Wednesday, January 12, 2011

‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’

காலையில் எழுந்ததும் பழைய சோற்றுத் தண்ணீரை பானை மூடியில் விட்டு குடித்துப் பழகியவர்கள் எமது முன்னோர்.

ஆரம்பத்தில் தெருச் சந்தியில் அண்டாவை வைத்து தேத்தண்ணி போட்டு கொண்டு வந்து வீடு வீடாகக் தட்டிக் கூப்பிட்டு கோப்பைகளில் ஊற்றி குடிக்கப் பழக்கிக் கொடுத்துத்தான் தேநீரைக் குடிக்கப் பழக்கினார்களாம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்.

பிரிட்டிஷ் மகாராணியின் சின்னம் பதித்த தேநீர் குவளை

இது என்ன கசக்கிறதே என முகம் சுளித்தனர் பிற்பாடு குடிக்கக் குடிக்கப் பழகி இப்போது ஒரு நாளைக்கு 5- 6 தடவைகள் குடிப்போரும் இருக்கவே செய்கிறார்கள்.        

‘தேத்தண்ணி போட்டாச்சே’ இக் கேள்வியுடன் தான் இலங்கையின் காலைப் பொழுதுகள் விடிவிற்கு வரும். அத்துடன் இடையிடையே ‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’ என்ற கேள்விகளும் வீடுகளில் தொடரும். ‘கஹட்ட’, ‘சாயா’, ‘பிளேன் ரீ’ எனப்பலவாறு அழைப்பர்.

தேத்தண்ணி குடிக்க வாறீங்களா?

வெறும் தேத்தண்ணி, பசுப்பால் தேத்தண்ணி, ரின்பால் தேத்தண்ணி, பால் பவுடர் தேத்தண்ணி, என இன்னும் பலவும் தயாராகும்.

கொழுத்தும் வெயிலில் கூட விருந்தாளிகளை வரவேற்று “தேத்தண்ணி குடியுங்கோவன்” என இனிக்க உபசரித்து தேநீர் போட்டு வழங்குவார்கள்.

இந்தியர்கள் பால் காப்பிக்கு அடிமையானது போல இலங்கையர் தேநீருக்கு சலாம் போடுவார்கள்.காப்பியைவிட ரீயில் காபைனின் செறிவு கிட்டத்தட்ட அரைவாசி குறைவாக உள்ளமை தேநீரின் நன்மையாகும்.

தேயிலை பயரிடப்படும் இடங்கள்

முதன் முதல் 1824 தேயிலைச் செடி பிரிட்டிஷசாரால் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு ரோயல் பொட்டனிக்கல் கார்டன் பேரதெனியாவில் நாட்டப்பட்டது. 1867ல் ஜேம்ஸ் ரெயிலரால் தொழிற்சாலை அறிமுகப்படுத்தப்பட்டது. லுணகந்தவில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் பரவின.



உலகம் பூராவும் பிரபலமானது இலங்கைத் தேயிலை. சிலோன் ரீ, பிளக் ரீ, வைற் சில்வர் ரீ, என தயாரிக்கப்பட்டது. இப்பொழுது பலவித ப்ளேவர்களிலும் கிடைக்கிறது. தேயிலையின் தரம் பயிரிடப்படும் இடத்தின் உயரத்தையும் கால நிலையையும் பொறுத்து அமையும். இலங்கையில் ஆறு இடங்களில் தேயிலை பயிரிடப்படுகிறது. காலி, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, ஊவா, டிம்புல்ல


தேயிலைக்குப் பெயர்பெற்ற நுவரெலியாவின் ஒரு  தேயிலைத் தோட்டம்

1500 மீற்றருக்கு மேல் நன்கு வளரும் தேயிலை. நுவரெலியாத் தேயிலை 6000 அடிக்கு மேல் வளர்வதால் சிறந்ததாக இருக்கும்.

ஆரம்பத்தில் தேயிலை இலை மருத்துவமாக பாவிக்கப்பட்டது. ஆதிதொட்டு பல இலைவகைகள் மருந்தாக உபயோகிக்கப்பட்டன. தேங்காய்ப்பூக் கீரை, கொத்தமல்லி, கற்பூரவல்லி, தூதுவளை, முடக்கொத்தான். மணத்தக்காளி, பொன்னாங்காணி போன்ற பலவும் நோயுற்ற வேளைஅவித்துக் குடிப்பார்கள். பசும் இலைகள் புதினா, கொத்தமல்லி,வெற்றிலை, துளசியும் அடங்கும்.

சீனாவின் பேரரசர் சென்னா முதல் முதலாக தேயிலையின் ருசியைக் கண்டு பிடித்தவராவார். குடிப்பதற்காக நீரைச் சுட வைக்கும்போது காய்ந்த தேயிலை இலை தண்ணீரில் விழுந்து தண்ணீரின் நிறம் மாற்றமடைந்தது. அந்த நீரைக் குடித்தபின் மிகுந்த புத்துணர்ச்சி கொடுத்தது. அவ்வாறு பிறந்ததுதான் தேநீர்.

சீனர்கள் தேநீர் தயாரிப்பதை ஒரு கலையாகவே செய்கிறார்கள். தயாரிக்கும் இடம் பாத்திரங்கள் யாவும் சுத்திகரிக்கப்பட்டு மிகவும் அழகுற இருக்கும். மிகவும் பக்குவமாக நிதானத்துடன் தயாரிப்பார்கள்.

இலங்கை ரீயின் பின்னணியில் மலையகக் கண்ணீரும் பல கதைகள் கூறும் என்பதை மறக்க முடியாது.

உறையும் குளிரில் உழைக்கும் இவர்களின் கண்ணீர் தேநீர் ஆகிறதா?

தேநீருக்கும் எமக்குமான உறவு சிறிய வயதில் ஆரம்பிக்கிறது. காய்ச்சல் வந்தால் 2-3 நாட்களுக்கு சாப்பாடுகிடையாது வெறும் தேத்தண்ணி குடிப்பதுதான் வழக்கமாக இருந்தது. அந்நாளில் பாடசாலை சென்றால் வீட்டிலிருந்து தேநீர் தயாரித்து எடுத்துவருவார்கள் எமது பாட்டிமார்.   காச்சல் விட்டபின் மொறுமொறு என இருக்கும் ரோஸ்பாணை தேநீருடன் தொட்டுச் சாப்பிடக்கொடுப்பர். மறுநாள்தான்; அப்பம் சோறு கிடைக்கும்.

ஆமணக்கு எண்ணை பேதி குடித்த அனுபவம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா?  அந்நாள்முளுவதும் பீளேன் ரீ மட்டும் குடிப்பார்கள். காலை மதிய உணவு ஒன்றும் கிடையாது.

தேயிலை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. தடிமன் வந்த நேரம் தேயிலையை சுடுநீரில் போட்டு கை வைக்கும் சூட்டுடன் அள்ளியெடுத்து முகத்தில் ஊற்றிக் கழுவுவார்கள். சுடச்சுட ஊற்றிக் கழுவுவதால் சளி நீங்கிச் சுகம் கிடைக்கும்.

மூக்கடைப்பு இருக்கும்போது தேயிலையைக் கொதி நீரில் போட்டு ஆவி பிடிப்பார்கள்.

சர்க்கரை, பால்சேர்க்காத ரீ குடிப்பது உடல் நலத்திற்குச் சிறந்தது எடையையும் அதிகரிக்காது. 

அன்ரிஓக்சிடனற் (Antioxidant) இருப்பதால் கான்சருக்கு எதிரானது. சூலகப் புற்றுநோய்கான சாத்தியத்தைக் குறைக்கும். கொலஸ்டரோல், பிளட் பிரசரைக் குறைக்கும். தடிமன் தொற்றுக்கும் எதிரானது என்றும் சொல்கிறார்கள்.
 

கிறீன் ரீ பற்றி இப்பொழுது அதிகம் பேசப்படுகிறது. சீனர்களின் பாரம்பரிய பானமான இது பல மருத்துவக் குணங்களை கொண்டது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்கள், இருதய நோய்களுக்கு எதிரானது. கெட்ட கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதன் மூலம் இருதய நோய்களைக் குறைக்கிறது எனத் தெரிகிறது. எடை குறைப்பிற்கும் நல்லது என்கிறார்கள்.

பலவித பிளேவர்களிலும் ரீ பாக்ஸ் கிடைக்கிறது. ஒரேன்ஜ், லெமன், மொறாக்கன் மின்ற், றம், இவற்றின் விலைகள் சற்று அதிகமாக இருக்கும். வாங்கினால் ஓரிரு இன பைக்கற்தான் முடியுமட்டும் தொடர்ந்து யூஸ் செய்ய வேண்டியதாய் வரும்.

சாதா தேயிலையுடன் ஒரு நேரத்திற்கு ஒரு சுவையாக தயாரித்து வீட்டில் உள்ளோரையும் அசத்தலாம். குளிருக்கு இதமாகவும் அருந்தலாம்.

லெமென் ரீ, ஆரேஞ் ரீ,

ரீயைத் தயாரித்த பின் குடிக்கும் அளவான சூட்டில் சீனி கலக்கியபின் சில துளி பழச் சாற்றை மேலே விட்டு சேர்த்து அருந்தலாம்.



கறுவா ரீ

தேயிலையுடன் கறுவாவைப் போட்டு சுடுநீர் ஊற்றி மூடி போட்டு வைத்து  வடித்தெடுத்து சீனி சேர்த்து குடிக்கலாம்.

கராம்பு ரீ

கராம்பை லேசாகத் தட்டி ரீயுடன் போட்டு மூடி வைத்து எடுத்தால் சற்றுக் காரமான ரீ கிடைக்கும்.

ஏலம், கறுவா, இஞ்சி

ஏலம் ரீ

வாசமான  கமகம ஏலம் ரீ இதே போலத் தயாரிக்கலாம். இந்த ரீ பசியைத் தூண்டும் என்பார்கள்.

வனிலா ரீ

வனிலா ப்ளேவர் விட்டும் தயாரிப்பார்கள் சிலர்.

ஜஸ் ரீ

தேநீரைத்தயாரித்து ஆற குளிரவைத்தெடுத்து ஜஸ் கட்டிகள் போட்டு வெப்பத்துக்கு குடிக்க இதமாய் இருக்கும்.

இஞ்சி ரீ

சிறிய இஞ்சித் துண்டைத் தோல் நீக்கி கழுவி எடுத்து தட்டி தேயிலைத் தூள் போட்டுகொதிநீர் விட்டு முடிவைத்து வடித்தெடுப்பர். இது வயிற்றுப் போக்கு, சத்தி, சமிபாடடையாமையைத் தடுக்கும் என்பர்.

மசாலா ரீ

கராம்பு 1, ஏலம் 1, பட்டை ஒரு துண்டு கலந்து ரீயுடன் போட்டு குடிக்கலாம். இத்துடன் பாலும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஏலம், மிளகு, பட்டை, கராம்பு, இஞ்சி, திப்பலி, சுக்கு, பெரும்சீரகம் பொடியாக தேநீருடன் கலந்து இருமலுக்குக் குடிப்பார்கள்.



கிறீன் ரீ, பாவற்காய் டயபற்றிஸ் ரீ,  ஹேபல் ரீ, வல்லாரை ரீ எனப் பலவும்
பைக்கற்களில் கிடைக்கின்றன.

மாதேவி

Wednesday, December 8, 2010

முக்காற் பணத்தில் முழு விருந்து சுண்டைக்காய்

சுண்டைக் காய்  செடி இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு வகைக் கத்தரியாகும். கத்தரியில் பல வகைகள் உண்டு. Brinjal, Eggpalnt எனவும் அழைப்பர். தாவரவியல் பெயர் Solnum melongena ஆகும். Eggplant bush, Garden egg, Mad apple, Aubergine போன்றவையும் வேறு பெயர்கள்.


வெள்ளை நிறத்தில் கட்டையாக குண்டாக ஒரு வகை. கத்தரிப்பூ கலரில் நீண்டதாக இன்னொருவகை. இதைவிட கண்டங் கத்தரி என்பது சிறியதாக வெள்ளை மஞ்சள் நிறங்களில் இருக்கும். வட்டுக் கத்தரி பச்சை நிறத்தில் வெள்ளைக் கோடுகள் பூசியது போல பல்ப் வடிவில் இருக்கும்.


மிகவும் சிறியது சுண்டைக் கத்தரிக்காய்கள். Turkey berry. Devil's Fig, Prickly Nightshade, Shoo-shoo Bush, Wild Eggplant, Pea Eggplantஎனவும் சொல்வார்களாம்.
 

தாவரவியல் பெயர் Solanum torvum.
 

பெரிய இலையுடைய மரத்தில் கொத்தாய் வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாய் பச்சை நிறத்தில் பட்டாணி போன்று இருக்கும்.


பறவைகள் உண்ணும்போது பரம்பலால் இயற்கையாகவே வளரக் கூடிய தாவரம் இது. இரண்டு மூன்று மீற்றர் உயரம் வரை  வளரும். சொர சொரப்பாக இருக்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் காரணம் அவற்றின் மீதிருக்கும் நுண்ணிய வெள்ளை தும்புகளாகும். இரண்டு வருடம் வரை பலன் கொடுக்கக் கூடியது.

பச்சை நிறத்தில் உள்ள காய்கள் கனியும்போது மஞ்சள் நிறமாக மாறும்.


இது புளொரிடா, தெற்கு அலபாமா ஆகிய இடங்களைச் சார்ந்ததாகும். அங்கிருந்தே ஆபிரிக்கா. அவுஸ்திரேலியா, ஆசியா எனப் பரந்தது.

'சுண்டங்காய் காற் பணம், சுமை கூலி முக்காற் பணம்' என்பார்கள். எனினும் இது ஒதுக்கித்தள்ளக் கூடிய காய்கறி அல்ல. நார்ப்பொருள் நிறைய உள்ளது. அத்துடன் சுதேச வைத்திய முறைகளில்  சிறு நீர் பெருகுவதற்கும், உணவைச் சமிபாடடையச் செய்வதற்கும், இருமலுக்கும், ஈரல் நோய்கள் ஆகியவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தூக்கத்தையும் வரச்செய்யக் கூடியது என சொல்கிறார்கள். வயிற்றுப் பூச்சிக்கும் சித்த ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

இருந்தபோதும் நவீன மருத்துவத்தில் இது பற்றிய ஆய்வு ரீதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

முற்றிய காய்கள் கசக்கும்.

வாங்கியிருந்தால் என்ன செய்யலாம்?

அதற்கும் ஓர் வழி. காய்களை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி எடுங்கள்.

ஒரு பலகைக் கட்டையின் மேல் வைத்து, தேங்காய் அல்லது சப்பாத்திக் குளவியால் குத்துங்கள். காய் உடைந்து முற்றிய விதைகள் வந்துவிடும்.

ஒரு வடியில் கொட்டி ஓடும் நீரில் அலசி எடுங்கள். வடிய விட்டு எடுத்து வதக்கிக் கொள்ளலாம். சுவையான குழம்பும் கிடைக்கும். இக் குழம்பு இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது ++ செய்தியாகும்.

காய்களை உப்பு, மோர் இட்டு அவித்து எடுத்து வெய்யிலில் உலர்த்தி வற்றலாக்கி இரும்புச் சட்டியில் இட்டு வற்றல் குழம்பு செய்து கொள்வார்கள் எமது பாட்டிமார்.


கூட்டு, மோர்க் குழம்பு, சாம்பார்,பொரியல், அவியல் செய்து கொள்ளலாம். காரக் குழம்பு பிடிக்காதவர்கள் வதக்கி எடுத்து மஞ்சள்பொடி, தனியாப் பொடி சேர்த்து பால்க் குழம்பாகவும் செய்து கொள்ளலாம்.

தக்காளி சேர்த்துக் கொண்டால் சுவை மாற்றமாக இருக்கும்.

காய்க் காரக் குழம்பு

தேவையானவை


காய் - ¼ கிலோ
வாழைக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4.5 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்ப+ன்
கடுகு ¼ ரீ ஸ்ப+ன்
தேங்காய்ப் பால்- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி-1 ரீ ஸ்ப+ன்.
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்ப+ன்.
உப்பு புளிக்கரைசல் தேவையான அளவு.
கறிவேற்பிலை சிறிதளவு.
ஓயில் - 2 டேபள் ஸ்பூன்.

செய்முறை 

பிஞ்சுக் காய்களாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். காம்பை உடைத்து அலசி வடிய விடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தனியே வெட்டிக் கொள்ளுங்கள். பூண்டு நசுக்கி வையுங்கள். வாழைக்காய் சிறியதாக வெட்டி வையுங்கள்.

ஓயிலில் காய்களையும் வாழைக்காயையும் நன்கு வதக்கி எடுத்து வையுங்கள். சிறிது ஓயிலில் கடுகு வெடிக்க வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை போட்டு வதக்குங்கள்.



வெந்தயம் போட்டு வதக்கிய காய்களைக் கொட்டி, புளித் தண்ணீர் விட்டு உப்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் தனியாபொடிகள் போட்டு கொதிக்க விட்டு, இறுதியில் தேங்காய்ப் பால் 2 டேபிள் ஸ்பூன் விட்டு இறக்குங்கள்.


பொரித்த வாசத்துடன் மணம்கமழும் குழம்பு உங்களைச் சாப்பிட அழைக்கும்.

கத்தரிச் சமையல் பற்றிய எனது முன்னைய பதிவுகள்

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்

சரக்குத் தண்ணி - பத்திய உணவு

பாட்டியின் மண் சட்டிக் கறி

கத்தரி கடலைக் குழம்பு

பைவ் ஸ்டார் சலட்

Sunday, November 14, 2010

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள்

மொஸபத்தேமியா சிந்து வெளி நாகரீக காலத்தில் உபயோகிக்கப்பட்ட மட்பாண்டப் பொருட்கள் பலவும் அகழ்வாரச்சிகளில் கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அக்கால நாகரீக மக்கள் வாழ்க்கை, கலைகலாசாரங்களை அறிந்து கொள்ளுகின்றோம்.

தற்பொழுது வழக்கொழிந்துபோன,  சில தலைமுறைகளுக்கு முந்திய அடுக்களைப் பொருட்களை நினைவு மீட்போமா?


ஆதியிலிருந்து வந்த மட்பாண்டப் பொருட்கள் சட்டி, பானை, முட்டி என்பன பெரும்பாலும் பாவனையில் இல்லை என்றே சொல்லலாம்.கிராமங்களில் கூட உபயோகம் குறைந்துவிட்டது. மிக அருமையாக ஒரு சிலர் சட்டியில் சுவைக்காக சமையல் செய்வதுண்டு.

எமது கிராமத்தில் உள்ள வீடுகளில் சிலவற்றின் பரணிலிருந்து தேடி எடுத்த பொருட்களை எனது கமராவில் அடக்கிக் கொண்டேன்.

எங்கள் பாட்டிமார் சட்டியில் பால் காய்ச்சி அதைச் சுண்ட வைக்க அடுப்பில் உமியிட்டு தணலில் வைத்து விடுவார்கள். பால் நன்றாகச் சுண்டி சூடேறி உமி வாசம் கமழத் தொடங்கவும்  இரண்டு கால் பூனைகளும் அடுப்புப் பிட்டியில் குந்திக் காத்திருக்கும். பால் ஆடை திரள்வதை ஆசையுடன் பார்த்திருக்க நாவில் சுவை ஏறும்.


வயல்நெல்அரிசிச்சாதத்தை மண்பானையில் சமைத்தெடுப்பர். இறக்கி வைத்து வெளியே சாம்பல் போகக் கழுவிய பின்னர் பானையைச் சுற்றி மூன்று குறியாக திருநீறு பூசி விடுவர்.அன்னம் இடும்பாத்திரம் லஷ்மிஎன்பர்.


புட்டு, இடியப்பம் செய்வதற்கு வாய் ஒடுங்கிய பானைகள் இருந்தன. களி கிண்ட  மாவறுக்க பெரிய மண் சட்டியும்,  பொரியல் செய்ய தட்டையான சட்டியும், கறிச்சட்டியும், உலைமூடியும், அரிசி கிளைய மண் அரிக்கன் சட்டியும் வைத்திருந்தனர்.

மண்சட்டித் தயிரின்சுவை நாக்கில் ஊறுகிறதா? மண்பானையில் தண்ணீர்வைத்திருப்பர் வெய்யிலுக்கு குடிக்க ஜில் என்று இருக்கும்.
நிலாச்சோறு எப்படி?



வெண்கலப் பாத்திரங்கள் குடிபுகுந்தன. வெண்கலச் சருவச்சட்டி, குடம், செம்பு, பானை, அண்டா, குண்டா,கரண்டி, இட்லிப் பானை, தாம்பாளம், குத்துவிளக்கு, கைவிளக்கு, வெற்றிலைத்தட்டு, செம்பு என்பன புளக்கத்தில் இருந்தன.


வெண்கலக் கடைக்குள் ஆனை புகந்தாற் போல் தடாம்...டமார்.... சத்தங்களுக்கும் குறைவிருக்கவில்லை.

வெற்றிலைத் தட்டும் பூட்டுச் செம்பும்

பிரயாணத்தின் போது காப்பி எடுத்துச் செல்ல பூட்டுச் செம்பு பேணியுடன் இருந்தது. வெண்கலச் சருவச் சட்டியில் கறி செய்வதாக இருந்தால் உட்புறம் ஈயம் பூசி வைத்திருந்தார்கள். மூக்குப் பேணி, வெண்கலப் பேணி,  காப்பி ரீ அருந்த உபயோகமாக இருந்தன.


கூஜா, தூக்கு வாளி என்பன பிரயாணத்தில் சாப்பாடு எடுத்துச் செல்ல உதவியாக இருந்தன. தூக்கு வாளியுள் சாதத்தையிட்டு இடுக்குச் சட்டியில் கறிகளை வைத்து எடுத்துச் சென்றனர்.

இரும்புப் பாத்திரங்கள் தாச்சி, கண் அகப்பைக் கரண்டி, தோசைக் கல்லு, தட்டு அகப்பை(தோசை திருப்பி), கேத்தல் போன்றவை நீண்ட காலம் அழியாது உழைத்தன. பெரிய இரும்புத் தாச்சிகள் கச்சான், பயறு, உழுந்து, மிளகாய் அரிசிமா வறுக்கவும் இருந்தன. சிறிய தாச்சியில் குழம்பு, பொரியில் செய்து கொள்வர். இதில் சமைத்த வத்தல் குழம்பு மிகுந்த சுவையைத் தரும்.

காம்புச் சத்தகம்

இரும்பாலான காம்புச் சத்தகம், இது மரக்கறி வெட்டவும் பயன்பட்டது. நீண்ட காம்புடன் முன் பகுதிவளைந்திருக்கும் பெட்டி இளைக்கும்போது காம்பால் குத்தி ஓலையைத் தள்ளிப் பின்னுவார்கள். தோக்கத்தி தேங்காய் உடைக்கவும் மரங்கள் வெட்டவும் பயன்பட்டன.

வெட்டுக் கத்தி இறைச்சி மீன் வெட்டவும் பயன்பட்டது. இரும்பாலான மேசைக் கத்தியும் பாவனையில் இருந்தது.


திருவலகை

தேங்காய் துருவ திருவலகை மரக்கறி வெட்ட அரிவாள் மனை என்பனவும் கை கொடுத்தன.

கொக்கைத் தடி

கொக்கச் சத்தகம் உயர்ந்த தடியில் கட்டி வைத்திருப்பர் தோட்டத்தில் தேங்காய்,மாங்காய்,முருங்கக்காய் பறிப்பதற்கு.


அந் நாட்களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் "வெத்தலைத் தட்டைக் கொண்டு வா" என அம்மா மகளுக்கு ஓடர் போடுவாள். வெற்றிலைத் தட்டில், பாக்கு வெட்டியும் இருக்கும்.

பாக்கு வெட்டி

பாக்கு வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சீன ஜாடிகள் ஊறுகாய், உப்பு, புளி, எண்ணெய், நெய் சேமிக்க உதவின.  கண்ணாடிப் போத்தல்கள் சீனி, தேயிலை, கோப்பி, மிளகாய்ப் பொடி, மா வகைகள், தின் பண்டங்கள் சேமித்து வைக்க உதவின.

அலுமினிய ஈயப் பொருட்கள் பாவனையில் வந்தன. ஈயத்தில் அரிசி அரிப்பதற்கு அரிக்கன் சட்டி இருந்தது. சட்டி, தோசைக் கல்லு, குளிப் பணியாரக் கல்லு, தாச்சி என்பனவும் இடம் பிடித்தன.


குசினியில் தண்ணி அள்ளி வைத்துப் பிழங்குவதற்கு தகர வாளி இருந்தது. குடமும் உபயோகித்தனர்.

மரத்தாலான இடியாப்ப உரல்,முறுக்கு உரல், கரண்டி, அகப்பை,மோர்கடைய மத்து, இருந்தன.ஆப்பைக்கூடு துளையுள்ளது தட்டகப்பை ,மத்து,கரண்டி செருகிவைத்து தொங்க விட்டிருப்பார்கள்.


மத்து உருட்டும் பெண்

பனைநாரால் செய்யப்பட்ட திரிகணை சட்டி பானையை இறக்கி வைப்பதற்கு இருந்தது. பனங் சார்வோலையை வெட்டி  வெயிலில் காய வைத்து எடுத்து ஓலைப் பெட்டி, மூடியுடன் இளைத்து வைத்திருப்பர். புட்டு இடியப்பம் பலகாரங்கள் வைத்து மூடி வைப்பர்.

தட்டுப் பெட்டி, வெங்காயம் மரக்கறி, மிளகாய் பரப்பி வைப்பதற்கு உதவின. நிலத்தில் போட்டு இருப்பதற்கு தடுக்கு வைத்திருந்தனர்.வைபவங்களுக்கு சோறு சமைத்து ஆறப்போடச் சோற்றுப் பாய் இருந்தது. சாப்பிட பந்திப் பாய் வைத்திருந்தனர்.


சுளகு, இடியாப்பத் தட்டு, ஓலைத் தட்டு

ஐஞ்சறை ஓலைப் பெட்டி மசாலா சரக்கு சாமான்கள் வைப்பதற்கும், சுளகு புடைப்பதற்கும், நீத்துப் பெட்டி புட்டு அவிக்கவும், இடியாப்பத் தட்டுக்கள்,பனங்கட்டிக்குட்டான் இருந்தன.

நீத்துப் பெட்டி, முறுக்கு இடியாப்ப உரல்கள்

பனை நாரில் உறிகட்டி சமைத்த உணவை பாதுகாத்தனர்.கடகம், குஞ்சுக்கடகம் தானியசேமிப்புக்கும் தோட்டத்தில் மரக்கறிபிடுங்கவும் உதவியது.வியர்க்கும்போது விசுறுவதற்கு பனைஓலை விசிறி வைத்திருந்தனர்.


சந்தைக்கு எடுத்துச் சென்று மீன் மரக்கறி வாங்க பன் உமல் இப்பொழுது உள்ள சொப்பிங் பாக் போலப் பயன்பட்டது. இவை சாயமிடப்பட்ட ஓலையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

அடுக்களைக் கனவுகள் தொடரும் .......

மாதேவி