Wednesday, January 21, 2009

பலாக்கொட்டை பொரியல்

'பிள்ளை கடிக்க முடியாமல் கிடக்கு' என்பார் அப்பா. சற்று மொறுகலாகப் பொரித்தால்.

'என்னம்மா சப்பென்று வாய்க்குள் நொளுநொளுக்குது' என்பான் மகன் சற்று முன்னதாகவே எடுத்தால்.

ஆம்! கடிப்பதற்கு நல்ல கடினமாக இருக்கும். ஆனால் சற்று முன்பே எடுத்துக் கொண்டால் மொறுமொறுப்பு இல்லாமல் வந்துவிடும்.

இரண்டையும் தவிர்க்க பலாக்கொட்டைகளை முதலில் சற்று அவித்தெடுத்த பின்பு பொரித்துக் கொண்டால் உள்ளே மாப்பிடியாகவும் இருப்பதுடன், மேலே மொறுமொறுப்பு சேர்ந்ததாகவும் இரண்டு வகை சுவையையும் சேர்ந்து கொடுக்கும்.

வயதானவர்களும் சப்பிச் சாப்பிடக் கூடியதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பலாக்கொட்டை – 15
மிளகாய்ப் பொடி – ¼ ரீஸ்பூன்
விரும்பினால் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி - சிறிதளவு.
உப்பு தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

நல்ல கெட்டியான பலாக்கொட்டைகளாகத் தேர்ந்தெடுங்கள். மிகப் புதியதும் சரிப்படாது. நாட்பட்டதும் கூடாது. அவற்றின் மேல்தோலை நீக்கி நீர் விட்டு இரண்டு கொதிவர அவித்து எடுங்கள்.

ஆறிய பின்பு அவற்றை குறுக்கே ஒரு வெட்டு வெட்டி இரண்டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெயை கொதிக்க வைத்து பொரித்து எடுங்கள். பொன்னிறமாகப் பொரித்து எடுப்பது அவசியம். எண்ணெயை வடிய விட்டு உப்பு மிளகாய் பொடி தூவி விடுங்கள். இம்முறையில் பொரித்த பின் பொடிகள் தூவுவது வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.

விரும்பினால் வழமை போன்று பொரிப்பதற்கு முன்பே உப்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி பிரட்டிப் பொரித்துக் கொள்ளலாம்.

மாதேவி

9 comments:

  1. அன்பின் சகோதரி..
    எனக்குப் பிடித்தமான உணவுப்பொருளைப் போட்டு வாயூற வைத்துவிட்டீர்கள்.
    வீட்டில் அம்மா அவித்துச் செய்வார்கள்.சில நேரங்களில் நீங்கள் சொன்ன மசாலாக்களில் பிரட்டி,பின்னர் அரிசி மாவில் தோய்த்தெடுத்துப் பொறிப்பார்கள். சுவையாக இருக்கும்.
    நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க வெளிநாட்டுக்குக் கூட பார்சலில் அனுப்பியிருந்தார்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரி :)

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு நன்றி ரி்ஷான்.உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறதே. நீங்களே குறிப்புகள் எழுதலாம் போலிருக்கறதே. எழுதுங்களேன்.

    ReplyDelete
  3. எனக்கும் ரொம்ப பிடிச்சது இது... ஹ்ம்.. அம்மா தான் நல்லா செய்வாங்க.. பலாக்காய் பொரியலும் ரொம்ப பிடிக்கும்.. வீட்டில் ஒருத்தரும் சரியா சாப்பிடலன்னா ... நான் மட்டும் சாப்பிடன்னு செய்ய மனம் வரதில்ல..

    ReplyDelete
  4. கருத்திற்கு நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி

    ReplyDelete
  5. சமையற் குறிப்பிற்கு முன்வரும் முகப்புரைகள் மிகவும் சுவார்ஸமாக உள்ளன.

    ReplyDelete
  6. வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
    சுட்டி இதோ!
    http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_24.html

    ReplyDelete
  7. நன்றி ஜோதிபாரதி. சிலநாட்களாக வலைக்கு உலா வராததால் பார்க்க லேட் ஆகிவிட்டது

    ReplyDelete
  8. ஆகா..இது எங்க அம்மா சூப்பரா செய்வாங்க! அப்புறம் வேக வைச்சும் இல்லன்னா கரிஅடுப்புல சுட்டும் சாப்பிட்டு இருக்கோம், சின்ன வயசுல..விடுமுறைக்கு மாமா ஊருக்கு போகும்போது! நினைவூட்டியமைக்கு நன்றி மாதேவி!

    ReplyDelete
  9. ஆமாம். சின்ன வயசுக்கு ஏற்ற நொறுக்குத் தீனிதான் இவையெல்லாம்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்