Thursday, November 12, 2009

வாழைக்காய்க் காரப்பிரட்டல்




'கிச்சு கிச்சு தாம்பாளம்
கீயா மாயா தாம்பாளம்...'

மற்றொன்று

'.... தாராம்பட்டி வாழைக்காய்
பூவும் பிஞ்சும் மண்டபத்தில்
பூமாதேவி கையை எடு.'

பாலர்களாக இருந்த காலத்தில் விளையாடிய விளையாட்டுக்களில் இப்படியும் சில இருந்தன.

சிறுவர்கள் வட்டமாகச் சுற்றி இருந்து இரு கைகளையும் நிலத்தில் வைத்திருக்க, ஒருவர் பாடிக்கொண்டே எண்ணி வருவார். பாட்டு எவருடைய கையில் வந்து முடிகிறதோ அவர் அக் கையை எடுக்க வேண்டும். இவ்வாறு தொடரும்.

இறுதியில் எவர் கையில் பாட்டு முடிவுறாது இருக்கிறதோ அவர் வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார்.

அப்பொழுது பாடலும் விளையாட்டும்தான் நினைவு.

இப்பொழுது நினைவெல்லாம் தாராம்பட்டி மேல்தான். அங்குள்ள வாழைக்காய்கள் நிறையச் சுவை தருமா?

வாழை

தென் கிழக்கு ஆசியாவில்தான் முதன் முதலில் வாழை பயிரப்பட்டிருந்தது. வெப்ப வலயப் பிரதேசங்களில் பெரும்பாலும் பயிரப்படும். எந்த நிலத்திலும் பயிரிடப்படக் கூடியது. நீர்வடி நிலமாக இருப்பின் சிறந்தது.

வாழை மரங்களின் முதல் எதிரி காற்றுத்தான். காற்றுக் காலத்தில் பெருமளவு மரங்கள் குலையுடன் முறிந்து போய்விடுகின்றன.


'வெண் மேகம் கறுத்து
வெளியெல்லாம் குளிர் பரவி
ஊரடங்கிக்
காரிருள் சூழ
கொட்டும்
அடை மழையில்
குலை சாய்ந்து
அழுகிப் போவேனே.

பேய் (காற்று) வீசுவதால்
குலை நடுக்கம் ஆனேனே
அந்தோ!
காலனும் வந்துவிட்டானா'

என என் வீட்டு வாழை பாடியது கேட்கிறதா?

சாம்பல் வாழைக்காய், மொந்தன் வாழைக்காய் என இரு இனங்கள் எமது பகுதிகளில் உண்டு.

போசணை அதிகம் உண்டு

இதில் காபோஹைரேட் பெரும்பாலும் உண்டு.

இத்துடன் இரும்புச் சத்தும் உள்ளது. ஒரு கப் (200 கிறாமில்) நிரம்பிய கொழுப்பு 1சத விகிதம் தான் உண்டு.
விட்டமின் சீ, நார்ப்பொருள், பொட்டாசியம்
ஆகியனவும் உண்டு என்பதால்
பிரஸர், மற்றும் கொலஸ்டரோல் நோயாளிகளுக்கும் ஏற்றது.

நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் கூட உகந்தது

பிஞ்சு வாழைக்காயை எடுத்து பால் கறியாகவும், சரக்குத் தண்ணியாகவும், சம்பலாகவும் பத்திய உணவாக நோயாளிகளுக்கும், குழந்தைகட்கும் கொடுப்பர்.

வாயுத் தொல்லை தராமல் இருக்க பெருங்காயம், பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து சமைத்துக் கொள்ளுவர்.

வாழைக்காய்க் காரப்பிரட்டல்


முற்றிய சாம்பல் வாழைக்காய் -2

குழம்பு தயாரிக்க

தக்காளிப் பழம் - 4
வெங்காயம் -2
பச்சை மிளகாய்- 1
பூண்டு – 4 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 2 ரீ ஸ்பூன்
தனியாப் பொடி – 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
வறுத்து அரைத்த சோம்பு, கறுவாப் பொடி - ¼ ரீ ஸ்பூன்
புளிக் கரைசல்- தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை, மல்லித்தழை-சிறிதளவு.

பொரிக்க

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை-

வாழைக்காயைத் தோல் சீவி, தண்ணீரில் முழுதாகப் போட்டுவிடுங்கள்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் தனித்தனியே வெட்டி வையுங்கள்.
பூண்டை பேஸ்ட் ஆக்கி வையுங்கள்.

வாழைக்காயை எடுத்து நீளவாக்கில் இரண்டாகக் கீறி எடுங்கள். அரை அங்குல அகல துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு கொதிக்க, வாழைக்காயைப் போட்டு பென்னிறமாகப் பொரித்து எடுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் ஓயிலில் கடுகு கறிவேற்பிலை தாளித்து, பூண்டு சேர்த்துக் கிளறிக் கொள்ளுங்கள். வெங்காயம் போட்டு வதக்குங்கள்.

வதங்கிய பின் பச்சை மிளகாய், வெந்தயம் சேர்த்து, தக்காளி போட்டுக் கிளறுங்கள்.

தக்காளி வெந்த பின் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, உப்பு, புளித் தண்ணீர் விட்டு பொரித்த வாழைக்காயைக் கொட்டி கொதிக்க விடுங்கள்.

கொதித்து இறுக்கமாக வர கறுவாப் பொடிதூவி கிளறி,மல்லித் தழை போட்டு இறக்குங்கள்.

சாதம், அப்பம், புட்டு, சப்பாத்தி, பிரட், தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட சுவை கொடுக்கும்.

(தேங்காய்ப் பால் சேர்க்க விரும்பினால் இறக்குமுன் கட்டிப்பால் சிறிதளவு விட்டு இறக்குங்கள்.)

மாதேவி

9 comments:

  1. மிகவும் அருமை..மாதேவி..உங்களிடம் பிடித்ததே செய்முறையோடு தகவல்களையும் வட்டார வழக்குகளையும் தரும் பாணிதான்! மிகுந்த சுவையாக இருக்கிறது - பதிவும், வாழைக்கறியும்!! :)

    ReplyDelete
  2. எப்போதும் போலவே அருமை. வாழையைப் பற்றிய விவரங்களுக்கு நன்றி. நான் வாழைக்காயில் புட்டும் டோஸ்டும்தான் செய்வது வழக்கம், [பஜ்ஜியும்:)]. புதிய செய்முறை இது.

    //கறுவாப் பொடி// அப்படின்னா என்ன்ங்க?

    ReplyDelete
  3. உங்கள் வருகையும், கருத்துக்களும் உற்சாகம் அளிக்கின்றன.

    மிக்கநன்றி சந்தனமுல்லை.

    ReplyDelete
  4. வாருங்கள் ராமலஷ்மி உங்கள் கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றன.நன்றி.

    கறுவாப்பொடி என்றால் கறுவாப் 'பட்டை'யை வறுத்துப் பொடிபண்ணி எடுப்பது.

    ReplyDelete
  5. ஓ, பட்டையா? விளக்கத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  6. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  7. குழந்தைகள் தின வாழ்த்துக்கு நன்றி தமிழ்நெஞ்சம்.

    ReplyDelete
  8. வணக்கம் மாதவி.. உங்கள் தளத்திற்கு இப்பொழுதுதான் வருகின்றேன்.. அருமை எல்லாமே அழகு தொடருங்கள்..


    வாழையும் அவற்றின் பயன்பாடு, புகைப்படம்..... அப்பறம் சமையல் விளக்கம் எல்லாமே தனி சிறப்புடன் இருக்கு.... வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வாருங்கள் ஆ.ஞானசேகரன். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்