Wednesday, December 30, 2009

தேங்காய் சாதம்


தென்னை வெப்ப மண்டலப் பிரதேசங்களுக்கானது.
கடற்கரை பிரதேசங்களில் பெரும்பாலும் பயிர் செய்யப்பட்டிருக்கும்.


இதன் அனைத்துப் பொருட்களும் பயன்படக் கூடியவை.

இளநீர், தேங்காய், கொப்பரை, எண்ணை சமையலுக்காகவும்
புண்ணாக்கு கால்நடை உணவாகவும்,
கள்ளு போதைக்காகவும்,
தென்ஓலை, காய்ந்த ஓலை குடில்மேய, வேலி அடைக்கவும்,
காய்ந்த பாகங்கள் விறகிற்காக.
சிறட்டை கரிக்காகவும் பயன்படுகிறது.

இளம்காய்கள் இளநீராக அருந்தவும் செவ்விளநீர் என்பது சிறப்பாக இளநீருக்கானது. இளநீரை வழுக்கையுடன் கலந்து குடிப்பதிலுள்ள சுவை தனிதான்.


முற்றிய தேங்காய் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை, தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவின் சமையல்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

யாழ்ப்பாணச் சமையலில் தேங்காய் உபயோகப் படுத்தாத சமையல்களே கிடையாது.

தேங்காய் சம்பலின் சுவை உங்களுக்குத் தெரியும் தானே!

நன்கு முற்றிய காய்களை உலரவைத்தெடுத்து கொப்பரை ஆக்கி சமையலில் பயன்படுத்துவர்.

மிகவும் உலர்ந்த கொப்பரைகளை அரைத்துப் பிழிந்து தேங்காய் எண்ணை எடுப்பர்.

தேங்காயுடன் மசாலாக்களை வைத்து அம்மியில் அரைத்தெடுத்த பாட்டியின் கூட்டுக்கறிகளின் சுவை உங்கள் நாக்கில் நீர் ஊறவைக்கிறதா ?

சாதங்கள் பல வகையானவை.

தேங்காய் சாதம்


பாரம்பரியமாக இருந்துவருவது இந்த தேங்காய் சாதம்.
மிகுந்த சுவையானது.
அவசர சமையலுக்குப் பெரிதும் ஏற்றது.
பட்சலருக்கு மிகவும் இலகுவாகச் செய்யக்கூடியது.

தேங்காயில் கொழுப்பு அதிகம் இருக்கிறதுதான் எப்போதாவது ஒருதடவை சாப்பிடுவதில் தவறில்லையே.



தேவையான பொருட்கள்


சாதம் - 1 கப்
தேங்காய்துருவல் - ½ கப்
கடலைப்பருப்பு -2 டேபல் ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 4
கஜு – 10
கடுகு – ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 2 ரீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நெய் அல்லது மாஜரின் - 2 டேபல் ஸ்பூன்.



செய்முறை


கடலைப்பருப்பு ,செத்தல் மிளகாய் வறுத்துப் பொடித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டேபிள் நெய்யில் கடுகு, உழுத்தம் பருப்பு, கறிவேற்பிலை தாளியுங்கள்.

அடுப்பைக் குறைத்து வைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறுங்கள்.

இத்துடன் கஜு சேர்த்து வறுத்துவிடுங்கள்.

சாதத்தைக் கொட்டி பொடித்த கடலைப் பருப்பு ,செத்தல் பொடி உப்பையும் கலவுங்கள்.

நன்கு கிளறி மேலே மிகுதி நெய்யை விட்டு கிளறி இறக்குங்கள்.

வறுத்த உழுத்தம் பருப்பு கஜுவுடன் தேங்காயின் மணம் கமழும் தேங்காய்சாதம் உங்களை சாப்பிட அழைக்கும்.

சைவம் சாப்பிடுவோர் கிழங்குப் பிரட்டல் பொரித்த பப்படங்களுடனும் பரிமாறலாம்.

அசைவம் சாப்பிடுவோர் மசாலாச் சிக்கன் சேர்த்துக்கொண்டால் சாதத்தின் சுவை அதிகமாகும்.

மாதேவி

4 comments:

  1. நாக்குல எச்சில் ஊறுது.. படங்கள் அருமையா இருக்கு... (ஆமா சுட்லி என்ன ஆச்சு? ஓகேவா?)

    ReplyDelete
  2. நன்றி அண்ணாமலையான்.

    ReplyDelete
  3. தேங்காய் பற்றிய விவரங்களுடன் செய்முறைக்கு நன்றி. செய்வதுதான் என்றாலும் சில மாறுதல்கள் இருக்கின்றனவே கற்றுக் கொள்ள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதேவி!

    ReplyDelete
  4. அருமையான சமையல் குறிப்பு நாளை செய்து பார்க்கிறேன்...!

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்