Tuesday, February 17, 2009

கறியாகும் பூ

இன்றைய நாகரீக மாற்றத்தில் பாட்டி காலத்து கிராமத்தின் 'பக்குவ சமையல் முறைகள்' அருகி மறைந்து போய்விட்டன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவற்றில் சில நகரங்களில் ஆடிக்கொரு தடவை இடம் பிடிப்பதுண்டு.

கிராமத்து பொருட்களில் சில வகையானவை நகரங்களில் கிடைப்பதும் அருமை. அவ்வாறு கிடைத்தாலும் அநேகருக்கு அவற்றை எவ்வாறு சமைப்பது என்ற விடயமும் கேள்விக் குறியாகவும் இருக்கிறது.

எனவே எமது பாரம்பரிய உணவு முறைகளை மறவாது செய்து வருவது சிறந்தது.

அந்த வகையில் கொல்லை அகத்தியென பாடல்களில் புகழ்ந்து பாடப்பட்ட மரம் இது. கிராமங்களில் பிரசித்து பெற்ற இது வீட்டுக் கொல்லைகளில் பெரும்பாலும் இடம் பிடிக்கும். அகத்தி பூ பூத்தாலும் புறத்தி புறத்தியே என்ற சொல்வழக்கையும் நினைவில் கொள்ளலாம்.

மரம் பூக்கும் காலத்தில் வெண்கத்தி போன்ற பூக்களாய் கொத்துக்களுடன் தொங்கும் அழகோ கொள்ளைதான்.

அழகில் அனைவரையும் கவரும் அகத்தி இலை, பூ என இரண்டுமே சமையலில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது.

கூடிய சத்துக்களும் அடங்கியுள்ளது. இரும்புச் சத்து நிறைந்தது. எலும்புகளை வளர்ச்சியடையச் செய்யும் கல்சியமும் அடங்கியுள்ளது. உடலுக்கு சீரான சக்தியையும் கொடுக்கும்.

இவ் வகையில் சிறப்புற்ற அதன் பூவை நாமும் சமைத்து உண்போமே.

சமைப்பதற்கு வேண்டியவை

அகத்திப் பூ - 20-25
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் - ½
பச்சை மிளகாய் - 2(காரத்திற்கு ஏற்ப)
மஞ்சள் பொடி – (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
தேசிச் சாறு – சிறிதளவு
முதலாம் தேங்காய்ப்பால் - ¼ கப்
தண்ணிப்பால் - ½ கப்

தாளிக்க

கடுகு – ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு - 1 ரீ ஸ்பூன்
வெங்காயம் - ½
கறிவேற்பிலை – சிறிதளவு

வாருங்கள் சமைப்போம்

பூவின் காம்புடன் கூடிய புல்லியை வெட்டி எடுத்து அகற்றி விடுங்கள்.
உள்ளிருக்கும் மகரந்தத்துடன் கூடிய தடித்த தண்டையும் அகற்றிவிடுங்கள். புழு பூச்சி இருந்தால் அப் பூவின் இதழ்களை அகற்றி விடுங்கள்.

நல்ல இதழ்களாக ஒவ்வொன்றாகப் பிரித்து எடுத்து வையுங்கள். வடியில் இட்டு ஓடும் குழாய் நீரில் நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு நீரை வடிய வைத்துவிடுங்கள்.

கிழங்கு வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

பச்சை மிளகாயை கீறிவிடுங்கள்.

விரும்பினால் பூ இதழ்களை அகலப்பாட்டுக்கு குறுக்காக ஒரு தடவை வெட்டுங்கள். முழு இதழாகவும் செய்து கொள்ளலாம்.

கிழங்கை தண்ணிப் பால் சிறிது உப்புடன் சேர்த்து அவியவிடுங்கள்.

கிழங்கு முக்கால் பாகம் அவிந்ததும் பூ இதழ்கள், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து அவியவிடுங்கள். விரைவில் அவிந்துவிடும்.

ஓராம்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி தேசிச்சாறு விட்டு பிரட்டி விடுங்கள். தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.

பூ வாசத்துடன் பூப்பூவாய் கறி தயாராகும். சாப்பாட்டு பிளேட் எடுத்து விட்டீர்களா? சாப்பிட்டுவிட்டு ரிஸல்ட் சொல்லுங்கள்.

---------- மாதேவி ----------

6 comments:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    ReplyDelete
  2. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே
    என்று ஒரு பழ மொழி இருக்கிறது.

    அகத்தி காய் ஒன்றுக்கும் பயன் படுத்துவதில்லையல்லவா? ஏன் எதற்காக தெரிந்தால் சொல்லுங்க்கள்.

    அகத்திப்பூ சொதி நல்ல டேஸ்டா இருந்தது. நன்றி.

    ReplyDelete
  3. இந்த பூவை அரிசிமாவில் தோய்த்து பொரித்து சாப்பிடத் தருவா அம்மம்மா. இது புதுசு எனக்கு. அகத்தி சொதியும் அம்மா செய்யறவா. சத்து என்ற ஒரே காரணத்தால நாங்கள் சாப்பிட நடப்படிப்போம். ஹி ஹி.

    ReplyDelete
  4. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.html

    ReplyDelete
  5. நல்லாருக்கு...அகத்திப்பூ கிடைக்கா பாக்கணூம். வர்ர்ர்ட்டா?

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்