Wednesday, January 12, 2011

‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’

காலையில் எழுந்ததும் பழைய சோற்றுத் தண்ணீரை பானை மூடியில் விட்டு குடித்துப் பழகியவர்கள் எமது முன்னோர்.

ஆரம்பத்தில் தெருச் சந்தியில் அண்டாவை வைத்து தேத்தண்ணி போட்டு கொண்டு வந்து வீடு வீடாகக் தட்டிக் கூப்பிட்டு கோப்பைகளில் ஊற்றி குடிக்கப் பழக்கிக் கொடுத்துத்தான் தேநீரைக் குடிக்கப் பழக்கினார்களாம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்.

பிரிட்டிஷ் மகாராணியின் சின்னம் பதித்த தேநீர் குவளை

இது என்ன கசக்கிறதே என முகம் சுளித்தனர் பிற்பாடு குடிக்கக் குடிக்கப் பழகி இப்போது ஒரு நாளைக்கு 5- 6 தடவைகள் குடிப்போரும் இருக்கவே செய்கிறார்கள்.        

‘தேத்தண்ணி போட்டாச்சே’ இக் கேள்வியுடன் தான் இலங்கையின் காலைப் பொழுதுகள் விடிவிற்கு வரும். அத்துடன் இடையிடையே ‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’ என்ற கேள்விகளும் வீடுகளில் தொடரும். ‘கஹட்ட’, ‘சாயா’, ‘பிளேன் ரீ’ எனப்பலவாறு அழைப்பர்.

தேத்தண்ணி குடிக்க வாறீங்களா?

வெறும் தேத்தண்ணி, பசுப்பால் தேத்தண்ணி, ரின்பால் தேத்தண்ணி, பால் பவுடர் தேத்தண்ணி, என இன்னும் பலவும் தயாராகும்.

கொழுத்தும் வெயிலில் கூட விருந்தாளிகளை வரவேற்று “தேத்தண்ணி குடியுங்கோவன்” என இனிக்க உபசரித்து தேநீர் போட்டு வழங்குவார்கள்.

இந்தியர்கள் பால் காப்பிக்கு அடிமையானது போல இலங்கையர் தேநீருக்கு சலாம் போடுவார்கள்.காப்பியைவிட ரீயில் காபைனின் செறிவு கிட்டத்தட்ட அரைவாசி குறைவாக உள்ளமை தேநீரின் நன்மையாகும்.

தேயிலை பயரிடப்படும் இடங்கள்

முதன் முதல் 1824 தேயிலைச் செடி பிரிட்டிஷசாரால் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு ரோயல் பொட்டனிக்கல் கார்டன் பேரதெனியாவில் நாட்டப்பட்டது. 1867ல் ஜேம்ஸ் ரெயிலரால் தொழிற்சாலை அறிமுகப்படுத்தப்பட்டது. லுணகந்தவில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் பரவின.உலகம் பூராவும் பிரபலமானது இலங்கைத் தேயிலை. சிலோன் ரீ, பிளக் ரீ, வைற் சில்வர் ரீ, என தயாரிக்கப்பட்டது. இப்பொழுது பலவித ப்ளேவர்களிலும் கிடைக்கிறது. தேயிலையின் தரம் பயிரிடப்படும் இடத்தின் உயரத்தையும் கால நிலையையும் பொறுத்து அமையும். இலங்கையில் ஆறு இடங்களில் தேயிலை பயிரிடப்படுகிறது. காலி, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, ஊவா, டிம்புல்ல


தேயிலைக்குப் பெயர்பெற்ற நுவரெலியாவின் ஒரு  தேயிலைத் தோட்டம்

1500 மீற்றருக்கு மேல் நன்கு வளரும் தேயிலை. நுவரெலியாத் தேயிலை 6000 அடிக்கு மேல் வளர்வதால் சிறந்ததாக இருக்கும்.

ஆரம்பத்தில் தேயிலை இலை மருத்துவமாக பாவிக்கப்பட்டது. ஆதிதொட்டு பல இலைவகைகள் மருந்தாக உபயோகிக்கப்பட்டன. தேங்காய்ப்பூக் கீரை, கொத்தமல்லி, கற்பூரவல்லி, தூதுவளை, முடக்கொத்தான். மணத்தக்காளி, பொன்னாங்காணி போன்ற பலவும் நோயுற்ற வேளைஅவித்துக் குடிப்பார்கள். பசும் இலைகள் புதினா, கொத்தமல்லி,வெற்றிலை, துளசியும் அடங்கும்.

சீனாவின் பேரரசர் சென்னா முதல் முதலாக தேயிலையின் ருசியைக் கண்டு பிடித்தவராவார். குடிப்பதற்காக நீரைச் சுட வைக்கும்போது காய்ந்த தேயிலை இலை தண்ணீரில் விழுந்து தண்ணீரின் நிறம் மாற்றமடைந்தது. அந்த நீரைக் குடித்தபின் மிகுந்த புத்துணர்ச்சி கொடுத்தது. அவ்வாறு பிறந்ததுதான் தேநீர்.

சீனர்கள் தேநீர் தயாரிப்பதை ஒரு கலையாகவே செய்கிறார்கள். தயாரிக்கும் இடம் பாத்திரங்கள் யாவும் சுத்திகரிக்கப்பட்டு மிகவும் அழகுற இருக்கும். மிகவும் பக்குவமாக நிதானத்துடன் தயாரிப்பார்கள்.

இலங்கை ரீயின் பின்னணியில் மலையகக் கண்ணீரும் பல கதைகள் கூறும் என்பதை மறக்க முடியாது.

உறையும் குளிரில் உழைக்கும் இவர்களின் கண்ணீர் தேநீர் ஆகிறதா?

தேநீருக்கும் எமக்குமான உறவு சிறிய வயதில் ஆரம்பிக்கிறது. காய்ச்சல் வந்தால் 2-3 நாட்களுக்கு சாப்பாடுகிடையாது வெறும் தேத்தண்ணி குடிப்பதுதான் வழக்கமாக இருந்தது. அந்நாளில் பாடசாலை சென்றால் வீட்டிலிருந்து தேநீர் தயாரித்து எடுத்துவருவார்கள் எமது பாட்டிமார்.   காச்சல் விட்டபின் மொறுமொறு என இருக்கும் ரோஸ்பாணை தேநீருடன் தொட்டுச் சாப்பிடக்கொடுப்பர். மறுநாள்தான்; அப்பம் சோறு கிடைக்கும்.

ஆமணக்கு எண்ணை பேதி குடித்த அனுபவம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா?  அந்நாள்முளுவதும் பீளேன் ரீ மட்டும் குடிப்பார்கள். காலை மதிய உணவு ஒன்றும் கிடையாது.

தேயிலை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. தடிமன் வந்த நேரம் தேயிலையை சுடுநீரில் போட்டு கை வைக்கும் சூட்டுடன் அள்ளியெடுத்து முகத்தில் ஊற்றிக் கழுவுவார்கள். சுடச்சுட ஊற்றிக் கழுவுவதால் சளி நீங்கிச் சுகம் கிடைக்கும்.

மூக்கடைப்பு இருக்கும்போது தேயிலையைக் கொதி நீரில் போட்டு ஆவி பிடிப்பார்கள்.

சர்க்கரை, பால்சேர்க்காத ரீ குடிப்பது உடல் நலத்திற்குச் சிறந்தது எடையையும் அதிகரிக்காது. 

அன்ரிஓக்சிடனற் (Antioxidant) இருப்பதால் கான்சருக்கு எதிரானது. சூலகப் புற்றுநோய்கான சாத்தியத்தைக் குறைக்கும். கொலஸ்டரோல், பிளட் பிரசரைக் குறைக்கும். தடிமன் தொற்றுக்கும் எதிரானது என்றும் சொல்கிறார்கள்.
 

கிறீன் ரீ பற்றி இப்பொழுது அதிகம் பேசப்படுகிறது. சீனர்களின் பாரம்பரிய பானமான இது பல மருத்துவக் குணங்களை கொண்டது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்கள், இருதய நோய்களுக்கு எதிரானது. கெட்ட கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதன் மூலம் இருதய நோய்களைக் குறைக்கிறது எனத் தெரிகிறது. எடை குறைப்பிற்கும் நல்லது என்கிறார்கள்.

பலவித பிளேவர்களிலும் ரீ பாக்ஸ் கிடைக்கிறது. ஒரேன்ஜ், லெமன், மொறாக்கன் மின்ற், றம், இவற்றின் விலைகள் சற்று அதிகமாக இருக்கும். வாங்கினால் ஓரிரு இன பைக்கற்தான் முடியுமட்டும் தொடர்ந்து யூஸ் செய்ய வேண்டியதாய் வரும்.

சாதா தேயிலையுடன் ஒரு நேரத்திற்கு ஒரு சுவையாக தயாரித்து வீட்டில் உள்ளோரையும் அசத்தலாம். குளிருக்கு இதமாகவும் அருந்தலாம்.

லெமென் ரீ, ஆரேஞ் ரீ,

ரீயைத் தயாரித்த பின் குடிக்கும் அளவான சூட்டில் சீனி கலக்கியபின் சில துளி பழச் சாற்றை மேலே விட்டு சேர்த்து அருந்தலாம்.கறுவா ரீ

தேயிலையுடன் கறுவாவைப் போட்டு சுடுநீர் ஊற்றி மூடி போட்டு வைத்து  வடித்தெடுத்து சீனி சேர்த்து குடிக்கலாம்.

கராம்பு ரீ

கராம்பை லேசாகத் தட்டி ரீயுடன் போட்டு மூடி வைத்து எடுத்தால் சற்றுக் காரமான ரீ கிடைக்கும்.

ஏலம், கறுவா, இஞ்சி

ஏலம் ரீ

வாசமான  கமகம ஏலம் ரீ இதே போலத் தயாரிக்கலாம். இந்த ரீ பசியைத் தூண்டும் என்பார்கள்.

வனிலா ரீ

வனிலா ப்ளேவர் விட்டும் தயாரிப்பார்கள் சிலர்.

ஜஸ் ரீ

தேநீரைத்தயாரித்து ஆற குளிரவைத்தெடுத்து ஜஸ் கட்டிகள் போட்டு வெப்பத்துக்கு குடிக்க இதமாய் இருக்கும்.

இஞ்சி ரீ

சிறிய இஞ்சித் துண்டைத் தோல் நீக்கி கழுவி எடுத்து தட்டி தேயிலைத் தூள் போட்டுகொதிநீர் விட்டு முடிவைத்து வடித்தெடுப்பர். இது வயிற்றுப் போக்கு, சத்தி, சமிபாடடையாமையைத் தடுக்கும் என்பர்.

மசாலா ரீ

கராம்பு 1, ஏலம் 1, பட்டை ஒரு துண்டு கலந்து ரீயுடன் போட்டு குடிக்கலாம். இத்துடன் பாலும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஏலம், மிளகு, பட்டை, கராம்பு, இஞ்சி, திப்பலி, சுக்கு, பெரும்சீரகம் பொடியாக தேநீருடன் கலந்து இருமலுக்குக் குடிப்பார்கள்.கிறீன் ரீ, பாவற்காய் டயபற்றிஸ் ரீ,  ஹேபல் ரீ, வல்லாரை ரீ எனப் பலவும்
பைக்கற்களில் கிடைக்கின்றன.

மாதேவி

55 comments:

 1. //ரோஸ்பாணை//

  என்ன பொருள் இது? தேனீர் பற்றி விரிவான ஆய்வு.

  ReplyDelete
 2. டீ சுவையாவும், சூடாவும் இருக்கு..

  ReplyDelete
 3. பதிவு எழுதப்பட்ட நடையும் முறையும் தகவல்களும் நன்றாக இருக்கிறது. இந்தப்பதிவை மிகவும் ரசித்தேன். எழுதிப்பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. ஒரு தேத்தண்ணிக்குள் எத்தனை கதைகள் எத்தனை வரைட்டிகள்... அருமை.

  ReplyDelete
 5. சுவையான தேநீர் புராணம்.

  ReplyDelete
 6. அடேங்கப்பா எந்தா பெரிய விளக்கம். எனன்கொரு தேத்தண்ணி கிடைக்குமா?

  ReplyDelete
 7. டீ டைமுக்கிஉ ஏற்ற சிறப்பான பதிவு!

  பாராட்டுகள்.

  எங்கூர்லே டீ சாப்டாச்சா?ன்னு கேட்டால் இல்லை டீ சாப்பிட வாங்கோன்னு யாராவது கூப்பிட்டால்...அது டீ குடிக்க இல்லை. மாலை டின்னர் சாப்பிட!

  இந்தச் சொல்லால் தோழி அடைஞ்ச அதிர்ச்சி ஒரு நகைச்சுவை சம்பவமாக்கும்:-)))))

  ReplyDelete
 8. good info! i am even more refreshed reading your tea info.

  ReplyDelete
 9. ரீ யில் இத்தனை வகைகளா.. சுவாரசியமான பதிவு.

  ReplyDelete
 10. இன்றுதான் மேடம் உங்கள் சமையல்கட்டுக்குள் முதல் முறையாக வருகிறேன்! ஒரு தேத்தண்ணிக்கு இவ்வளவு விளக்கமா? ' தேத்தண்ணி ' என்ற சொல்லைக் கேட்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! இங்கு பிரான்சில் தேநீரை ' தே நச்சூர் ' என்கிறார்கள்! உங்களுக்கு ஒன்று தெரியுமா? நமது நாட்டுத் தேயிலை என்றால் இவர்களுக்கு வாயூறும்!  சரி மேடம் அப்படியே நம்ம வீட்டுக்கும் ஒருக்காவந்திட்டுப் போங்கோ! தேத்தண்ணி ஒண்டும் தரமாட்டன். சிரிச்சுட்டுப் போகலாம் வாங்கோ!

  ReplyDelete
 11. மணக்கும் டீ.... இந்த குளிர் காலத்துக்கேற்றது....

  ReplyDelete
 12. அருமையான இடுகை மாதேவி. என் அம்மாவின் தந்தை இலங்கையில் தேயிலை வியாபரத்தில் ஈடுபட்டிருந்தார் 1940-50_களில். பல வகை தேயிலை பற்றி அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். பல பயனுள்ள குறிப்புகளுடன் சிறப்பான பதிவு எப்போதும் போலவே.

  நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்:)!

  ReplyDelete
 13. தேநீர், அது குறித்த பல தகவல்களுடன் சுவையாக இருந்தது! நன்றி :)

  ReplyDelete
 14. வாருங்கள் எல் கே.

  ரோஸ் பாண் என்பது bread. வழமையான பிரட்டை விட தட்டையாகவும் மேற்பகுதி நன்கு முறுகி ரஸ்க் போலவும் இருக்கும்.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 15. சுவைத்ததற்கு நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 16. வாருங்கள் மயூரன்.உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 17. தேத்தண்ணி பற்றி ஒவ்வொரு வீடுகளிலும் இன்னும் பல சுவையான கதைகள் இருக்கும்....

  நன்றி Jana.

  ReplyDelete
 18. வருகைக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

  ReplyDelete
 19. உங்களுக்கில்லாத தேத்தண்ணியா ஜலீலா. நன்றி.

  ReplyDelete
 20. வாருங்கள் துளசிகோபால்.

  தோளியின் அதிர்ச்சி நகைச்சுவையை நேரம் வரும்போது சேர்த்திடுங்க. ரசிக்கக் காத்திருக்கின்றோம்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 21. மிக்க நன்றி Vettipayal.

  ReplyDelete
 22. ' தே நச்சூர் 'அறிந்துகொண்டேன் நன்றி மாத்தியோசி.

  படித்துச் சிரிக்க வருகிறேன்.

  ReplyDelete
 23. வாருங்கள் சித்ரா.

  காப்பியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:)

  நன்றி.

  ReplyDelete
 24. வாருங்கள் ராமலக்ஷ்மி.

  பாட்டனாரின் தொழில் செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

  ReplyDelete
 25. வாருங்கள் கவிநயா.
  சுவைத்ததற்கு நன்றி.

  கொஞ்சம் பிசி.உடனே பிரசுரிக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 26. தேத்தண்ணி ரொம்ப நல்லா இருந்துச்சு ;)

  ReplyDelete
 27. அசத்தல் மாதேவி..:)

  அது என்ன கறுவா ?

  நான் டீ காபி குடிக்காமல் இருந்தேன்.. கணவருக்குப் போட்டுக்குடுக்கையில்.. நல்லா இருக்கா சரியா இருக்கான்னு குடிக்க ஆரம்பித்து இப்ப குளிருக்கு பழகிவிட்டது..:)

  ReplyDelete
 28. அருமையான பகிர்வு ,உங்கள் கையால் ஒரு தேத்தண்ணி குடிக்க ஆசை வந்து விட்டது.

  ReplyDelete
 29. மாதேவி ,உங்களின் சென்ற பதிவில் உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருந்தேன்.பார்த்தீர்களோ?

  ReplyDelete
 30. தேத்தண்ணி சுவையாக இருக்கு.

  ReplyDelete
 31. ” ஆஹா... உங்க எழுத்தும் அதன் பாங்கும் தேனீரைப்போலவே அற்புதமான சுவை...!! “

  ReplyDelete
 32. அருமையான தேநீர் விளக்கம்.
  தமிழ் நாட்டில் காயச்சல் என்றால் பால் சேர்க்காத காப்பி குடிக்க கொடுப்பார்கள்.
  டீயில் ஆவி பிடிப்பது, முகம் கழுவ சலதோஷம் சரியாகும் என்பதெல்லாம் புது தகவல் மாதேவி.

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 33. வாருங்கள் முத்துலெட்சுமி.

  கறுவா என்பது பட்டை.

  குளிருக்கு :)

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 34. நன்றி ஆசியா.

  தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி. முடிந்தபோது எழுதுகிறேன்.

  ReplyDelete
 35. சுவைத்ததற்கு நன்றி ஆயிஷா.

  ReplyDelete
 36. இலங்கைத் தமிழல்லவா. மிக்க நன்றி Srini.

  ReplyDelete
 37. வாருங்கள் கோமதி அரசு.

  இப்போது கைவைத்தியம் எல்லாம் மறைந்துவிட்டது. எனது சிறுவயதில் பாட்டிமார் இவ்வாறுதான் செய்வார்கள்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 38. அப்பா .. விதம் விதமா டீ குடிச்சது போல இருந்தது மாதேவி..:))

  ReplyDelete
 39. தேனம்மை லெக்ஷ்மணன் வருகைக்கும் தேநீரை ரசித்துக் குடித்ததற்கும் நன்றிகள்.

  ReplyDelete
 40. மாதேவி...வருஷம் பிறந்து நல்ல தேத்தண்ணி குடுத்திருக்கீங்க.
  கவனிக்கவேயில்ல.விதம் விதமா எத்தனை வகையான தேநீர்கள்.இங்கு வந்தபிறகுதான் நிறையப் பாக்கிறேன்.காஞ்சூண்டி இலையில்கூட தேநீர்.

  எனக்குக் காலையில் நிறையப் பால் சீனியோட நல்ல சாயம் விட்டு ஒரு தேத்தண்ணி தந்தா போதும்.காலைச் சாப்பாடே கேக்கமாட்டேன் !

  ReplyDelete
 41. ரீ...ரீ.. எவ்ளோ ரீ..... பதிவு நல்ல ஸ்ட்ராங்கா இருந்தது.. ;-)

  ReplyDelete
 42. மாதவி உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_02.html

  ReplyDelete
 43. வாருங்கள் ஹேமா.

  பால்தேநீர் என்றால் அவ்வளவு விருப்பமா :)

  காலைச்சாப்பாடும் முக்கியமல்லவா மறக்காமல் சாப்பிடுங்கள்.

  ReplyDelete
 44. வாருங்கள் RVS.

  ரீ ஸ்ரோங்கா லைற்றாகப் போட்டுத் தருகிறேன்.:)

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 45. அன்புடன் மலிக்கா.

  பார்த்தேன். அறிமுகப்படுத்தியதுடன் இங்குவந்து தெரிவித்ததற்கும் மிக்கநன்றி.

  ReplyDelete
 46. பதிவைப் படித்ததும் சூடான டீ குடித்த உணர்வு. டீயின் சரித்திரமே அருமை.

  ReplyDelete
 47. ஜென் தியானத்தில் தேனீர் தயாரிப்பதையும், அருந்துவதையும், ஒருமுகத் தியானமாகவே கற்பிப்பார்களாம்.

  ReplyDelete
 48. ஜப்பானிலும் மண்டியிட்டு தேனீர், அருந்துவது ஒரு கலாச்சார நிகழ்வாகவே கொண்டாடப்படுகிறது.

  ReplyDelete
 49. வாருங்கள் இராஜராஜேஸ்வரி. முதல் வருகை என நினைக்கிறேன் மகிழ்ச்சி.

  நல்ல தகவல்களைத் தனித்தனியே பகிர்ந்ததுக்கு நன்றி.

  ReplyDelete
 50. ariyaatha pala puthiya thagavalgal. remba nanri intha pagirvirku. relaxa tea kuduchutte innorumurai padikkanumkka. thanks.

  ReplyDelete
 51. Dear all respondents-especially tamil nadu ladies. I love how madras tea tastes. In canada i go to saravana bavan and anjappar chettinad cuisine to just to drink that tea and coffee. Can someone please tell me how you make this tea and coffee. Please all the ladies. I would really appreciate your help.

  ReplyDelete
 52. தேநீருக்கு ரீஎன்றொரு பெயர் இருப்பது தெரிந்துகொண்டேன். அருமையான பதிவு. கறுவா என்றால் என்ன? பட்டையா? நன்றி!

  ReplyDelete
 53. வாருங்கள் கிரேஸ்.

  உடன் பதில் தரவில்லை மன்னிக்கவும்.

  கறுவா என்றால் பட்டைதான்.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்