Thursday, April 16, 2009

பொரித்த வெங்காய பிரியாணி

வெங்காயம் பொரிக்கும்போதே அதன் வாசனை ஊரெல்லாம் கமகமக்க வைக்கும். சாப்பிட வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பும். உப்பு காரத்துடன் எண்ணெயில் பிரண்டு உருண்டு வர நாக்கு சுவைக்கச் சொல்லித் தூண்டும்.

என்ன கொலஸ்டரோல் ஏறப்போகிறது என்கிறீர்களா? இருக்கிறதுதான்.

ஒரு மாறுதல் சுவைக்கு இடையிடையே சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இத்துடன் பலன்ஸ் கொடுக்க பருப்பு கறி, சோயாக் கறி, வெஜிட்டபில் சொப்சி, மீன் கறி, சலட், பச்சடி, பழவகை ஏதாவது இருவகையைச் சேர்த்துச் சாப்பிட்டுக் கொள்வது உகந்ததாக இருக்கும்.

சாப்பிடத் தயாராகிவிட்டீர்களா?


முதலில் செய்து கொள்வோம்.

அரிசி – 1 கப்
வெங்காயம் - 4
கஜீ – 10
கறிவேற்பிலை – 5-6 இலைகள்
உப்பு தேவைக்கு ஏற்ப
நெய் அல்லது சன் ப்ளவர் ஓயில் - 4-5 டேபிள் ஸ்பூன்

பொடி வகைகள்

மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியா தூள் – 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ரீ ஸ்பூன்
மிளகு தூள் – ½ ரீ ஸ்பூன்
மசாலா பொடி – ½ ரீ ஸ்பூன்

செய்முறை

சாதம் அவித்து எடுத்து வையுங்கள். வெங்காயம் நீள வாட்டில் மெல்லிய துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

கஜீ உடைத்து சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்து வையுங்கள்.

வெங்காயத்தில் உப்பு மிளகாய் பொடி பிரட்டி நெய்யில் பொரிய வையுங்கள். நன்றாக இடையிடையே பிரட்டி நன்கு பொரியவிட்டு எடுத்து வையுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் கறிவேற்பிலையை வதக்கி தனியாப் பொடி, சீரகப் பொடி, மசாலா பொடி, மிளகு பொடி சேர்த்து சாதத்தையும் கொட்டி சிறிதளவு உப்பு போட்டு கிளறிவிடுங்கள்.

பொரித்த வெங்காயத்தில் முக்கால் பாகத்தையும் கஜீவையும் சாதத்தில் சேர்த்து பிரட்டிவிடுங்கள்.

பிளேட்டில் சாதத்தைப் போட்டு பிறிதாக எடுத்து வைத்த வெங்காயப்
பொரியலையும் மேலே தூவி அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

வெங்காய சீரகப் பொடி வாசத்துடன் பிரியாணி தயார்.

மாதேவி

6 comments:

  1. padikkumbodhe pasi yedukkiradhu.. innum eluthungal...

    ReplyDelete
  2. இனிய வார்த்தைகளுக்கு நன்றி ஆதவன்

    ReplyDelete
  3. ஒரு புது மாதிரியா செய்கிறீர்கள் அருமை உங்கள் இலங்கை தமிழும், சமையலும்.

    ReplyDelete
  4. புது விதமாய் இருக்கிறது!கஜீ என்றால் எனக்குத் தெரியவில்லை..:(

    ReplyDelete
  5. இலங்கைத் தமிழ் இனிமையானது என உங்களைப் போன்றே எல்லோரும் கூறுவார்கள்.பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  6. கஜீ அல்ல கஜு Cadju தவறான தட்டச்சு. சுட்டியதற்கு நன்றி சந்தனமுல்லை

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்