப்பம் பூ - 3 கப்
உழுந்து – 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
செத்தல் மிளகாய் - 10 -15
பெரும் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½  ரீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு.
சுவைக்கு விரும்பினால் எள்ளு – ¼ கப்

செய்முறை -


மறுநாள் நன்கு வெயில் வரவேண்டுமென என சூரியனை வேண்டிக்கொள்ளுங்கள்.

உழுந்தை 3 – 4 மணிநேரம் ஊற வைத்து அதிகாலையில் எடுத்து வடைக்கு அரைப்பதுபோல நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

கல் மண் இருந்தால் பூவை நன்கு நீரில் கழுவி அரித்து வடிய விடுங்கள்.

செத்தல்,வெங்காயம், கறிவேப்பிலை சிறியதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

அனைத்துப் பொருட்களையும் அரைத்த மாவுடன் நன்கு கலவுங்கள்.

சிறிய உருண்டை அளவில் எடுத்து சிறிய வடைகளாக தட்டி ஓலைபெட்டி அல்லது ஸ்ரெயின் லெஸ் தட்டுகளில் வைத்து நன்கு வெயிலில் காய விடுங்கள்.




இடையே மழை வந்தால் ஓடிப் பிடித்து எடுங்;கள்.

மாலையானதும் எடுத்து உள்ளே வையுங்கள்.

2 -3 நாட்கள் காய்ந்த பின் மறுபுறம் பிரட்டி காயவையுங்கள்.

3 - 5 நாட்கள் நன்கு காய்ந்த பின் எடுத்து டப்பாக்களில் அடைத்து வையுங்கள்.


தேவையானபோது எண்ணையில் அளவான தீயில் பொரித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு வடக மணத்தில் பசி பிடிக்க நீங்கள் சுவையாக ரசித்து சாப்பிடுங்கள்.

-: மாதேவி :-

Saturday, April 27, 2013

கோடையை குளிர்விக்கும் பழங்கள்


கோடையின் நடுப் பகுதிக்கு வந்துவிட்டோம் எனச் சொல்லலாம். இப்பொழுது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என்கிறார்கள்.

இடைநிலை பருவப் பெயர்ச்சிக் கால நிலையால் காற்றின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இதனால் உஷ்ணம் அதிகமாக உணரப்படும். பொலநறுவை மாவட்டத்தில் 32- 34 செல்சியஸ்சுக்கு மேல் வெப்பம் இருக்கிறது. ஏனைய இடங்களிலும் வெப்பத்துக்கு குறைவில்லை.

செரி பழம்

இந்நேரம் உடலுக்கு குளிர்சி தரும் பழவகைகள், சலட்ஸ், இளநீர், நுங்கு, மோர், மல்லித் தண்ணீர், நன்னாரி நீர், கூழ் வகைகள், கஞ்சி வகைகள், களி போன்ற நீராகாரங்கள் அதிக அளவில் பருகி உடல் வெப்பத்தைத் தணிக்கலாம்.


பழங்களில் தர்ப்பூசணியில் 98 வீத நீர்ச் சத்தும், வெள்ளரியில் 95 வீதமும், ஒரேஜ் 87 வீதமும், அப்பிள் 85 வீதமும், திராட்சை 81 வீதம், வாழைப்பழம் 75 வீதம் அளவில் இருக்கின்றன.

மனிதன் தோன்றிய காலத்தில் காடுகளில் கிடைத்த பழ வகைகள், கிழங்குகள், கீரை வகைகளை உண்டு வாழ்ந்து வந்தான்.

விழிம்பிக் காய்

காடுகளில் பாலைப்பழம், கூளாம் பழம், முரளிப் பழம், வீரைப் பழம், கரம்பைப் பழம், பனிச்சம் பழம், சூரைப் பழம், உலுவிந்தம் பழம், நறுவிலிப்பழம், கரையாக்கண்ணிப் பழம், துடரிப்பழம், அணிஞ்சில் பழம், ஈச்சம் பழம், என பல பழங்கள் இருந்திருக்கின்றன.

செரி காய்
 பெயர்களும் பலருக்குத் தெரிந்திருக்காது. இவற்றை எல்லாம் கதைகளில்தான் படித்திருப்போம். இப்பொழுது சில மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்றாகிவிட்டது.

நகர மயமாதலின் விளைவாக காடுகள் அழிந்து போய்விட்டன.


காடுகள், மலைகளிலிருந்து இயற்கை நமக்கு அளித்து வந்த பழ வகைகளும்; பெரிதும் அழிந்துவிட்டன.

பெலிங் பழம்

காட்டுப் பழங்களைத் தேடி ஓடிப்போக வேண்டாம்.


கிராமங்களில் கிடைக்கும் பலவித பழங்களையும், உடனுக்குடன் பிரஸ்சாக உண்டு நலமடைவோம். வீடுகளில் சிறிதளவு நிலம் இருப்போரும் பழமரங்களை நட்டு நலம்பெறலாம்.


குளிரூட்டியில் பல்நெடுங்காலமாக பேணப்பட்டு மருந்துகள் தெளிக்கப்பட்ட விற்றமின்கள் அழிந்து போன வெளிநாட்டுப் பழங்களைத் தவிர்த்து.........



.............. நம் ஊரில் சீசனில் கிடைக்கும் பழங்களை உண்டு மகிழ்வோம்.


"கொல்லையிலே கொய்யா மரம்..." என்ற நாட்டுப் பாடலும், "வில்வம்பழம் பித்தம் போக்கிடுமே பனம் பழம் பசியைத் தூண்டிடுமே" என்பவற்றையும் நினைவில் கொள்வோம்.

வில்வம் பழம்

நீரிழிவு நோயாளர்களும் தினமும் பழங்களை உண்ணும்படி அறிவுறுத்துகிறார்கள். பழங்களில் இருந்து விட்டமின்கள், தாதுப் பொருட்கள் கிடைக்கின்றன.


பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் எடை கூடாது. உடல் எடையைக் குறைக்க உதவும், மலச்சிக்கலைத் தடுக்கும்.


பெரும் குடல்புற்று நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் பழங்களுக்கு இருக்கின்றன.


"வாடா மாப்பிளே வாழைப்பழத் தோப்பிலே பொலிபோல் ஆடலாமா..."


ஆடலுடன் நிற்காமல் இயற்கை அள்ளித் தரும் பழங்களை நேரடியாகவும்,


புருட்சலட், ஜீஸ், மில்க் ஷேக், பஞ்சாமிருதமாகவும் உண்டு உடல் நலம் காப்போம்.

கோடை வெப்பத்திலிருந்து தப்புவோம்.

ஜம்பு பழம்

மரங்களை நாட்டி வளர்ப்போம். பழமுதிர்சோலைகளாக இல்லாதுபோனாலும் இருக்கும் மரங்களை அழியாது பொக்கிசமாகக் காப்போம். நலம்பெறுவோம்.


-: மாதேவி :-
0.0.0..0.0.0