Friday, May 1, 2009

பாட்டியின் மண் சட்டிக் கறி

சிறிய பல்ப் போன்ற தோற்றத்தில் பச்சைப் பசுமை நிறத்தில் வெள்ளை மேலங்கி போர்த்திய அழகான தோற்றம் உடையவை இவை.

வட்டுக் கத்தரிகாய்கள் ஏனைய காய்கறிபோல சந்தையில் பார்க்கும் இடமெல்லாம் இப்பொழுது கிடைக்கின்றன. Baddu, Baddu என சிங்களத்தில் கூவிக் கூவி விற்பர்.

கண்டதுமே வாங்கத் தூண்டும்.

வாங்கும் போது பிஞ்சுக் காய்களாக தேர்ந்தெடுங்கள். பிஞசு என்றால் கசப்பு சற்றுக் குறைவாக இருக்கும்.

வட்டுக் கத்தரி சுவையில் சற்று முகம் சுளிக்க வைக்கும் கசப்பினால்.

பாகற்காய், வாழை மொத்தி, குறிஞ்சா இலை போன்றவையும் அத்தகையனவே. கசப்பானவையே உடல் நலத்திற்கு ஏற்றதென்பது பலரதும் நம்பிக்கையாகும்.

இவற்றை கசப்பு நீக்கி சமைத்துக் கொள்ளலாம்.

மஞ்சள் சேர்த்து பாற்கறியாகவும், மிளகாய்ப் பொடி இட்டு காரக் குழம்பாகவும், சுவைக்கு நெத்தலி கருவாடு சேர்த்தும் சுவை கூட்டலாம்.

பாட்டியின் கை மணத்திற்காக மண்சட்டியில் சமைத்துள்ளேன். நீங்கள் விரும்பிய பாத்திரத்தில் சமைத்துக் கொள்ளுங்கள்.

சமையற் பொருட்கள்

வட்டுக் கத்தரி -15-20
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப் பால் - 2-3 டேபிள் ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவில்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி 1 ரீ ஸ்பூன்
தனியா பொடி ½ ரீ ஸ்பூன்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – சிறிதளவு
இளநீர் அரை கப் அல்லது சர்க்கரை 2 ரீ ஸ்பூன்

தாளிக்க

கடுகு – சிறிதளவு
செத்தல் - 1
ஓயில் - 2 ரீ ஸ்பூன்

செய்கை
கையில் கறையை ஏற்படுத்தும் என்பதால் வெட்டு முன் கிளவுஸ் (Gloves) அணியுங்கள்.

காயை மூள் நீக்கி முதலில் பாதியாக வெட்டுங்கள்.
பின் ஒரு அங்குல அகலமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடுங்கள்.

காயில் முற்றிய விதைகள் இருந்தால் விதைகளை நீக்கி விடுங்கள்.

காயை 3-4 தண்ணீரில் கழுவி எடுங்கள்.

வெங்காயம் மிளகாய் இரண்டையும் விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.

இளநீரில் புளியைக் கரைத்து எடுங்கள்.

பாத்திரத்தில் காய், உப்பு, பொடி வகைகள், வெங்காயம், மிளகாய், வெந்தயம். கறிவேற்பிலை புளிக் கரைசல் விட்டு அரைக் கப் தண்ணீர் விட்டு இறுக மூடி போட்டு அவியவிடுங்கள்.

நெத்தலிக் கருவாடு சேர்ப்பவர்கள் அதனை நன்கு கழுவி எடுத்து மேற் கூறியவற்றுடன் சேர்த்து அவிய விடுங்கள். கருவாடு இருப்பதால் உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5 நிமிடங்கள் மூடியைத் திறக்க வேண்டாம். அதன் பின் திறந்து கிளறி ஓரிரு நிமிடம் அவியவிடுங்கள். நீர் வற்ற, பால் ஊற்றி இறக்குங்கள். (இளநீர்; கிடைக்காவிட்டால் 2 ரீ ஸ்பூன் சர்க்கரை கலந்து இறக்குங்கள்.)

தாளித்து குழம்பில் கொட்டி கலந்து மூடி வைத்துவிடுங்கள்.

கசப்பு, காரம், புளிப்பு, இனிப்புடன் சாதம் புட்டுக்கு ஏற்ற கறியாக இருக்கும்.

மண்சட்டியுடன் வைத்தால் சமைத்த கறி மறுநாளுக்கும் பழுதுபடாது இருக்கும். சுவையும் டபுள் ஆகும்.

நாக்கு நீண்ட பாட்டாவின் முக்கிய குறிப்பு-

கறியை அள்ளி எடுத்தவுடன் மண்சட்டியை உடனே கழுவ வேண்டாம். அதற்குள் அவித்த புட்டைப் போட்டு நன்கு குழைத்து எடுத்தால். சுவை அமோகம் என்கிறார்.

மாதேவி

9 comments:

 1. அருமை.

  இந்த பதிவு விகடன்.காம் குட் பிளாக் பகுதியில் வெளி வந்துள்ளது.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி. நான் விகடன்.காம் குட் பிளாக் பார்த்ததில்லை.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் மாதேவி. கிராமத்து பக்குவம் மிகவும் அருமை

  ReplyDelete
 4. சின்னு ரோஸ்ரி மண் சட்டி குழம்பு பார்க்கவே நல்ல இருக்கு, ஆனா நான் இது வரை மண் சட்டியில் சமைத்ததில்லை.
  அது கேஸ் அடுப்பில் வைத்தால் உடைந்து போகுது என்று என் தோழி சொன்னார், ஆனால் அந்த காலத்தில் அதில் தானே சமைப்பார்கள்.

  ReplyDelete
 5. இல்லை ஜலீலா. வெறும் மண்சட்டியை கேஸ் அடுப்பில் வைத்தால் உடையவே செய்யும். காயைப் போட்டு புளித் தண்ணீர் விட்ட பின் அடுப்பில் ஏற்றினால் சரி்.
  சமைத்த பின் சட்டி நன்கு ஆறிய பின்னரே தண்ணீர்விட்டுக் கழுவ வேண்டும்.

  ReplyDelete
 6. பார்க்கவே வாயில் எச்சில் ஊறுகிறது!! :-)

  //இளநீரில் புளியைக் கரைத்து எடுங்கள். // இது எனக்கு வித்தியாசமா இருக்கிறது! நாங்கள் இளநீர் என்ன தேங்காய் தண்ணீரையே குடித்து விடுவோம்! :-)

  ReplyDelete
 7. நன்றி சந்தனமுல்லை.

  ReplyDelete
 8. ////கறியை அள்ளி எடுத்தவுடன் மண்சட்டியை உடனே கழுவ வேண்டாம். அதற்குள் அவித்த புட்டைப் போட்டு நன்கு குழைத்து எடுத்தால். சுவை அமோகம் என்கிறார்.//

  பாட்டா, சுவை அறிந்தவரே!

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்