Thursday, July 1, 2010

யாழ்ப்பாண மிளகாய்த் தூள்

யாழ்ப்பாண உணவுப் பொருட்கள் மிகவும் பிரபலம் பெற்றவை.
மிகவும் இனிப்பான கறுத்தக் கொழும்பு மாம்பழத்தின் சுவை சொல்லும் தரமன்று. தென்பகுதி மாம்பழம் வெறும் பச்சை நிறமாய் இருபது முப்பது ரூபாவிற்கு விற்கும். வாங்கி வாயில் வைத்தால் ஒன்றில் பச்சைத் தண்ணீர், அல்லது வாய் புளித்துப் போய்விடும். ஏனடா வாங்கினோம் என்றாகும்.

பென்னம் பெரிய குலைகளாய் விளையும் திண்ணைவேலி இரதை வாழைப்பழம் ஒரு வேளை உணவுக்கு ஒரு பழமே போதுமானதாய் இருக்கும்.

இவற்றுடன் பலாப்பழமும், யாழ் முருங்கைக்காயும் சேர்ந்துகொள்ளும். இவையெல்லாம் வெளியூர்களில் வசிக்கும்போது நினைவில் தோன்றி மறைவதில் வியப்பில்லை.

இது போன்றே யாழ் மிளகாய்த் தூளும். தரத்தில் உயரிடம் பிடித்தது. மிகவும் இலகுவான சமையல் முறைக்கு ஏற்ற தயாரிப்பு. வாசனையும் மிக்கது. பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியாகிறது. உலகெங்கும் இலங்கைத் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் உணவில் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.

மிளகாய்த் தூள் என்று இலகுவாக வாயினால் சொல்லி விடலாம்.
பைக்கற்றை உடைத்து டப்பாவில் போட்டு வைத்திருந்தால் அள்ளிக் கறியில் போட்டுவிட்டால் சரியாகிவிடும்.

இதன் தயாரிப்பில் உள்ள சிரமங்கள் எத்தனை?

குறைந்தது நாலு ஐந்து நாட்கள் எடுக்கும். யாழ்ப்பாணப் பெண்கள் இந்த விடயத்தில் மிகுந்த பொறுமைசாலிகள்தான்.

முதலில் கடைக்குச் சென்று நல்ல சிவத்த புதுச் செத்தல் மிளகாய் தேடி வாங்க வேண்டும். அத்துடன் அதற்கான மசாலாச்சரக்குப் பொருட்கள் சேகரிக்க வேண்டும்.


பின் வீட்டிற்குக் கொண்டு வந்து சூரிய பகவானை வேண்டி
"மழையைத் தராதே மழையைத் தராதே'
'நல்ல வெயிலைத் தா"
எனப் பாடி
இரு கரம் கூப்பி வணங்குங்கள்.

செத்தல் மிளகாயை எடுத்து கஞ்சல் குப்பை எல்லாம் பொறுக்கி நீக்கி,
நாலு ஐந்து தடவை இருமித் தும்மி முடித்து விடுங்கள்.

நீரில் கழுவி வட்டியில் போட்டு வடிய விட்டு வெயிலில் உலர்த்துங்கள்.


அவ்வாறே மசாலாப் பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கழுவி காயவிடுங்கள்.

கறிவேற்பிலையையும் வெயிலில் காயவிடுங்கள்.


மூன்று நான்கு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பகலில் மழை வந்தால்
ஓடிச்சென்று உள்ளே எடுத்து வைத்து
பெய்த மழையை திட்டித் தீருங்கள்.
மழைமுடிந்து சூரியன் வந்தால்
வெளியே எடுத்துவையுங்கள்.

மறுநாள் சூரியன் வருமா என ஆகாயத்தையே பார்த்துப் பார்த்து எடுத்துக் காயவிடுங்கள்.

அப்பாடா ஒருவாறு மிளகாய் மசாலாக்கள் காய்ந்து விட்டது.
அடுத்தது என்ன?
செத்தல் மிளகாயை எடுத்து
ஒன்றொன்றாய்க் காம்பை ஒடித்து
அதை மூன்று நான்கு துண்டுகளாய் வெட்டி எடுங்கள்.

தும்மி, இருமி, கண்ணீர் சிந்தி
முகம் கை எல்லாம் எரிவு வர
ஓடிச் சென்று சோப் போட்டு கை முகம் கழுவுங்கள்.

இது ஒரு நாளில் முடியாது. நறுக்கி எடுக்க இரண்டு நாள் எடுக்கும்.

இடுப்பும் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அடிக்கடி இடுப்பையும் தடவிக் கொள்ளுங்கள். ஒருவாறு வெட்டிமுடிந்து விட்டது.

முதல் நாள் இரவு எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என கவனத்தில் கொள்ளுங்கள்.

நாளை சுப முகூர்த்தம் அல்லவா? அதிகாலை மலர்ந்துவிட்டது.

பெரிய தாச்சியைக் கழுவி எடுத்து, அடுப்பில் ஏற்றி விடுங்கள். இனி வறுத்து எடுக்கும் வேலைகள் ஆரம்பம்.

முதலில் மிளகாயைப் போட்டால் கெட்டுவிடும். வீடே பற்றி எரியும். அதனால் முதலில் போட வேண்டியவர் மல்லியார்தான். இவருக்கு சூடு சுரணை குறைவு. நீண்ட நேரம் சூடு ஏற்றினால்தான் கோபம் வந்து உடைவார்.அளவாக அடுப்பைவைத்து நன்கு வறுத்துஎடுங்கள்.


அடுத்து சட்டியில் புகலிடம் மசாலாச் சரக்காருக்குத்தான்.
அவர்களை ஒன்றாகவே போட்டுக் கொள்ளலாம்.
இவர்களுக்கு விரைவில் சூடு ஏறிவிடும்.
பறக்கத் தொடங்கிவிடுவார்கள்.
பதமாய் கிளறினால்தான் உருப்படுவார்.
இல்லாதுவிட்டால் கரித் துண்டுகள்தான்.

பதமாய் வறுத்து எடுங்கள்.
ஒருவாறு அரைவேலை முடிந்துவிட்டது.

இருக்கவே இருக்கு சிகப்பு இராட்சசி. இதை நினைக்கவே பயம் வரும்.

'நீயா நானா' பார்த்திடுவோம்.

வெப்பத்தை அளவாய் வைத்து மூன்று நாலு கிளறு கிளறவே இராச்சசிக்கு கோபம் ஏறிவிடும்.

வேலையைக் காட்டத் தொடங்கிவிடுவாள்.

அச்.. அச், கொக்... கொக் மூக்கு வாயெல்லாம் எரிக்கிறாளே.

கண்ணீர்விட ஒருவாறு இறங்கி வருவாள். 'அடிமைப் பெண்ணானாளே' எனத் திரும்ப, மிகுதி நாங்கள் இருக்கிறோமே என சிரிப்பார்கள் ஓர் புறம் உள்ளவர்கள்.

"சரி சரி இருங்கடி உங்களுக்கு ஒரு வேட்டு" என்றபடியே
முதல் இராட்சசிகளை கொட்டி உலர்த்திவிட்டு
இவளுகளை எடுத்து சட்டியில் கொட்டவும்
உலர விட்டவர்கள் ஊரையே கூட்டி
அடுத்த வீட்டு கமலா அன்ரியையும்
மேல் வீட்டு அக்காவையும்
குசினி யன்னலுக்கு அழைத்து விடுவார்கள்.

"என்ன உங்கை மிளகாய் வறுகிறியளே" என குசல விசாரிப்புகள் தொடங்கிவிடும்.

"நான் சென்ற மாதந்தான் வறுத்தேன்" என்பாள் ஒருத்தி.
மற்றவளோ "நான் திரிக்க வேணும்" என அழுவாள்.

அதற்கிடையே சட்டியை நாலு தட்டு தட்ட வேண்டும்.
விரைவாக வறுபட்டு வாங்கடி எனச் சபித்தபடியே
சரக்.. சரக்தான்.

இதோ நெருங்கிவிட்டார் வெற்றிக் கம்பத்தை அடைய
ஒரே நிமிடம். ஆ... ஆ வென்று விட்டேனே.
முடிந்தது வேலை.
வெற்றி எனக்குத்தான்.

இவர்கள் எல்லாம் ஆறப் போடப் பட்டுள்ளார்கள். சாதாரண நிலைக்கு வருவதற்கு.

அதற்குள் நானும் வோஷ் எடுத்து மேக் அப் போட்டுவிடுவேனே.

எல்லோருக்கும் சின்னு ரேஸ்டியின் யாழ்ப்பாண மிளகாய்த் தூளின் இடைவேளை.

பிளீஸ் கம்பக் ஆவ்டர் வன் அவர்.

ஆமாம் வந்துவிட்டோம்.

வெல்கம் பக்.

வறுத்த பொருட்கள் யாவும் பெரிய கடுதாசிப் பக்கற்றுக்குள் அடைபடப் போவதைக் காணுங்கள். அடுத்து கிறைன்டிங் மில்லை நோக்கிய பயணம்தான். வெயிட் போட்டுக் கொடுத்து உடனே தருவீர்களா அல்லது சென்றுவிட்டு ஒரு அவரில் வரவா என்ற கேள்விதான்.

கடையெல்லாம் சுற்றிவிட்டுச் சென்று நமது 'பொக்கஷ'த்தை வாங்கிவர வேண்டும். கையில் கிடைத்ததும் எமது முகத்தில் ஒளிவட்டம் வீசுமே. அதைக் காண கண் கோடியும் வேண்டும். பிறகென்ன மகாராணி நடைதான்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்குமே என்ற சந்தோசம்தான். அந்த நடையை நீங்களும் வாழ்க்கையில் ஒரு தடவை நடந்துதான் பாருங்களேன்.

வீட்டுக்கு வந்தாயிற்று.

சுளகு எடுத்து கடதாசிப் பேப்பரை விரித்து, கொண்டு வந்த 'பொக்கிஷத்தை'க் கொட்டி ஆறவிட்டு விட்டு மதியச் சமையலுக்கு தயார் செய்ய வேண்டியதுதான்.

சமையல் முடிய தூளாரும் ஆறியிருப்பார்.
எடுத்து அரிதட்டில் இட்டு
அரித்து இருமித்...தும்மி...
கட்டையைக் கொட்டிவிட்டு
தூளாரை காற்றுப்போகாத பெரியபோத்தல்களில் அடைத்து வைக்க வேண்டியதுதான்.


அடைத்தாயிற்று!

அப்படியே சென்று தயாரிப்பாளர் குளியல் அடித்துவிட்டு வருவதுடன்
முடிவுக்கு வந்துவிடுவார் யாழ்ப்பாண மிளகாய்த் தூளார்.

மீண்டும் மூன்று மாதத்தில் பயணத்தை ஆரம்பிப்பார்.

தயாரிப்புக்கு சேகரித்தவை

செத்தல் மிளகாய் 1 கிலோ
மல்லி 1 கிலோ
பெருஞ்சீரகம் 100 கிராம்
சின்னச் சீரகம் 100 கிராம்
மிளகு 100 கிராம்
வெந்தயம் 50 கிராம்
கறுவா, இறைச்சிச் சரக்கு பைக்கற் சிறியது 1
மஞ்சள் 5-6 பல்லு
கறிவேற்பிலை 1 கொத்து

சிலர் குளம்பு தடிப்பாக வரவேண்டும் என்பதற்காக உழுந்து, அரிசி வறுத்துச் சேர்ப்பார்கள்.

ஆனால் இது நீண்ட நாட்களுக்கு பழுதடையாது இருக்குமா என்பது கேள்விக் குறி.

நீங்கள் எப்போ சேகரிக்கப் போகிறீர்கள்?

மாதேவி

Thursday, June 10, 2010

பைவ் ஸ்டார் சலட்


ஒரு முறை பைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவருந்தும்போது சலட் ஒன்று பரிமாறினார்கள். பிரியாணியுடன் சாப்பிடும்போது மிகுந்த சுவையைத் தந்தது. என்ன முறையில் தயாரித்து இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.

அதே போன்று தயாரித்துப் பார்த்தால் என்ன எனத் தோன்றியதில் நான் தயாரித்த இலகுவான சலட் முறை இது. ஆனால் சுவையில் பைப் ஸ்டார் தயாரிப்புக்கு குறைந்ததல்ல.

கத்தரிக்காய், அன்னாசி, பச்சைமிளகாய், வெங்காயம், கலந்து செய்து கொண்டேன். கத்தரிக்காய், அன்னாசி அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஏற்றதாக இருக்காது.

கத்தரிக்காயை பல வழிகளில் சமைக்கலாம். சட்னி, குழம்பு, பால்கறி, பொரியல், கூட்டு, அச்சாறு, தொக்கு, எண்ணெய்க் கத்தரிக்கறி, கத்தரிக்காய் சாதம் எனத் தொடரும்.

கத்தரி

பிரிஞ்சால் எக் பிளான்ட் (Brinjal, Eggplant) என அழைக்கப்படும். நிறைந்த பொட்டாசியத்தையும் நார்ச் சத்தையும், நிறைந்த நீரையும் கொண்டது. கலோரி குறைந்த உணவாகும்.



100 கிராமில்
காபோஹைட்ரேட் 17.8கி, நார்ப்பொருள் 4.9 கி, கலோரி 24, புரதம் 1.2கி, பொட்டாசியம் 618 மிகி, கல்சியம் 15மி.கி, கொழுப்பு 0.2 மி;கி, விட்டமின் சீ 5 மி.கி, இரும்பு 0.4 மிகி,

Solnaceae குடும்பத்தைச் சேர்ந்தது. தாவரவியல் பெயர் Solanun melangena ஆகும். கத்தரியில் பல இனங்கள் உண்டு.


இதன் பூர்வீகம் எமது பிரதேசங்கள் எனப் பெருமை கொள்ளலாம். இந்தியா, நேபாளம், பங்காள தேசம், பாகிஸ்தான், இலங்கை என்கிறார்கள்.

அன்னாசி

அன்னாசி பழவகைகளில் வாழைப் பழத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது. அனானஸ், பினா எனவும் அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Ananus Comosus.


பூர்வீகம் பிரேஸில் ஆகும். 1943 ல் கொலம்பஸ் Guadaloupe தீவிலிருந்து ஸ்பெயின் தேசத்திற்கு எடுத்துச் சென்றார். அதன் சுவை பிடிபட்டதும் அது உலகெங்கும் பரவிவிட்டது.

100கிராமில்
கலோரி 46, கல்சியம் 18மி.கி, கரோட்டின் 54 மைக்கிறோ கிராம்,
விற்றமின் சீ 40மி.கி, இரும்பு 0.5மி.கி, கொழுப்பு 0.2 கிராம், புரதம் 0.5 கிராம்,

தேவையானவை


கத்தரிக்காய் - 2
அன்னாசித் துண்டுகள் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தேசிச்சாறு - 1 ரீ ஸ்பூன்
சீனி - ½ ரீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மிளகாய்ப் பொடி - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி -¼ ரீ ஸ்பூன்
தனியாப் பொடி - ¼ ரீ ஸ்பூன்
ஓயில் - 2-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை


கத்தரியை 2 அங்குல நீளம், ½ அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி கலந்து ஓயிலில் பிறவுன் நிறம் வரும்வரை பொரித்து எடுங்கள்.

ரிசூ பேப்பரில் போட்டு ஓயிலை வடிய விடுங்கள்.

வெங்காயத்தை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

மிளகாயை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

தேசிச்சாறில், உப்பு, சீனி கலந்து கரைத்து வையுங்கள். சலட் போலில் பொரித்த கத்தரிக்காய், அன்னாசித் துண்டுகள், வெங்காயம், மிளகாய், கலந்துவிடுங்கள்.

எலுமிச்சம் சாறை ஊற்றி முள்ளுக் கரண்டியால் கலந்து பரிமாறுங்கள்.

அன்னாசி, கத்தரிக்காய் பொரித்த வாசத்துடன் சலட் சுவை கொடுக்கும்.

(பிரியாணி, சாதம், புட்டு, தோசைக்கும் சுவை தரும்.)

மாதேவி

Sunday, May 23, 2010

தக்காளி தேங்காய் பால் சொதி + ரசச் சொதி



தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களுமே பயன் தர வல்லன. பாம் (Palm) இனத்தைச் சார்ந்த இதன் தாவரப் பெயர் Cocos Nucifera என்பதாகும்.

coconut எனப் பெரிடப்பட்ட போதும் உண்மையில் Nut வகையைச் சார்ந்தது அல்ல. தேங்காய் நாருடன்(இலங்கையில் பொச்சு என்பர்) அது பழம் (Fruit) எனலாம். உரித்த தேங்காயை (Seed) விதை எனலாம்.


உலகளாவிய ரீதியில் தேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, இந்தியா ஆகியன முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. பிரேசிலை அடுத்து இலங்கை 5ம் இடத்தில் இருக்கிறது.

தெங்கு + காய் = தேங்காய் என அழைப்பர்.

இது வெப்பவலயப்பிரதேசங்களில் நன்கு வளரும்.
இலங்கை, கேரளாச் சமையல்களில் தேங்காய்க்கு முக்கியத்துவம் உண்டு.

தேங்காயைத்துருவி பால் எடுத்து கறி சமைப்பது இலங்கையர் வழக்கம். தேங்காய் அரைத்த கூட்டு இட்டும் சமைப்பார்கள்.

100 கிறாம் தேங்காயில் போசனை அளவு

கொழுப்பு 33.49 சதவிகிதம்
மாப்பொருள் 15.23 கிறாம்
புரதம் 3.39 கிறாம்
நார்ப் பொருள் 9 கிறாம்
பொஸ்பரஸ் 113 மிகிராம்
இரும்பு 2.43 மிகிராம்
பொட்டசியம் 356 மிகிராம்
மக்னீசியம் 32 மிகிராம்
B1, B2, B6, Folate ஆகிய விற்றமின்கள் குறைந்த அளவில் உண்டு
கல்சியம் 14 மிகிராம்

தேங்காய், தேங்காய்ப் பால் இரண்டிலும் கொலஸ்டரோல் நோய்க்கு அடிப்படையான கொழுப்பு இருப்பது தெரிந்ததே.

தேங்காயில் உள்ள கொழுப்பில் பெரும் பகுதி நிரம்பிய கொழுப்பு அமிலமாகும் எனவே இது நல்ல கொழுப்பு அல்ல.

ஆயினும் இது மீடியம் செயின் பட்டி அசிட் என்பதால் ஆபத்து அதிகம் இல்லை என மாற்றுக் கருத்தும் உண்டு.

எனவே இடையிடையே செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் நல்லது என்ற கருத்தும் உண்டு. நோயை எதிர்க்கும் சக்தியும் தேங்காய்ப் பாலுக்கு உண்டு என்கிறார்கள்.

முதிர்மையைத் தவிர்ப்பதற்கும், முடி வளர்வதற்கும் உகந்தது எனக் கருதப்படுகிறது. அதனால்தான் கேரளப் பெண்கள் அழகாகவும் கூந்தல் நீளமாகவும் இருக்கிறார்களோ?

சாதம், இடியாப்பம், புட்டு, உணவுகளுக்கு தொன்று தொட்டே தேங்காயைப் பிழிந்து பாலெடுத்து குழம்பு,சொதி செய்வார்கள்.
இன்று பாணுக்கும் சொதி என்றாகிவிட்டது.

பாலுடன் இலைவகைகள், மரக்கறி வகைகள் சேர்த்து செய்யும்போது சத்துக்களுடன் வித்தியாசமான சுவையும் கிடைக்கும்.

வெளிநாட்டுச் சொதியா!! கிறேவி?


வெளிநாட்டினர் கிறேவி எனப் பெயரிட்டு வேறுவிதங்களில் தயாரித்துக் கொள்வர். அவர்கள் தேங்காய்க்கு எங்கே போவது? இப்பொழுது தமிழர் வாழும் இடங்களில் தேங்காய் அதிக விலையில் கிடைக்கிறது.தேங்காய்ப் பாலும் கிடைக்கிறது.

மரக்கறிகள் இறைச்சியிலிருந்து கிறேவி செய்து கொள்வார்கள்.
கோர்ன் பிளவர் சோஸ், பிஸ் சோஸ், சிக்கன் சோஸ், சோயா சோஸ், டொமடோ சோஸ், எக் கிறெவி, கிறீம் கிறேவி, அனியன் கிறேவி, வைட் கிறேவி எனப் பலவாறு செய்து எடுத்து நூடில்ஸ், பேஸ்டா,மக்கரோணி உணவுகளுடன் பரிமாறுகிறார்கள்.

நாவுக்குச் சுவையான இரு சொதி வகைகள் இன்றைய பதிவில் பார்க்கலாம்.

இடியப்பதிற்கு பால் சொதிதான் சூப்பர்.

சொதி வகைகள் பற்றிய முன்னைய எனது பதிவுகள் காண



தேங்காய்ப் பாலில் சர்க்கரை கலந்தெடுத்து இடியப்பம் புட்டுக்கு ஊற்றிச் சாப்பிடுவார்கள்.

அதில் பழ வகைகள் சேர்த்து பழப் பாயாசமும் செய்து கொள்ளலாம்.

தக்காளிச் சொதி
தேவையான பொருட்கள் -

பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சின்ன வெங்காயம் - 7-8
தக்காளி - 2
கறிவேற்பிலை - 2 இலைகள்
ரம்பை - 1 துண்டு
சோம்பு - ¼ ரீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால் - சிறிதளவு
தேங்காய்ப்பால் - 2 கப்

பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் போட்டு கறிவேற்பிலை, ரம்பை, சோம்பு, உப்பு, மஞ்சள் சேருங்கள்.

சிறிது தண்ணீர் விட்டு அவியுங்கள். அவிந்த பின் தேங்காய்ப் பால் ஊற்றி கலக்கிவிடுங்கள்.

பால்கொதிக்க ஆரம்பிக்கும்போதே கலக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால் ஆடைகட்டி திரண்டுவிடும்.

இரண்டு மூன்று கொதிவிட்டு இடையிடையே கலக்கி இறக்கிவிடுங்கள்.

தக்காளி,பச்சைமிளகாய் வாசத்துடன் சொதி தயாராகிவிட்டது.

தக்காளி தேங்காய்ப்பால் ரசச் சொதி

தேவையான பொருட்கள் -

தக்காளி- 2
பூண்டு – 4
மிளகு- ¼ தேக்கரண்டி
மல்லி -1 தேக்கரண்டி
செத்தல்மிளகாய்; -1
சின்ன வெங்காயம் - 5-6
தக்காளி - 2
கறிவேற்பிலை - 2 இலைகள்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால் - சிறிதளவு
தேசிச்சாறு – ½ தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 2 கப்
செய்முறை -

வெங்காயம், தக்காளியை வெட்டி வையுங்கள்.

மிளகு, தனியா, செத்தல்பொடிபண்ணி எடுங்கள்.

பூண்டைமுழுதாய்த் தட்டி எடுத்து வையுங்கள்.

இவை அனைத்தையும் பாத்திரத்தில் போட்டு கறிவேற்பிலை, உப்பு, மஞ்சள் சேருங்கள்.

சிறிது தண்ணீர் விட்டு அவியுங்கள்.

அவிந்த பின் தேங்காய்ப் பால் ஊற்றி கலக்கிவிடுங்கள்.

பால்கொதிக்க ஆரம்பிக்கும்போதே கலக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால்
ஆடைகட்டி திரண்டுவிடும்.
அடிக்கடி கலக்குங்கள்.

இரண்டு மூன்று கொதிவிட்டு இடையிடையே கலக்கி இறக்கிவிடுங்கள்.

தேசிச்சாறு விட்டுக்கலந்து விடுங்கள்.

உள்ளி, மிளகு, தேங்காய்ப்பால் வாசத்துடன் மூக்கைக் கிளறி சாப்பிட அழைக்கும்.

குறிப்புகள் :–
  • தக்காளி அலர்ஜி இருந்தால் தக்காளியைத் தவிர்த்துச் செய்யுங்கள். தேசிச்சாறு சற்றுக் கூடுதலாகச் சேருங்கள்.
  • விரும்பினால் சொதிவைத்து எடுத்தபின் தாளித்துக்கொட்டலாம்.
மாதேவி

0.0.0.0.0.0