Tuesday, December 29, 2009

ஈரப்பலா ஸ்பெசல் கறி, சிப்ஸ்

செவ்வாய் காலை பரபரப்பாகவே விடிந்தது.

காலை உணவு முடித்து விரைந்தேன் வெள்ளவத்தை மார்க்கட்.

கண்கள் சுற்றி வந்தது எதை வாங்கலாம், எப்படிச் சமைக்கலாம்?

கத்தரி, பாவல், வெண்டி, புடொல், முள்ளங்கி...எனப் பரவியிருந்தது.

அதை அடுத்து ....

இன்றைக்கு சந்தைக்கு வந்துவிட்டதே!
மனம் துள்ளியது.

தம்பி ரிஷான் கேட்டிருந்த பொருள் அல்லவா?

விற்றுக்கொண்டிருந்த
'மல்லி'யை நோக்கி

'தெல் கீயத ?'

'திகாய் அக்கே கண்ட'


இன்று என்ன இவ்வளவு மலிவாகச் சொல்கிறான்.

கிடைத்தது மிச்சம்.

பையனிடம் மீண்டும் வாய் கொடுக்காமல், வந்த சிரிப்பையும் அடக்கி
வாயைக் கடித்தபடி நல்ல காயாகப் பார்த்துப் பொறுக்கினேன்.

'யாழ்ப்பாணத்துச் சனங்களுக்கெண்டால்' சாதாரண விலையிலும் 10-20 ருபா கூட விற்பார்கள்.

காசை கொடுத்துவிட்டு காயை வாங்கிக் கொண்டேன்.

அட சற்று அவன் பார்வை சரி.....இல்லை.

அட பயப்படாதீர்கள் என்னை நோக்கியல்ல!

தான் தந்த பலாக்காய் போட்ட ரிசுப் பையின் மேல்தான்! அவன் ஏக்கப் பெரு மூச்சு விடாத குறை.

யாழ்தேவிப் வாசகர்களுக்கு என்று தெரிந்துவிட்டால்......விலையும் மூன்று மடங்காகிவிடும்.

புகை வண்டிபோல் கூவிச் சத்தமிடாது, கடுகதியில் அடுத்த கடையை நோக்கிப் பாய்ந்தேன்.

இப்படி சமைத்தகாய் இருமடங்காகச் சுவைக்கும்தானே.

வெப்பவலயப் பிரதேசங்களில் இது வளரும். மலாய்தீவு, மேற்குப் பசுபிக் தாயகமாகக் கொண்ட மரம்.

இலங்கையின் தென்பகுதிகளில் கூடுதலாகப் பயிரிடப்பட்டிருக்கும்.
ஏனைய பிரதேசங்களிலும் பரவலாகவுள்ளது.

பயன்கொடுக்கும் காலத்தில் ஒரே மரம் இருநூறுக்கும் மேற்பட்ட காய்களைத் தரக் கூடியது.

காபோஹைதரேற் கூடியளவு உள்ளது. விற்றமின் சி யும் உண்டு.

முற்றிய பலாக்காயை தேர்ந்தெடுப்பது ஒரு கலை.
அனுபவம் கை கூடவேண்டும்.

வெளித்தோல் விரிந்த கட்டங்களாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பேன்.

விரலால் சுண்டிப் பார்த்தால் காயிலிருந்து 'டங்' என சத்தம் தெறிக்கும்.

தெறித்தது.

அப்படி எடுத்த காயில், சமைத்த கறியின் ருசியைச் சுவைத்துப் பார்க்க வாங்களேன்.

ஈரப்பலாக்காய்க் கறி


தேவையான பொருட்கள்

நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
தேங்காய்ப் பால் - ¼ கப்
பூண்டு- 4 பல்லு
இஞ்சி – 1 துண்டு
மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன்
மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு - தேவைக்கேற்ப
கடுகு- சிறிதளவு
கறிவேற்பிலை- சிறிதளவு
ஒயில் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை


பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள்.

உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள்.

தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

வெங்காயம் மிளகாய் வெட்டி எடுங்கள்.

ஒயிலில் கடுகு தாளித்து வெங்காயம் மிளகாய் வதக்குங்கள்.

வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேற்பிலை சேர்த்துவிடுங்கள்.
தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

நன்கு கொதித்து வர கிளறி இறுகிவர, மிளகுப் பொடி தூவி இறக்குங்கள்.

மிளகு வாசத்துடன் தாளித்த மணமும் பரவி நிறையும்.

பலாக்காய் சிப்ஸ்



பலாக்காயை மிகவும் மெல்லிய 2' நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

அடுப்பை மிதமாக வைத்து ஒயிலில் அவற்றைப் போட்டு கவனமாக அடிக்கடி கிளறுங்கள்.

பொரிந்து நன்கு கலகலப்பாக வந்ததும் எடுத்து எண்ணையை வடியவிடுங்கள்.

மிளகாய் பொடி, உப்பு பொடி சேர்த்துப் பிரட்டுங்கள்.

ஆறியதும் கண்ணாடிப் போத்தலில் காற்று நுளையாதபடி அடைத்து வையுங்கள்.

நல்ல மொறுமொறுப்பாய் இருக்கும்.

இரண்டுகால் எலிகள் தின்னாது விட்டால் 2-3 நாட்களுக்கு கெடாது இருக்கும்.

(பொரித்த பின் மிளகாய் பொடி, உப்பு பொடி என்பவற்றை குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்ப வகை வகையான காரத்தில் சேர்க்கலாம்)

மாதேவி

10 comments:

  1. எனக்கு ரொம்ப பிடிச்சது...

    ReplyDelete
  2. அண்ணாமலையான் said...

    எனக்கு ரொம்ப பிடிச்சது...

    வாருங்கள்.

    எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  3. ஈரப்பலாக்காயில் பொரியலா..

    //இரண்டுகால் எலிகள்
    வீட்டுக்குவீடு வாசல்படி :)

    அடிக்கடி பதிவிடுங்கள் மாதவி

    ReplyDelete
  4. ”வாருங்கள்.

    எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்கும்.”மாதேவி said...

    அப்ப எனக்கு கிடைக்காதே..?

    ReplyDelete
  5. அருமை. நன்றாக உள்ளது. இது வாயு பதார்த்தமா?. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. உண்மையில் ரொம்ப சூப்பரான ஐயிட்டம் கொடுத்து இருக்கீங்க, இனி பலாக்காய தேடி ஒடனும்.

    அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துக்கள்.

    உங்கலுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    பலாக்காய் சிப்ஸ் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  7. கேள்விப்பட்டது கூட இல்லை; பார்க்கவும் படிக்கவும் சுவையாக இருக்கிறது. Must try this. பலாக்காய்க்கு எங்கே போவது என்று தான் தெரியவில்லை.

    ReplyDelete
  8. ரசனைக்கு நன்றி cherankrish.

    ReplyDelete
  9. நன்றி பித்தனின் வாக்கு .

    இது உருளைக் கிழங்கு போன்று வாய்வு பதார்த்தம்தான் அதற்காகத்தான் பூண்டு,இஞ்சி,மிளகு சேர்த்துச் சமைக்கின்றோம்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்