Wednesday, December 3, 2008

பிறந்தநாள் சிற்றுண்டி




அண்மையில் நண்பர் ஒருவரது குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருந்தார்கள். இனிதே ஆரம்பமாகியது விழா. பின்னணியில் பாடல்கள் ஒலிக்க அனைவரினதும் வாழ்த்துக்களுடன் கைதட்டல்களுடன் கேக் வெட்டி ஊட்டி அனைவரும் மகிழ்ந்தனர்.

சிறுவர்கள் பலர் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர். சிறுவர்கள் இருந்தால் ஆரவாரத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லைதானே? குழந்தைகளின் டான்ஸ் ஆரம்பமாகியது. சுப்பர் டான்ஸர்கள் போன்று ஒரே ஆரவாரமும் ஆட்டமும் மகிழ்ச்சியாக நேரம் போனது. அனைவரும் மகிழ்ந்திருந்தனர்.

விருந்தினர்களுக்கு சிற்றுண்டி பரிமாறல் ஆரம்பமானது. அழகான தட்டுக்களில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. சாப்பிடத் தொடங்கியதும்தான் பிளேட்டை நோட்டம் விட்டால் லட்டு, கேக், தொதல், டொபி, டோனட், கோர்ன் இனிப்பு என உள்ள அனைத்து உணவுகளுமே இனிப்புச் சுவை உடையதாக இருந்தது தெரிந்தது.

இவ்வளவு இனிப்பு உணவுகளையும் வழங்கிவிட்டு அதற்கு மேல் இரவு உணவு தயார் படுத்தியிருந்தார்கள். குழந்தைகள் விரும்பி உண்பார்கள் எனஅனைத்து உணவுகளையுமே இனிப்பாக செய்திருந்திருப்பார்கள் போலும்.

அனைவருக்கும் ஏற்றவாறு

பலரும் கலந்து கொள்ளும் விழாக்கள் விருந்துபசாரங்களில் உணவுகள் பரிமாறும் போது நோயாளர்கள் வயோதிபர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு சகலவிதமான உணவுகளையும் கலந்தே பரிமாறிக் கொள்ளல் சிறப்பானதாக இருக்கும்.

உப்பு காரம் எண்ணெய் இனிப்பு அளவோடு இருத்தல் வேண்டும். வழங்கிய இனிப்பு உணவுகளில சிலவற்றைக் குறைத்து சான்ட்விச், பழவகைகள் பிஸ்கட் சேர்திதிருந்தால் அனைவருக்கும் உகந்ததாக இருந்திருக்கும். குழந்தைகளுக்கு சிறுவயது முதலே அனைத்து உணவுகளையும் சாப்பிடப் பழக்க வேண்டும்.

நாங்கள் எதைக் கொடுத்து வருகிறோமோ அதை அவர்கள் சாப்பிடப் பழகிவிடுவார்கள்.

எனவே குழந்தைகளைக் கவரும் விதமாகவும் சத்துடையதாகவும் சிலவற்றைத் தயாரித்து வழங்கிக் கொள்ளலாம்.

பழவகைகள், காய்கறிகள்

சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்த அன்னாசி, அப்பிள், கொய்யா, கிரேப்ஸ் பழவகைகள், அவித்தெடுத்த கரட், பீன்ஸ், கிழங்கு துண்டுகளுடன் வெள்ளரி;, தக்காளி, வறுத்தெடுத்த சோயா, சொசேஜஸ், இரால், ஏதாவது ஒன்றை ஒரு குச்சியில் குத்தி, பப்பாசி, அன்னாசி, அப்பிள், துண்டுகளில் குத்தி அப்படியே பரிமாறலாம். குச்சியுடன் இருப்பதால் விரும்பி கடித்து உண்பார்கள்.

சான்விச்

சான்விச்சை வித்தியாசமான உருவங்களில் செய்து கொள்ளலாம். சான்விச்சை ரோல் போலச் செய்து கொண்டு கரட் துண்டு ஒன்றை நீளமாக வெட்டி ரோல் பிரியாதபடி நடுவில் நிமிர்தி குத்திவிட்டால் பாரப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

கலர்புல் சான்விச்சாக செய்து கொள்ளலாம். சானட்விச் பிரட்டை எடுத்து மெல்லியதாக நீளவாட்டில் வெட்டி, அவித்த கரட், பீற்ரூட், மல்லி அல்லது புதினா சட்னி என ஒNர்ஞ், சிவப்பு, பச்சை என மூன்று நிறங்களில் தனித்தனியே பட்டர் மிளகு உப்பு எலுமிச்சம் சாறு கலந்து பிரட்டில் குறுக்கால் பூசி சுவிஸ் ரோல் போலச் சுருட்டி ஓயில் பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தால் இறுகியிருக்கும். எடுத்து வட்டங்களாக வெட்டிப் பரிமாறிக் கொள்ளலாம். கண்ணைக் கவரும் நிறமானதால் விரும்பி உண்பார்கள்.

ஐஸ்கிரீம் வழங்குவதாக இருந்தால் புருட்சலட் கலந்ததாகச் செய்து கொண்டால் பழச் சத்தும் கிடைக்கும்.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவாக கடலை, பருப்புத் தானியங்கள் செய்து சிறிய கப்களில் வழங்கலாம்.

சத்து மாக்கள் உழுந்து, பயறு, சோயா, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை வறுத்தெடுத்து பொரித்த அத்துடன் ஏலப்பொடி சர்க்கரை கலந்து சொகிளட் பேப்பர் அல்லது ரிசூ பேப்பரில் சுற்றிப் பரிமாறலாம். ஆவியில் அவித்து எடுத்த மோதகம் கொழுக்கட்டை உகந்தது பருப்பு வகைகள் சேர்வதால் சத்துடையதாகவும் இருக்கும்.

சான்விச் பிஸ்கட்

கிரக்கர் பிஸ்கட் பரிமாறும் பொழுது சலட் வகைகள் தயாரித்து சானட்விச் போலச் செய்து கொள்ளலாம். லெட்டியூஸ் இலையை வைத்து, வெள்ளரித் துண்டு, தக்காளி, வெங்காயம், உப்பு மிளகு தூள் பிரட்டி எடுத்து வைக்கலாம்.

கோவா உள்பகுதியை சிறிய மெல்லிய துருவிய சீஸ் வடிவில் வெட்டிக் கொண்டு இத்துடன் உப்பு, மிளகுதாள், சிறிது பட்டர் கலந்து எடுத்து பிஸ்கட், பிரட் மேல் தூவிக் கொள்ளலாம். சீஸ் துருவல் போல இருப்பதால் சீஸ் என விரும்பிச் சாப்பிடுவார்கள்.

மரக்கறி, மீன், முட்டை, இரால், இறைச்சி ஏதாவதை அவித்து எடுத்து உப்பு மிளகு தூள் கலந்து பிஸ்கட் மேல் வைத்து சிறியளவில் சோஸ் அல்லது சீஸ் துருவல் கலந்து விடலாம்.

பழவகைக் கலவைகள் டேட்ஸ், புதினா சட்னி வைத்து பரிமாறலாம்.

ஸ்டவ்ட் உணவுகள்

கிழங்கு வகைகளை அவித்து எடுத்து மசித்து பட்டர், கடுகு பேஸ்ட், மிளகு தூள் சேர்த்து கிறீம் செய்து பூசியும் ஐசிங் பாக்கில் போட்டு ஸ்டார் பூக்கள் போன்று அழகுபடுத்திக் கொள்ளலாம். கோர்ன் பேஸ்டி போல் செய்து இக் கலவையை நிறைத்தும் பரிமாறலாம்.

சிறிய பண், பேஸ்டி, கறிரொட்டி, செய்து கொள்லாம். பட்டாணி கிழங்கு மரக்கறிக் கலவை, சீனிச் சம்பல், அல்லது இறைச்சி, மீன், முட்டை கறிக்கலவை தயாரித்து நிறைத்துக் கொள்ளலாம். சாதாரண சிறிய பண்ணை எடுத்து நடுவில் குடைந்து கறியை ஸ்டவ் செய்யலாம். அல்லது பண்ணை குறுக்கே வெட்டி சானட்விச்சாகவும் செய்யலாம்.

அவித்த முட்டையை வெட்டி மஞ்சள் கருவை எடுத்து அத்துடன் அவித்த உருளைக்கிழங்கு, சீஸ் மிளகுதூள் தடவி ஸ்டவ் செய்யலாம். இதேபோல அவித்து எடுத்த இறைச்சியாலும் நிறைத்துக் கொள்ளலாம்.

:- மாதேவி -:


4 comments:

  1. நன்றி வினிதா.உங்கள் வருகைக்கு.

    ReplyDelete
  2. ஆகா ஆகா இப்படி எல்லாம் செய்யலாமா - முயல வேண்டுமே - முயல்வோம்

    ReplyDelete
  3. மீண்டும் நன்றி சீனா. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்