Saturday, May 8, 2010

தேங்காய்த் துருவல் ரவா கிச்சடி

"ஈவினிங் ரிபன் என்ன?" "உப்புமா." "உப்புமா வா?" 'ஆமாம்."
கேட்டதுமே முகம் சுளித்துப் போய்விடும்.


முகத்தை மலரச் செய்வோமா?

ரவையில் கிச்சடி, புட்டு, பொங்கல், தோசை, இட்லி, குழிப் பணியாரம், கேசரி, லட்டு, சுஜி ஹல்வா, இனிப்பு வகைகள்,கேக் தயாரித்துக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் மில்க் புடிங் தயாரித்துக் கொள்வார்கள்.

ரவா காதம் - ராம காதம் அல்ல.


ரவை என்பது தமிழ்ச் சொல் அல்ல. மராத்தியில் ரவா என்பதே தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென் இந்திய மொழியில் ரவை அல்லது இரவை ஆயிற்று. வட இந்தியாவில் இது சுஜி.

ஆங்கிலத்தில் இது Semolina ஆயினும் இது ஆங்கிலேயரின் சொல்லும் அல்ல. இத்தாலியர்களின் Semola விலிருந்து மருவியதாகும்.

ஆனால் இது இத்தாலியர்களின் சொல்லும் அல்ல. புராதன லத்தீன் மொழியின் சிமிலா (Simila) இருந்து வந்ததாகும். அதன் உண்மையான பொருள் மா என்பதுதான்.

லத்தீன் சிமிலாவானது கிரேக்க மொழியின் செமிடலிஸ் (Semidalis) ஆகும். ஆனால் இவை யாவற்றின் ஆரம்பம் அரேபிய மொழியின் சமீட் (Samid - Sameed) ஆகும் என்று மொழி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் இது டியூரம் என்ற வகை தானிய வகையிலிருந்து தயாரிக்கப்பட்டது. அது சற்று மஞ்சள் நிறமானது. தற்பொழுது பெரும்பாலும் சற்று மென்மையான தானிய வகையான கோதுமையிலிருந்து கிடைக்கிறது. இது நல்ல வெள்ளை நிறமானது.

எமது மூதாதையர்கள் அரிசியை ரவைபோல குறுணல்களாக உடைத்து எடுத்து உப்புமா செய்வதுண்டு.

ரவையில் அடங்கியுள்ள போஷாக்கு அளவு

ரவையை மிகுந்த போசாக்குள்ள உணவு என்று சொல்ல முடியாது. அதில் முக்கியமாக மாப்பொருள் உண்டு.
புரதமும் ஓரளவு இருக்கிறது.
ஆனால் கொழுப்பு மிகக் குறைவாக இருப்பது நல்ல விடயம் (நாம் நிறைய எண்ணெய் சேர்த்து சமைத்து அதைக் கெடுத்துவிடக் கூடாது)

100 கிறாம் ரவையில் போசனை அளவுகளாவன

காபோஹைதரேட் - 72.83
புரதம் - 12.68
நார்ப்பொருள் - 3.9
கொழுப்பு – 1.5

இது சுவையான தேங்காய்த் துருவல் கலந்த கிச்சடி எனச் சொல்லலாமா? பார்க்கும்போது புட்டுப் போலவும் உதிர்ந்து இருப்பதால் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
பொரித்த மரக்கறிகள் சேர்ப்பதால் சுவை கூடும்.

இது எனது அம்மாவின் செய்முறை.


தேவையான பொருட்கள்

ரவை - 1 டம்ளர்
உருளைக் கிழங்கு – பெரியது 1
கரட் - 1
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 2
கடலைப் பருப்பு – 2 ரீஸ்பூன்
உழுத்தம் பருப்பு - 2 ரீஸ்பூன்
கடுகு – 2 ரீ ஸ்பூன்
இஞ்சிப் பேஸ்ட் சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி- தேவையான அளவு.
ஓயில் அல்லது நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டம்ளர்

செய்முறை

ஈவினிங் செய்வதாக இருந்தால் மதியம் ரவையை வறுத்து ஆறவைத்துவிடுங்கள்.
ஆறிய ரவைதான் இதற்கு கூடுதல் சுவையைத்தரும்.

கிழங்கு, கரட், வெங்காயம் சிறிய துண்டுகளாக தனித்தனியே வெட்டி வையுங்கள்.
மிளகாயை கீறி வைத்துவிடுங்கள்.

தாச்சியில் ஓயில் விட்டுக் கொதிக்க உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி பிரட்டிய உருளைக் கிழங்கை ஓயிலில் போட்டு வதக்குங்கள்.

சற்று வதங்கிய பின் கரட்டையும் உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி பிரட்டி எடுத்து ஓயிலில் போடுங்கள்.

அடுப்பைக் குறைத்து வைத்து தட்டுப் போட்டு ஒரு நிமிடம் மூடிவிடுங்கள்.

இடையே திறந்து பிரட்டுங்கள்.

மெதுமையாக வந்தபின் தாச்சியின் ஓரத்தில் ஒதுக்கிவிட்டு உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி பிரட்டிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

ஓரளவு வதங்கிய பின் எல்லாவற்றையும் சேர்த்துவதக்கி எடுத்து கோப்பை ஒன்றில் வையுங்கள்.

அதே தாச்சியில் சிறிது ஓயில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உழுத்தம் பருப்பு, கருவேற்பிலை, இஞ்சி பேஸ்ட் வதக்கி தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்துவிடுங்கள்.

ஒரு டேபிள் தேங்காய்த் துருவலையும் தண்ணீரில் போட்டுக் கலக்கிவிடுங்கள். இதனால் கிச்சடியின் நிறம் வெள்ளையாக இருக்கும்.

தண்ணீர் கொதிக்க ரவையை சிறிது சிறிதாகக் கொட்டிகிளறுங்கள்.

அடுப்பைகுறைத்து சிம் இல் வைத்து கிளறுங்கள்.

நன்கு உதிர்ந்து வர அடுப்பை நிறுத்தி விடுங்கள்.

இடையிடையே கிளறிவிட்டு சற்று ஆறிய பின் பொரித்து எடுத்து வைத்த மரக்கறிகள், தேங்காய்த் துருவல் கலந்து பிரட்டி விடுங்கள்.

பொரித்த மரக்கறிகள் சேர்ந்த வாசமான உதிர்ந்த வெள்ளை நிறக் கிச்சடி தேங்காய் மணத்துடன் கமகமக்கும்.


இதற்கு வாழைப்பழம், மாம்பழம் சுவை தரும்.

காரம் விரும்புவோர் காரச் சட்னி அல்லது உருளைக்கிழங்கு, சோயா பிரட்டல், தக்காளி குழம்பு ஏதாவது ஒன்றுடன் சாப்பிட்டால் சுவையுடன் பாட்டும் வரும்.

என்னவென்று சொல்வதம்மா... கிச்சடி உன்தன்.... சுவை அழகை.

(குறிப்பு - உப்புமா, கிச்சடிக்கு ஆட்டிறைச்சிப் பிரட்டல் நல்ல கொம்பினேசன். )

மாதேவி.



22 comments:

  1. நல்ல பதிவு தோழி , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Rava - Thank you for the information about Rava. Thanky uo for the recipe too. :-)

    ReplyDelete
  3. //உப்புமா கேட்டதுமே முகம் சுளித்துப் போய்விடும். //

    ஸ்வீட், காரம் மாதிரி கொஞ்சம் தந்தா தேவல அதையே முழுநேர டிஃபனா தந்தா ? மனுஷன் என்ன ஆவரது.ஹி...ஹி...

    ReplyDelete
  4. வாருங்கள் சசிகுமார்.
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. மிக்கநன்றி சித்ரா.

    ReplyDelete
  6. ஜெய்லானி.
    ஸ்வீட், காரம்தான் பிடிக்குமா? செய்திடுவோம். கருத்துக்கு மிக்கநன்றி.

    ReplyDelete
  7. சமையல் குறிப்போடு மற்ற தகவல்கள் அசத்தல்! கிச்சடியோ, உப்புமாவோ பழத்துடன் சேர்த்து சாப்பிடும் சுவையே தனிதான். வழக்கம் போலவே Super Presentation. :)

    ReplyDelete
  8. தேங்காய்த் துருவல் ரவா கிச்சடி படத்தில் பார்க்கும் போதே டேஸ்ட்டா இருக்கும் என்று தெரிகிறது. வெறுமனே சமையல் முறையை சொல்லாமல் அதில் உள்ள போசாக்குகளையும் சொல்லுவதற்கு மிக்க நன்றி......

    ReplyDelete
  9. சுவை பட நல்ல குறிப்பு கொடுத்திருக்கிறீர்கள் மாதேவி.
    ரவையில் இத்தனை விதமாகச் சிற்றுண்டி செய்ய முடியுமா
    என்று அதிசயமாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  10. ஷங்கர் உங்கள் கருத்து மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி ஜெயா.

    நிச்சயமாகச் சுவையானதுதான்.

    ReplyDelete
  12. வாருங்கள் வல்லிசிம்ஹன்.

    வருகை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

    கருத்துக்களுக்கு மிக்கநன்றி.

    ReplyDelete
  13. மாதேவி

    ஒரு வித்தியாசமான ரவா கிச்சிடி

    அருமை, ரவை பற்றின விளக்கமும் அருமை

    ReplyDelete
  14. வித்தியாசமானதுதான் ஜலீலா.எனது பிள்ளைகளுக்கு ரொம்பப்பிடிக்கும்.
    மிக்க நன்றி ஜலீலா.

    ReplyDelete
  15. என்னவென்று சொல்வதம்மா-கிச்சடி உந்தன் பேர்ழ்கை!

    மாதேவி,ரவாவை பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வதில் தான் சிறப்பு.

    ReplyDelete
  16. கிச்சடி சூப்பரா இருக்குப்பா. வாழைப்பழம் காம்பினேஷன் நல்லாவே இருக்கும்.

    ReplyDelete
  17. வாருங்கள் கோமதி அரசு.உங்கள் வருகைக்கும் "சிறப்பு"க்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. ஆமாம் அமைதிச்சாரல்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  19. ஆஹா அருமையான கிச்சடி.தேங்காய் சேர்த்து பிரமாதமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  20. படிக்கறப்பவே சாப்பிட்ட மாதிரி உணர்வு நீங்க எழுதினா விதம்... கண்டிப்பா செய்து பாக்கறேன்... நன்றி

    ReplyDelete
  21. தேங்காய் சேர்த்தால் பிரமாதம்தான். நன்றி ஸாதிக்கா.

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி.
    செய்து சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்