Saturday, October 10, 2009

கீரை, கீரை- டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச் சாறு

உணவில் கீரை இலையை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடலுக்கு இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும், தாமிரம் கல்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்களும் தாராளமாகக் கிடைக்கும்.

இதனால் உடலும் நோய் எதிர்புச் சக்தி கொண்டதாக இருக்கும். இரத்த சோகை ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

நாளந்தம் வெவ்வேறு வகையான இலை வகைகளை சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது. இப்பொழுது நகரங்களிலும் வண்டில்களில் விதவிதமான இலைக் கீரைகள் கூவிக் கூவி விற்பனையாகின்றன.


எமது முன்னோர் கீரையின் முக்கியத்துவத்தை அறிந்துதான் வீட்டைச் சுற்றிவரவும் பலவிதமான கீரை வகைகளை நாட்டி வைத்தனர். நாள் வீதம் அவற்றைச் சேர்த்து உண்டு நீண்ட காலம் நலமே வாழ்ந்தும் வந்தனர்.

சில கீரைவகைள் மருத்துவ உணவுகளாகவும் விளங்குகின்றன.

மருத்துவத்தில்


துளசி இலை, கற்பூரவல்லி, வெற்றிலை, என்பன சளித்தொல்லையை நீக்கும். நேரடியாகப் பறித்து உண்ணும் மருந்தாகவும் விளங்குகின்றன. சமையலிலும் இடம் பிடித்துள்ளன. அடை, சப்பாத்தி, கஞ்சி உணவுகளில் கலந்தும் சமைக்கலாம்.

துளசி இலைச் சாறு பருகுவதால் பன்றிக் காய்ச்சலைக் குணமாக்க முடியுமாம்.


புளியம் இலை, வேப்பம் இலையில் குருத்தை எடுத்து சட்னி செய்து கொள்ளலாம்.

பானமாக

அறுகம் புல் யூசாகவும் புல்லைக் காய வைத்து எடுத்து மல்லியுடன் கலந்து பவுடர் செய்து கோப்பிக்குப் பதிலாகவும் அருந்திக் கொள்வார்கள்.

வெங்காயத் தாரை, இஞ்சித் தாரை, கற்றாளை, எலுமிச்சம் இலை, தோடை இலை, கறுவா இலை, போன்ற இன்னோரின்ன இலை வகைகளும் சமையலில் இடம் பெறுகின்றன.

இறைச்சிக் கறிபோல


பனங்குருத்து, தென்னங் குருத்து, என்பவற்றிலும் கறி செய்து கொள்ளலாம். இறைச்சிக் கறிபோன்று இருக்கும்.

இறைச்சியை மெதுமையாக்க

ஆட்டிறைச்சி வெட்டியவுடன் மெதுமையாக இருப்பதற்காக பப்பாளி இலை, பனை ஓலை என்பவற்றில் சுற்றி வைத்திருப்பர். பப்பாளி இலை மற்றும் காய் என்பன இறைச்சியை மெதுமை அடையச் செய்யும் என்பர்.

டெங்கு, பன்றிக் காய்ச்சல்கள்

அண்மையில் பப்பாளி இலைச் சாறு டெங்குக் காச்சலின் போது வெண்குருதி சிறுதுணிக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் என இலங்கை மருத்துவர்கள் சிலர் அண்மையில் ஆய்வு செய்து கண்டறிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே போல குஜராத் ஆயுர்வேத பலகலைக்கழக ஆய்வு பன்றிக் காய்சலுக்கு காரணமான வைரசையும் மற்றெந்த வைரஸ் பாதிப்பையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் துளசிக்கு இருப்பதாகக் கூறுகிறது.

விருந்தோம்ப


ஆதிகாலம் தொட்டு வாழை இலை, தாமரை இலை விருந்து ஓம்பினர். பலா இலை, ஆலம் இலை, பன்னீர் இலை என்பவற்றில் தொன்னை செய்து உணவு உண்டனர்.

சமையலில் உதவியாக

பூவரசம் இலையில் வடை, அரியதரம் தட்டிப் பொரிப்பர்.

சிற்றுண்டி வகைகள் காயாமல் இருக்க மூடல்ஓலைப் பெட்டியின் அடியில் இவ்விலைகளைப் பரப்பி அதன் மேல் உணவை வைத்து மூடி வைப்பர். இலை வாசம் சிற்றுண்டியிலும் பரவி சுவையைத் தரும்.

இட்லி அவிக்க முள்முருக்கம் இலையைப் பயன்படுத்தினர். இட்லி மென்மை அடைவதுடன் இலையின் மணமும் கூடி வரும்.

யப்பானியர் தேயிலை இலையை பச்சையாகவே அருந்தும் வழக்கம் உள்ளவர்கள். அவர்களது நீண்ட வாழ்க்கைக்கு இதுவும் ஒரு காரணம் என்பர். இப்பொழுது உலகெங்கும் கிறீன் ரீயின் புகழ் பரவி வருவது தெரிந்ததே.

அழகு சாதனமாக

தற்பொழுது ஹேர்பல் அழகு சாதனமாகவும், மருத்துவ குணமுடையதாகவும் பிரசித்தம் உள்ளதை எல்லோரும் அறிந்து உள்ளீர்கள்தானே.

இராமாயணத்தில் அனுமார் சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்ததாக கதை உண்டு. இலைகளும் அவற்றின் பயன்களும் அறிந்த நாம் அவற்றை கூடுதலாக உணவுகளில் சேர்த்து உண்டு ஆரோக்கியமாக வாழலாமே.

இன்று முருங்கையிலை விருந்து


முருங்கை இலை 100 கிறாமில் -
கலோரி 92, புரதம் 6.7, கொழுப்பு 1.7, கல்சியம் 440, இரும்பு 7, கரட்டீன் 3600, விட்டமின் சீ 220 என சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

முருங்கைக் கீரை பால் சொதி

முருங்கைக் கீரை – 1 கப்
சின்ன வெங்காயம் - 6,7
இளம் சிவப்பான பச்சை மிளகாய் - 4 (பச்சை நிறத்துடைய மிளகாயைத் தவிர்த்து இளம் சிவப்பு மிளகாய் சேர்துக் கொண்டதும் முருங்கை இலையை எடுத்துச் சாப்பிடும் போது மிளகாயை இலகுவாக எடுத்து அகற்றலாம்.)
2தேங்காய்ப் பால் - 2 கப்
தண்ணீர் - ¼ கப்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால்
தேசிச்சாறு – 1 தேக்கரண்டி

தாளிக்க விரும்பினால்

கடுகு – ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – ½ ரீ ஸ்பூன்

இலையைக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நீளமாக வெட்டி வையுங்கள்.

பச்சை மிளகாய்களை வாயைக் கீறிவிடுங்கள்.

பாத்திரத்தில் இவற்றைப் போட்டு உப்பிட்டு தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடங்கள் இலை அவியும் வரை அவிய விடுங்கள்.

அவிந்ததும் தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கிவிடுங்கள். பால் திரளாமல் இருக்க சில துளிகள் எலுமிச்சம் சாறு சேர்த்து கலக்கி கொதிக்கவிடுங்கள்.

அடிக்கடி கலக்க வேண்டும்.

கொதித்துவர இறக்கி கோப்பையில் ஊற்றி மீதி தேசிச் சாறை கலந்து கலக்கி விடுங்கள்.


முருங்கைக் கீரை வாசத்துடன் தேங்காய்ப் பாலின் மணமும் சேர்ந்து உண்ண அழைக்கும்.

தாளிக்க விரும்பினால் தாளித்துக் கொட்டி கலக்கிவிடுங்கள்.

சாதம், பிட்டு, இடியாப்பம், பாண் ஆகியவற்றிற்கு ஊற்றிச் சாப்பிட அருமையாக இருக்கும்.

விரும்பினால் பூண்டு, மிளகு தட்டிப் போட்டுக் கொண்டால் சற்று மாறுதலான சுவை கிடைக்கும்.

அகத்தி, முல்லை இலை, முசுட்டை இலை, கீரைத் தண்டு, தூதுவளை இலை, பொன்னாங்கண்ணி இலை மணத்தக்காளி இலை என்பவற்றிலும் இது போன்ற சொதி செய்து கொள்ளலாம்.

மீன் சொதியிலும் கலந்து செய்து கொள்ளலாம்.

மாதேவி

10 comments:

 1. மாதேவி வழக்கம் போல் உங்கள் கிராமத்து கை பக்குவம் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.
  கொடுத்துள்ள அனைத்து தகவலும் மிக அருமை.

  ReplyDelete
 2. பதிவுகள் அருமை அதுவும் வீடு விட்டு வெளியில் இருக்கும் எமக்கு நாவூறும் பதிவுகள் இவை.

  ReplyDelete
 3. நன்றி Jaleela. தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கம்தான் எழுத உற்சாகம் தருகிறது.

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி பனங்காற்று. ஊரின் பழைய ஞாபகங்களை பதிந்து வைப்பது எனக்கும் சந்தோசத்தைத் தருகிறது.

  ReplyDelete
 5. கிராமத்து சமையலில் கலக்குறீங்க மாதேவி.அருமையாயிருக்கு உங்கள் குறிப்புகள்.வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 6. வாழ்த்துக்களுக்கு நன்றி Mrs.Menagasathia

  ReplyDelete
 7. மாதேவி
  எப்படிக் கீரே?கீரையை நல்லா அலசி ஆஞ்சு தந்துருக்கீங்க...அருமையான பாத்தி...சாரி சாரி!, அருமையான பதிவு

  ReplyDelete
 8. நன்றி goma.சரியாகத்தான் சொன்னீர்கள்.
  பாத்தியில் விளைந்தால்தானே சட்டியில் வரும்.

  ReplyDelete
 9. கலக்கல் இடுகை மாதேவி! புதிதாக இருக்கிறது இந்த கீரை செய்முறை!

  /பப்பாளி இலை மற்றும் காய் என்பன இறைச்சியை மெதுமை அடையச் செய்யும் என்பர்./

  இதுவும் புதிய தகவல்.

  ReplyDelete
 10. உங்கள் கருத்துக்கள் உற்சாக மூட்டுகின்றன. நன்றி சந்தனமுல்லை.

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்