Thursday, September 11, 2008

மண் சுமக்க வைத்தது
இதன் ருசியில் மயங்கியவராக நாம் முதன் முதலில் அறிந்தது இவரைத்தான். எல்லாம் வல்லவராக எங்கும் நிறைந்தவரான அவரே மயங்கினால் நானும் நீங்களும் எம்மாத்திரம். தமிழ் இந்துக்கள் யாவரும் அறிந்த கதைதான்.

எமது முதற் கடவுள் சிவனாரே மண் சுமக்கும் கூலியாளியாக உருமாறி செம்மனச் செல்வியாரிடம் வேலைக்குப் பேரம் பேசினார். உதிர்ந்த பிட்டுக்கள் எல்லாம் தனக்கு தந்தால் போதும் மண் அள்ளிப் போடுவதாகச் சொன்னார். அன்று ஆச்சி அவித்த பிட்டுக்கள் உதிர்ந்தன அவன் லீலையால்.

எல்லாம் உதிர்ந்ததால் அளவுக்கு அதிகமாக உண்டு, உண்ட களைப்பால் நித்திரை செய்தான். வேலை செய்து முடியாததால் பாண்டிய மன்னனின் காவலாளியிடம் சவுக்கடி வாங்கிய கதையை சிறுவயதில் படித்தோம். படித்த நாட்களில் அதன் ருசியை கனவுகளிலும் கண்டு பசி கொண்டு எழும்பினோம்.

ரிச் நட்ஸ் குழல் பிட்டு

தேவையான பொருட்கள்

• வறுத்த அரிசிமா – 2 கப்
• அவித்த மைதா – ¼ கப்
• தேங்காய்த் துருவல் - ½ மூடி
• உப்பு சிறிதளவு
• வாழையிலை -1
• அவித்த கடலைப் பருப்பு- 1 கப்
• வெல்லத் தூள் - ¼ கிலோ
• பிளம்ஸ் 100 கிராம்
• கஜூ- 100 கிராம் (பொடித்தது)
• ஏலத்தூள் - ½ ரீ ஸ்பூன்

செய்முறை

மாவைப் பாத்திரத்தில் போட்டு உப்புக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்தெடுத்து சிறிது சிறிதாக ஊற்றி மரக்கரண்டிக் காம்பால் கிளறுங்கள். மா உதிரி உதிரியாக வருமட்டும் கிளற வேண்டும். சிறுசிறு உருண்டைகள் போல உருண்டு வரும். சற்று சூடு ஆற கைகளாலும் உருத்திக் கொள்ளலாம். அல்லது ஒரு நீளமான ரேயில் போட்டு விளிம்பில்லாத டம்ளரால் கொத்தி ஒரே அளவானதாக செய்து கொள்ளுங்கள்.


வாழையிலையை எடுத்து சுடுநீரில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

பிட்டுப் பாத்திரத்தை எடுத்து நீர்விட்டுக் கொதிக்க வையுங்கள்.
அவித்த கடலைப் பருப்பு, வெல்லத் தூள், பிளம்ஸ், கஜூ-,தேங்காய்த் துருவல், ஏலத்தூள் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குழலை எடுத்து அடியில் தட்டை நேராக வைத்து சிறிதளவு பருப்பு கலவையை தூவி விடுங்கள். பிட்டு மாவை மெதுவாக கையில் நிறைத்து எடுத்து குழலில் போடுங்கள். மீண்டும் பருப்பு கலவையை போட்டு அதன் மேல் புட்டுமா என்ற ஒழுங்கில் போட்டு முடிவில் பருப்புக் கலவையுடன் முடியுங்கள்.

தண்ணீர் நன்றாக கொதித்து ஆவி வெளிவர குழலை மேலே வைத்து மூடியால் மூடிவிடுங்கள். பிட்டு அவிய 3-5 நிமிடங்கள் எடுக்கும். ஆவி குழலிருந்து வெளிவரும். கமகமக்கும் பிட்டு மணமும் சேர்ந்து வரும். ஆவி 2-3 தடவை வெளிவந்ததும் குழலை இறக்கி மூடியைத் திறந்துவிடுங்கள்.

வாழையிலையை ரே ஒன்றில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பிட்டுக்குழல் சற்று ஆறியிருக்கும். குழலை எடுத்து சரித்து மெதுவாக பிட்டுத் தடியினால் தள்ளுங்கள். பிட்டு உடையாது வாழையிலையில் அழகாக வந்து சேரும். (சூட்டுடன் தள்ளினால் உதிர்ந்துவிடும்) மிகுதி மாவையையும் முன்போலவே செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வாசமான இனிய நட்ஸ் பிட்டு தயாராகிவிட்டது. இனிப்பானதால் மாம்பழம், பலாப்பழம் இரண்டில் ஒன்றை சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அமிர்தம்தான். வாழைப்பழம் சேர்த்துக் கொண்டால் செகண்ட் கிரேட் மட்டுமே.

குறிப்பு

இனிப்பில்லாது தனியே தேங்காய்த் துருவலை மட்டும் சேர்த்து செய்து கொண்டு கறி, சம்பல், குழம்புவகை, சொதி ஆகியவற்றுடனும் சாப்பிடலாம்.

கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், மரவள்ளி சிப்ஸ்சும் சுவைதரும்.

எல்லா வகை அசைவ கறிகளும் மெருகூட்டும்.

மைதா, குரக்கன்மா, ஆட்டா, கோதுமை மா வகைகளிலும் இதே போன்று செய்து கொள்ளலாம்.

சாம்பார் வெங்காய சிப்ஸ்ம் சுவை கொடுக்கும்.

வெங்காய சிப்ஸ் பொரியல்


தேவையான பொருட்கள்.

1. சாம்பார் வெங்காயம் - ¼ கிலோ
2. பச்சை மிளகாய் - 1
3. உப்பு தேவையான அளவு
4. மிளகாய்ப் பொடி – ¼ ரீ ஸ்பூன்
5. மஞ்சள் பொடி சிறிதளவு
6. பொரிப்பதற்கு நல்லெண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்.

செய்முறை

வெங்காயத்தை நீளவாக்கில் ஒரே அளவாக வெட்டி வையுங்கள். பச்சை மிளகாயை துண்டங்களாக வெட்டி எடுங்கள். மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி பிரட்டி வையுங்கள்.

எண்ணெய் கொதித்ததும் உப்பை வெங்காயத்தில் சேர்த்துப் பிரட்டி எண்ணெயில் போடுங்கள். கவனமாக இடையிடையே பிரட்ட வேண்டும். அரை வேக்காடு பொரிந்த பின் அடிக்கடி கிளற வேண்டும்.

பொரிந்து வரும்போது விரைவில் கருகக் கூடும் என்பதால் தீயை அளவாக வைத்து பிரட்டிக் கொள்ளுங்கள். கலகலப்பாக சிவந்த நிறத்தில் வர எடுத்து பேப்பரில் போட்டு எண்ணெய் வடிய விடுங்கள்.

கமகமக்கும் வெங்காய சிப்ஸ் தயார்.

குறிப்பு

1. உப்பை முன்பே பிரட்டி வைக்கக் கூடாது. தண்ணீர் விட்டுவிடும்.

2. பொரிக்கும் நெற்வடியில் போட்டும் பொரித்துக் கொள்ளலாம்.

நன்றி:- மண் சுமக்கும் சிவனாரின் படம் சிவமுருகனின் ஆவணி மூலத் திருவிழா பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.

-: மாதேவி :-

3 comments:

 1. Excellent info. I am going to try this. Thanks.

  Radha

  ReplyDelete
 2. நன்றி ராதா. உங்கள் கருத்து இனிக்கிறது.

  ReplyDelete
 3. ரொம்ப அருமை மாதேவி

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்