Saturday, May 30, 2009

அம்மா சுட்ட தோசை 2

வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் தோசை –

சிறிதாக வெட்டிய வெங்காயம் - ½ , பச்சை மிளகாய் - 1, கறிவேற்பிலை சிறிதளவு, தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன், சிறிதளவு உப்பு கலந்து வையுங்கள்.

தோசையை ஊற்றி மேலே தூவி, சுட்டெடுங்கள்.

விரும்பினால் மாவுடன் கலந்தும் ஊற்றிக் கொள்ளலாம்.

அன்னாசித் தோசை

சிறிது எண்ணெயில் இஞ்சி பேஸ்ட் வதக்கி அன்னாசித் துண்டுகள் ½ கப், தக்காளித் துண்டுகள் ¼ கப் லேசாக வதக்கி மிளகாய்ப் பொடி ½ ரீ ஸ்பூன் உப்பு சேர்த்து விரும்பினால் மல்லித் தழை தூவி எடுத்து தோசை வார்த்து மேலே 2 டேபிள் ஸ்பூன் கலவையை வைத்து சுற்றிவர சிறிது எண்ணெய்விட்டு, மூடி போட்டு ஒரு புறம் சுட்டு எடுங்கள்.

டேட்ஸ் சட்னி தோசை

பச்சை மிளகாய் 1-2 உடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுத்து வையுங்கள். சிறிய துண்டுகளாக டேட்சை வெட்டி எடுங்கள்.

தோசையை ஊற்றி நடுவில் மிளகாய்ப் பேஸ்ட் வைத்து சுற்றிவர டேட்ஸ் தூவிவிடுங்கள்.

வாய்க்கு ருசியான ஸ்வீட் அன்ட் ஹொட் தோசை தயாராகிவிட்டது.

வெண்டைக்காய்த் தோசை

அரிசி 2 கப் உடன் வெண்டைக்காய் 4 கலந்து அரைத்து எடுத்து தோசையாக ஊற்றி எடுக்கலாம்;.

உழுந்து, அரிசியுடன் வெண்டைக்காய்க் காம்பு அல்லது மூள் சிறிதளவு கலந்து அரைத்து எடுத்தால் மெதுமெதுப்பான தோசை கிடைக்கும்.

தேங்காய்த் துருவல் தோசை

உழுந்து 1 கப் அரிசி 3 கப்புடன் தேங்காய்த் துருவல் 1 கப் சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்டு தோசை வார்க்கவும்.

இதுவும் மெத்தென்று வரும்.

மைசூர்ப் பருப்புத் தோசை

உழுந்துக்குப் பதில் மைசூர்ப் பருப்பை ஊற வைத்து அரிசியுடன் அரைத்து எடுத்து தோசையாக ஊற்றி எடுங்கள்.

இதே போல் சோயாப் பருப்பிலும் செய்து கொள்ளலாம்.

அவல்த் தோசை

ஒரு கப் அவலுடன், ஒரு கப் உழுந்து, ஒரு கப் பச்சை அரிசி அரைத்தெடுத்து ஊற்றிக் கொண்டால் மொறு மொறுப்பான அவல்த்தோசை தயார்.

உழுந்து மைதா மா தோசை

உழுந்து ஒரு கப், வெந்தயம் 2 ரீ ஸ்பூன், பச்சை அரிசி 4 டேபிள் ஸ்பூன் ஊறவைத்து அரைத்து எடுத்த மாவுடன் அவித்த மைதா மா 3 கப் கலந்து புளிக்க வைத்து சுட்டுக் கொள்ளுங்கள்.

வித்தியாசமான மெதுமெதுப்பான தோசை கிடைக்கும்.

விரும்பினால் மிளகு உள்ளி, சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

இத் தோசைக்கு உரலில் இட்டு இடித்த இடி சம்பல் மிகு சுவை கொடுக்கும்.

கப்ஸிக்கம் கலர்புல்த் தோசை

சிவப்பு, மஞ்சள், பச்சை நிற கப்ஸிக்கம் சிறியதாக வெட்டிக் கொண்டு சிறிது உப்பு மிளகு பிரட்டிக் கொள்ளுங்கள். தோசையை ஊற்றி கலவையை மேலே வைத்து எண்ணெய் விட்டு, மூடி போட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

விரும்பினால் வெங்காயம் தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆட்டுக் கொத்து இறைச்சித் தோசை

கொத்து ஆட்டு இறைச்சி ¼ கிலோ எடுத்து எண்ணெயில் வெங்காயம் ½ பச்சை மிளகாய் 1, தக்காளி 2, உள்ளி 2, உப்பு, மிளகாய்ப் பொடி 2 ரீ ஸ்பூன், மசாலா பொடி 1 ரீ ஸ்பூன், சோம்பு ¼ ரீ ஸ்பூன் முழுதாகச் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான கறி தயாரித்து எடுங்கள்.

தோசையை வார்த்து இக்கலவையைப் பரப்பி, சுற்றிவர எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுங்கள்.

விரும்பிய இறைச்சியில் செய்து கொள்ளலாம்.

மாதேவி

4 comments:

  1. இதில் வெண்டைக்காய் தோசையும், மைதா மா தோசையும் கொஞ்சம் டிபெரென்டா இருக்கு செய்து பார்க்கனும்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.

    ReplyDelete
  3. தோசை செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்