Tuesday, September 23, 2008

காரம் சுண்டல்



அகிலம் எல்லாவற்றிற்கும் அன்னையாக விளங்கும் ஆதிபராசக்தியை வணங்கும் முகமாக கொண்டாடப்படும் விழா நவராத்திரியாகும். ஒன்பது நாட்களும் விரதம் இருந்து அன்னையைத் துதித்து வணங்குவர்.

முதன் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கையம்மனை வழிபடுவர். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தைத் தரும்படி வேண்டி இலக்ஷிமிதேவியை வணங்குவர். இறுதி மூன்று நாட்களும் கல்வியை நல்கும்படி சரஸ்வதிதேவியைப் பிராத்திப்பர். பத்து நாளும் கோயில்களில் விசேட பூசை நடைபெறும். வீடுகளில் கொலுவைத்து மாலையில் அன்னையை வணங்கிப் பூசித்து குங்குமம், பிரசாதம் கொடுத்து மகிழ்வர். ஒன்பதாம் நாள் இல்லங்கள் தோறும் சரஸ்வதிதேவியைத் துதித்து விமர்சையாக பிரசாதங்கள் படைத்து விழாக் கொண்டாடுவர்.

பத்தாம் நாள் விஜயதசமி. அன்று பாலருக்கு ஏடு தொடக்கும் நாள் விசேடமாகக் கொண்டாடப்படும். அன்னையை வணங்கி கல்விச் செல்வத்தைத் தந்தருளும்படி பிரார்த்தித்து நெற்தானியத்தில் ஓம் எனும் பிரணவத்தை எழுதி கல்வி தொடங்குவர். அனைத்துச் சக்திகளையும் கொண்ட தேவி மகிசாசுரனுடன் போரிட்டு வென்றதாக புராண வரலாறு கூறுகிறது. ஆதலால் அம்மனுக்கு மகிசாசுரவர்த்தனி என்ற பெயரும் வரக் காரணமாயிற்று.

விஜயதசமியன்று இரவு வெற்றி நாளாக சூரன் போர் இடம் பெறும். மானம்பூ எனச் சிறப்பாகக் கொண்டாடப்படும். போருக்கும் புறப்படும் அலங்காரத்துடன் அம்மன் சூலம் தாங்கி வீதிவலம் வந்து மகிசாசுரனை அழித்த காட்சிப்படலமாக வாழை மரத்தை வெட்டி குங்குமம் பூசி சொக்கப்பானையை எரித்து மகிழ்ச்சி கொண்டாடும் விழா நடைபெறும்.

இருவாரங்களில் ஆரம்பமாக இருக்கும் நவராத்திரி விழாவில் பிரசாதம் படைத்து மகிழ இக் காரம் சுண்டலை செய்து கொள்ளுவோம்.

தேவையான பொருட்கள்


1. கடலை ¼ கிலோ
2. மாங்காய் பாதி
3. வெங்காயம் - 1
4. காய்ந்த மிளகாய் - 2
5. தக்காளி – 1
6. கரட் - 1
7. உப்பு தேவையான அளவு

கார சோஸ் தயாரிக்க

1. மிளகாய்ப் பொடி ½ ரீ ஸ்பூன்
2. தக்காளிச் சாறு – 1 கப்
3. உப்பு தேவையான அளவு
4. எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்
5. தண்ணி - ½ கப்

தாளிக்க

கடுகு - ½ ரீ ஸ்பூன்
சீரகம் - ½ ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்
தேங்காய்த் துண்டுகள் - ¼ கப் (விரும்பினால்)
ஒயில் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கடலையை 5-6 மணிநேரம் ஊறவைத்து எடுத்து குக்கரில் சிறிது உப்புச் சேர்த்து தண்ணீர் விட்டு 3 விசில் வைத்து எடுங்கள்.

மாங்காய், வெங்காயம், காய்ந்த மிளகாய், தக்காளி, கரட் ஆகியவற்றை தனித்தனியே சிறியதாக வெட்டி வையுங்கள்.

ஒயில் விட்டு கடுகு, சீரகம், கறிவேற்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய் வெங்காயம் வதக்கி தேங்காயத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, வெட்டிய மாங்காய், தக்காளி, கரட் லேசாகக் கிளறி கடலையைக் கொட்டி பிரட்டி இறக்குங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் ஒயிலில் தக்காளிச் சாறைவிட்டு வாடை போகக் கிளறி, ½ கப் தண்ணீர், மிளகாயப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க இறக்கி வையுங்கள்.
சுண்டல் பரிமாறு முன் சோசை ஊற்றி விடுங்கள்.

குறிப்பு


கௌபீ, தட்டைப் பயறு, கடலைப் பருப்பு, பட்டாணி, மொச்சை போன்ற எல்லாவகை பருப்பு வகைகளிலும் இவ்வாறு செய்து கொள்ளலாம்.

காரம் சுண்டலை கடதாசியில் கோர்ன் போல சுருட்டிச் சாப்பிடுவது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

-: மாதேவி :-

3 comments:

  1. பார்க்கும் பொழுதே வாய் ஊறுகிறதே....

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. கவின் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சாப்பிட்டுப் பாருங்கள் நிச்சயம் சுவையாக இருக்கும்

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்