Tuesday, March 26, 2013

'பூரான் சலட்' சீன உணவு அல்ல

தமிழர்களின் வாழ்க்கையில் பல காலமாக முக்கியத்துவப் பொருளாகிவிட்டது தேங்காய். மங்கலப் பொருளின் அடையாளமாகவும் பேணப்பட்டு வருகிறது.

பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னரே விசேட நிகழ்ச்சிகள் தொடங்குவார்கள்.

கோவிலுக்குச் செல்வதென்றாலும் தேங்காயுடன்தான் செல்கின்றார்கள். கோயில்களில் நேர்த்திக்காக சிதறு தேங்காய் அடிப்பார்கள். பண்டிகைகள் விழாக்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


நிறைகுடம் வைத்து தேங்காய்,மாவிலை,பூக்களால் அலங்கரித்து சந்தணம்,குங்குமம் வைத்து வரவேற்பார்கள்.

நவராத்திரியில் இலட்சுமியைத் துதித்து கலசத் தேங்காய் வைக்கப்படுகின்றது. சித்திரைப் பொங்கல் அன்று மாலையில் போர்த் தேங்காய் அடிக்கும் போட்டியும் நடக்கும்.


மஞ்சள் பூசிய தேங்காய் ஆரத்தி பூப்புநீராட்டு விழாக்களில் எடுக்கப்படுகின்றது. மஞ்சள் இட்ட தேங்காயின்மேல் திருமணத் தாலிவைத்து பூசிக்கப்படுகின்றது.

இளநீர், தேங்காய், காய்ந்தபின் கொப்பரை என முழுதாகவே இது பயன்படுகிறது.

தேங்காயில் நெய்யை நிறைத்து விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

ஓமகுண்டலங்களிலும் தேங்காய் இட்டு வழிபடுகின்றார்கள்.

கார்த்திகை தீப நாளில் வீட்டு வாசலில் வாழை மரக்குத்தியை நாட்டி கொப்பரைத் தேங்காயில் எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றி வைப்பார்கள். பலமணி நேரம் விளக்கு எரியும்.


எங்கள் நாட்டில் தேங்காய் இல்லாமல் சமையலே இல்லை. கிராமங்களில் வீட்டைச் சுற்றி தென்னைமரங்கள் நாட்டியிருப்பார்கள். அதிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய்கள் தேவைக்குப் போதுமானதாக இருக்கும்.



வெப்ப காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்திற்கு உடல் வெப்பத்தைத் தணிக்க தாகத்தைத் தீர்க்க நீராகாரங்களை அருந்துவதும் உடலுக்கு குளிரச்சியைத் தரும் காய்கறிகள், கீரைவகைகள், பழவகைகள், சலட் வகைகள், கஞ்சி வகைகள்,மோர் கூழ்,பால்சோறு வகைகள் உண்பதும் சிறந்தவை.

கோடையில் உடலிலுள்ள நீர் வியர்வையாக அதிகஅளவில் வெளியேறுவதால் அதை ஈடு செய்ய நீர்ச் சத்து மிக்க உணவுகளை கூடியளவு எடுப்பது அவசியம். நீராகரங்களை போதிய அளவில் எடுத்துக் கொண்டு எமது உடல் வெப்பத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.





பனம் பழம் முளைக்கும் காலத்தில் கிடைப்பது பனம் பூரான். இதுவும் வெட்டிச் சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும். இது மஞ்சள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.



உடைத்த தேங்காயில் பூ இருந்தால் அதை மங்கலமாகக் கொள்வார்கள்.

இதை தேங்காய்ப் பூரான், தவுன், சிதவல் என்றும் பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். தேங்காய் பூரான்களும்;

தெருவீதிகளில் விற்பனைக்காகக் காத்திருப்பதைக் காணலாம்.

நன்றி:- வீடு திரும்பல் மோகன்குமார்
இதிலுள்ள நீர்ச் சத்து நாவிற்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தையும் தீர்க்கும். காபோஹைதரேட் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கல்சியம், பொஸ்பரஸ், விற்றமின்கள், அடங்கியுள்ளது.

வாய்ப் புண்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. வயிற்று நோய்களுக்கும் நல்லது என்கிறார்கள். இதை நேரடியாக உண்பதுடன் கோடை சலட்டாகவும் பயன்படுத்தலாம்.


தினந்தோறும் வெங்காயதயிர் பச்சடி, வெண்டைக்காய் தயிர்பச்சடி, வெள்ளரிக்காய் தயிர்பச்சடி என சலிப்போருக்கு சற்று வித்தியாசமாக மிக இலகுவாக செய்துகொள்ள சிறந்தது. பச்சலர் சமையலுக்கு ஏற்றது.

தேங்காய் பூரான் தயிர் சலட்.

தேங்காய் பூரானில் உப்பும் இனிப்பும் இயற்கையாகவே இருக்கின்றது அதனால் ஒருகப் தயிரை அடித்து எடுத்து வெட்டிய பூரான் துண்டுகளை கலந்துவிட்டால் சலட்தயார். விரும்பினால் குளிரவைத்து பரிமாறலாம்.

கோடை வெப்பத்துக்கு வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். 

காரம் எதுவும் சேர்க்கவில்லை காரம் விரும்பினால் சேர்த்துக் கொள்ளுங்கள்.


சலட் எனது முன்னைய பதிவுகள் இரண்டு:-

கீரை வித் மாங்காய் சலட்
குட மிளகாய் சலட்

-: மாதேவி :-

Sunday, February 10, 2013

பருத்தித்துறை ஓடக்கரைத் தோசை சாப்பிட வாரீர்களா?

எங்கள் எள்ளுப் பாட்டன் காலத்திலிருந்தே பருத்தித்துறையூரில் ஓடக்கரை மிகவும் பிரசித்தம் பெற்றிருந்தது. மிக ஜனநெருக்கடியான இடமாக இருந்திருக்கிறது.


அந் நாட்களில் பருத்தித்துறை துறைமுகம் பிரசித்த துறைமுகமாக விளங்கியது. கப்பல் வாணிபம் நடைபெற்றது. அதனால் அக்காலத்தில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள் பலவும் இந்நகரில் இருந்தன.


நாங்களும்  சிறுவயதில் மாவுக் கப்பல்கள் இத் துறைமுகத்தில் வந்து இறக்குவதை  கண்டிருக்கின்றோம்.

முன்னர் பர்மா இந்தியாவிலிருந்து தேக்கு மரங்கள் கப்பல்களில் கொண்டு வரப்பட்டு கோயில் கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தியதாக எங்கள் பாட்டி கூறியிருக்கிறார்.

பருத்தித்துறை துறைமுகம் தற்போது அழிந்த நிலையில்.

வீட்டு ஓடுகளும் இந்தியாவிலிருந்து கப்பல்களில் வந்து இறங்கியதாகச் சொன்னார். இந்திய, சீனப் பட்டுகளும் கொண்டுவரப் பட்டு விற்கப்பட்டன.  இந்நகர் வியாபார நகராக இருந்ததால் இந் நகரை அண்டியுள்ள பிரதேசங்களிலிருந்து தொழிலுக்காக பல மக்களும் இங்கு வந்து குடியேறினார்கள்.

இந்நாட்களில் படித்த சிலர் சிங்கப்பூர், பர்மா நாடுகளில் தொழில் புரியவும் சென்றார்கள். அதனால் அந்நாட்டு உணவு முறைகளையும் நாளடைவில் இந்நகர மக்கள் அறிந்திருந்தனர்.

அம்முறையில் பலவகை உணவுகளும் அறிமுகமாயின.


நகரத்தில் கூலிக்காக வேலை செய்பவர்களுக்கு உணவுத் தேவை ஏற்பட்ட வேளைகளில் வீடுகள் தோறும் சிறிய தட்டிகள் வைத்து உணவு விற்பனை செய்யும் வழக்கம் இத்தெருக்களில் ஏற்படலாயிற்று.

இங்கு தயாரிக்கும் உணவுகள் மிகவும் ருசிமிக்கதாக இருந்தது. அவற்றின் சுவையோ ஆகா சொல்லி மாளாது. அதனால் சுற்று வட்டாரத்தில் ஏறத்தாள ஆறு மைலகள் தூர வரையுள்ள மக்கள் இங்கு வந்து உணவை வாங்கிச் செல்லும் வழக்கம் உருவாயிற்று.

விசேடமாக இவர்கள் தயாரிக்கும் முட்டை அப்பம், வெள்ளை அப்பம், தோசை, பொரிவிளாங்காய், வெள்ளை முறுக்கு, இனிப்பு சிப்ஸ், தட்டை வடை,சீடை, கச்சான் தட்டு  இன்னும் பலப்பல சொல்லலாம். சீனாவிலிருந்து வரும் புட்டரிசி என்ற ஒரு அரிசியை ஆவியில் வேக வைத்து தேங்காய் சர்க்கரை சேர்த்து உண்பார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும் என எனது அம்மா சொல்லுவார்.

நகரைச் சுற்றியுள்ள மக்கள் தமது வாழ்க்கையில் ஓரிரு தடவையேனும் இவ்வுணவை ருசிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

மாலையானால் உணவு வாங்குவதற்காக சுற்று வட்டாரங்களிலிருந்து மக்கள் நடையாகவும், சைக்கிள்களிலும் ஓடக்கரையை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிறிய அகலம் குறைந்த அந்தப் பாதையால் செல்வோர் தொகை கணக்கில் அடங்காது. சைக்கிள்கள் அவசரமாக விரைந்தால் ஒன்றுடன் ஒன்று இடிபட்டுக் கிடக்கும். மிகவும் நிதானமாகவே இங்கு செல்லல் வேண்டும்.

அண்டிய ஊர்களில் காச்சல் வந்தவர்களுக்கு காச்சல் மாறியதும் பத்திய உணவாக முதல் முதல் கொடுப்பது இங்கு செய்யப்படும் வெள்ளை அப்பத்தையே. இது எங்கள் வீட்டிலும் நடக்கும். பலதடவைகள் நடந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ளது இவ்விடம்.

விசேடமாக இவர்கள் தயாரிக்கும் தோசை அதற்கான மூன்று நான்கு வகை அம்மியில் அரைத்த சட்னி,சம்பல் ,கறிவகைகள், பொடி சம்பல், என அனைத்தும் சுவையானது.



மெத்தென்ற தோசை அதன்மேல் பச்சை மிளகாய் சட்னி, அதன்மேல்தோசை சிவப்புக் காரச் சட்னி,


அதன்மேல்தோசை காரக்கறி, பொடி சம்பல், என மாற்றி மாற்றிஅடுக்கிக் கொடுப்பார்கள். கால ஓட்டத்தில்  இப்பொழுது ஓரிரு வீடுகளில் மட்டும் தட்டி வைத்து விற்பதைக் காணலாம்.


சம்பல் ஊறி மெத்தென இருக்கும். தோசை சாப்பிட வீட்டில் போட்டி நடக்கும்.
விசேடமாக தோசைக்கு ஒரு காரக்கறி வைப்பார்கள்.



காரத்தில் கண்ணில் நீர்வடிய நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு சாப்பிடுவதிலும் சுவை இருக்கத்தான் செய்தது. நானும் சாப்பிட்டிருக்கின்றேன். இவ்வகைக் கறி வீட்டிலும் செய்திருக்கின்றேன். உடலுக்கு அதிக காரம் கூடாது என்பதால் இப்பொழுது காரத்தைக் குறைத்துச் செய்வேன்.


மெத்தென்ற தோசை
 
தேவையானவை

உழுந்து - 1 கப்
வெள்ளைப் பச்சை அரிசி - 2 கப்
புளுங்கல் அரிசி - ½ கப்
வெந்தயம் - 2 ரீ ஸ்பூன்

அரிசியை 4-5 மணிநேரம் ஊற வைத்து உரலில் இட்டு இடித்து அரித்து மாவாக எடுங்கள்.


அரிக்கும்போது வரும் குறுணியில் 2 பிடியை எடுத்துவையுங்கள். அடுப்பில் 2 ரம்ளர் நீரை வைத்து நீர் கொதிக்க குறுணியை போட்டு கஞ்சி காய்ச்சி ஆற வைத்துவிடுங்கள்.

ஆட்டுக் கல்லில் அரைத்து எடுத்த உழுந்து மாவுடன் இடித்த மா, கஞ்சி அனைத்தையும் கலந்து தோசை மா பதத்தில் கரைத்து வையுங்கள்.
சுடும்போது உப்புக் கலந்து சுடலாம்.


மிகவும் மெதுவான மெத்தென்ற தோசை கிடைக்கும்.
இதை நாங்கள் இக்காலத்திற்கு ஏற்ப கிரைண்டர் அல்லது மிக்ஸியில் செய்து கொள்ளலாம்.


பச்சை மிளகாய் காரக்கறி

தேவையானவை

பச்சை மிளகாய் - 15 - 20
சின்ன வெங்காயம் - 1 கப்
தேங்காய் நீர் - ½ கப் ( மிளகாய் காரத்தை குறைப்பதற்காக )
உப்பு புளி - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - ½ ரீ ஸ்பூன்
சோம்பு -¼ ரீ ஸ்பூன்
வெந்தயம் - ¼  ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை 

மிளகாயை சிறியதாக வட்டமாக வெட்டுங்கள.;

வெங்காயத்தையும்  சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
தேங்காய் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.

ஓயிலில் பொருட்களை தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் கொட்டி வதக்குங்கள்.

உப்புக் கலந்து வதக்குங்கள்.

நன்கு வதங்கிய பின் புளித் தண்ணியை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க விட்டு இறக்கிவிடுங்கள்.

கொதிக்கும்போதே காரம் மூக்கைப் பிடுங்கும்.



மிளகாய் காரத்துடன் பச்சை மிளகாய் காரக் கறி தயாராகிவிட்டது.



குறிப்பு - பச்சை மிளகாய்க்குப் பதில் குடமிளகாய் பயன்படுத்தினால்; காரம் இருக்காது.தேங்காய்   நீரைத் தவிர்த்து விடுங்கள்.

எனது தோசைப் பதிவுகள்

அம்மா சுட்ட தோசைகள்

அம்மா சுட்ட தோசை 2

-மாதேவி-

Sunday, January 6, 2013

முல்லை நிலம் எங்கும் தேடி முல்லை கொய்து வந்தேனே!!


ஐவகை நிலத் திணைகளில் காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை நிலமென அழைக்கப்படும். இந்த நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.


சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒரு பகுதியாக முல்லைப் பாடலும் இருக்கிறது. இது முல்லைத் திணைக்குள்ள நூலாகும்.

நம்பூதனார் கவிநயத்தோடு எழுதியது முல்லைப் பாட்டு.

முல்லை மலர் என மல்லிகையில் மிகுந்த நறுமணமுள்ள ஒரு இனம் உள்ளது. Jasminium auriculatum  oleacea குடும்பத்தைச் சார்ந்தது. நீண்ட காம்புடன் கூடிய வெண்நிற சிறிய மல்லிகை இனம் இது. கொத்துக் கொத்தாக மலரும் செடி. பெரிய மரமாக வளரக் கூடியது முல்லை மல்லி என அழைப்பார்கள்.

நன்றி விக்கிபீடியா

முல்லைக் கொடி படர்வதற்கு தனது தேரைக் கொடுத்த பாரி வள்ளலும் நமது இலக்கியங்களில் வருகின்றார். முல்லை எனும் சொல் வனமுல்லையைக் குறிக்கும் என்கிறார்கள். பாரி வள்ளல் தேரை வழங்கியது இம் முல்லைக்குத்தான்.

நன்றி விக்கிபீடியா
 இதற்குக் காய்களும் இருக்கின்றனவாம்.

நன்றி விக்கிபீடியா
 முல்லைப் பூக்களில் பல வகைள். சாதி மல்லி,

நன்றி விக்கிபீடியா

நித்திய மல்லி, மௌவல் எனப்படும் மரமல்லி இது நள்ளிரவில் பூத்து மணக்கும்.

நன்றி விக்கிபீடியா
 முல்லை ஆறும் இருக்கின்றது.

இலங்கையில் முல்லைத் தீவு என்ற ஊரும் இருக்கிறது. திருக்கருகாவூர், வடதிருமுல்லைவாயில், திருக்காவிரிப்பூம்பட்டினம், திருக்கருப்பறியலூர். கோயில்களில் முல்லை தலமரமாக அமைந்து சிறப்புப் பெறுகிறது.

இப்பொழுது முல்லை என அழைக்கப்படும் முல்லை மல்லிகை செடி பூவுடன் நன்றி விக்கிபீடியா

200 மைல்களுக்குப் பிரயாணம் செய்து முல்லை நிலமெல்லாம் ஏறி இறங்கி நான் தேடிக் கொய்து வந்தது முல்லை என அழைக்கப்படும் கீரை வகை இலைச் செடி.


இந்த இலைக்கும் இயற்கை வாசம் உண்டு. இலையை ஒடித்தால் மணம் கமழும்.

கிராமத்தில் எங்கள் வீட்டில் எப்பொழுதும் செடி இருக்கும். மழைக்கால உணவாகவும் பலதடவை கை கொடுத்திருக்கின்றது.

எங்கள் வீட்டில் எங்களுக்காக வளர்ந்திருந்து காத்திருந்த முல்லைச் செடி

எமது கிராமத்துக் காணிகளில் தேடித் திரிந்து பறித்து வந்திருக்கின்றேன். இதற்கு விலை கொடுக்க முடியுமா? தேடினாலும் நகரங்களில் கிடைக்காதது. இவ் இலைகளை வைத்து சுவையாகச் சமைக்க முடியும்.

பால்சொதி, குழம்பு, செய்து கொள்ளலாம். முல்லை இலைக் கஞ்சி, ஒடியல் ஊழ், என்று பலவும் சமைக்கலாம்.


முல்லை இலை வாசத்துடன் சொதி கமகமக்க சாதத்தில் விட்டு குழைத்து சுவையாக உண்ணலாம்.

இடியப்பம், பிட்டு, பாணுக்குச் சுவைக்கும்.


எங்கள் அம்மா மீன் தலையுடன் முல்லை இலைகளைப் போட்டு சொதி வைப்பார்கள். முல்லை முருங்கை இலைகள் இரண்டையும் கலந்தும் சொதி செய்வோம்.

முல்லை இலைச் சொதி

தேவையானவை

முல்லை இலை

கட்டித் தேங்காய்ப்பால் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம்  - 6-7
முல்லை இலைகள் - 15-20
தேசிப்புளி - 1 ரீ ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு

செய்யும் முறை

நல்ல இலைகளாக தேர்ந்து எடுங்கள்.

இவ்வாறு பூச்சி பிடித்த இலைகளை தவிருங்கள்

இலைகளின்; காம்புகளை நீக்கி விடுங்கள். நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் வெங்காயம் வெட்டி வையுங்கள்.

பாத்திரத்தில் இலைகள், பச்சை மிளகாய் வெங்காயம் உப்புப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அவிய விடுங்கள். அவியும்போதே வாசம் தூக்கும்.

அவிந்த பின் தேங்காய்ப்பால் ஊற்றி தேசிப்புளி சிறிதளவு விட்டு கலக்குங்கள்.

கொதிக்கத்தொடங்க கலக்கி விட்டு மீண்டும் ஒரு கொதிவர இறக்குங்கள். பின்பு மீதி தேசிப்புளியைக் கலந்து கோப்பையில் ஊற்றி வையுங்கள்.


கமகம வாசத்துடன் முல்லை இலைச் சொதி தயாராகிவிட்டது.
( விரும்பினால் தாளித்துக் கொட்டுங்கள் )

:- மாதேவி -: