Saturday, April 28, 2012

இஸ்சோ வடே.... இறால் காரக் குழம்பு


"வடே வடே வடேய் இஸ்சோ வடே.."

இந்தக் கூவலைக் கேட்காமல் நீங்கள் இலங்கைப் பேருந்துகளிலும், இரயில்களிலும் பிரயாணம் பண்ணியிருக்க முடியாது.

அவ்வளவு பிரசித்தம், பெரு விருப்பு இந்த இஸ்சோ மீது.


இஸ்சோ என்றால் வேறொன்னும் இல்லை! நம்ம இறால்தான்

இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நாடு.  இங்கு மீன் உற்பத்தி பலகாலம் தொட்டு நடைபெற்று வருகிறது. இத்தொழில் கைத் தொழிலாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

முதலில் புத்தளம் மாவட்டத்தில் இறால் மீன் பிடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வருடம் ஒன்றிற்கு 4360 மெட்ரிக் தொன் இறால்கள் இங்கு கிடைத்தன. பின்னர் வெள்ளைப் புள்ளி நோயினால் வீழ்ச்சி ஏற்பட்டது. 1570 மெட்றிக் தொன் ஆகக் குறைந்தது. இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் சுமார் 2900 ஹெக்டரில் இறால் பண்ணைகள் அமைக்க கடற்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இறால் பண்ணைகளை ஆரம்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகளையும் வழங்க தீர்மானித்துள்ளார்கள்.

இறால் பிரியர்களுக்கு ஒரு அமோக செய்தி. இத் திட்டத்தின் படி வடக்கிலும்

கிழக்கிலுமாக 4000 ஹெக்டரில் இறால் வளரப்புப் பண்ணைகளை முன்னெடுக்க முடியும் என்கிறார்கள். இனி என்ன? இறால் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.


அலர்ஜி உள்ளவர்களுக்கு திண்டாட்டம் கூடி வரும் எனச் சொல்லத்தேவையில்லை.

இறால் மிகவும் சுவையான உணவாக இருப்பதால் அதற்கு கிராக்கி அதிகம். அதியுயர் பெறுமதி மிக்க உணவாக இருக்கின்றது. 500 கிறாம் 450 ரூபாவிற்கு மேல் விற்பனையாகிறது.

இலங்கையில் கரையோரப் பகுதிகளில் இறால் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இத்துடன் கடல் நீர் ஏரிகளிலும் இறால் மீன்பிடிப்பதைக் காணலாம்.



தொண்டைமனாற்றுக் கடல் வல்லைவெளி, காரைநகர், மழைநீர்த் தேக்கங்களில் கூடுகட்டி வலை வீசி இறால் மீன் பிடிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

இறால் நன்நீரிலும் உவர் நீரிலும் வாழும். பின்புறமாகவும் நீந்தும். கழிவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன.

மட்டக்களப்பு சிங்கை இறால் மிகவும் பிரசித்தமானது. ஆசிய நாடுகள் இறால் உற்பத்தியி;ல் முன்னணியில் நிற்கின்றன. சீனா, தாய்லாந்து இந்தியாவின் ஆந்திரா இறால் உற்பத்தி அதிகம். உலகில் தாய்லாந்து இறால் ஏற்றுமதியில் முதல் இடம் வகிக்கின்றது.



இறாலில் உள்ள போசனைப் பொருட்கள் எவை?


ஒரு சேர்விங் 3 அவுன்ஸ் என எடுத்துக் கொண்டால் அதில்
  • புரதம் 18 கிறாம் உள்ளது. 
  • கலோரி அளவு 92 மட்டுமே. 
  • நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே உண்டு. 
  • கொலஸ்டரோல் அளவு மிக அதிகம் 199 மி.கிராம் உள்ளது.
  • இரும்புச் சத்து 15 சதவிகிதம்
  • விற்றமின் சீ  3 சதவிகிதம்
  • விற்றமின் ஏ  4 சதவிகிதம்
  • கல்சியம்  3 சதவிகிதம்
குருதிக் கொலஸ்டரோலும் உணவுக் கொலஸ்டரோலும்

 எமது குருதிக் கொலஜ்டரோலைப் பொறுத்தவரையில் உணவிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் கொலஸ்டரோலை விட நிரம்பிய கொழுப்புகளால் எமது உடல் உற்பத்தி செய்யும் கொலஸ்டரோலே அதிக பாதகம் கொண்டது.
  • இறாலில் நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே இருப்பதால் பாதிப்பு அதிகம் இல்லை. 
  • ஆனால் அதிகளவு கொலஸ்டரோல் இருக்கிறது. 
  • மனிதர்களது உணவில் உண்ணப்படும் நேரடிக் கொலஸ்டரோல் 300 மி.கி தாண்டக் கூடாது என்கிறார்கள். முட்டையில் 250 மிகி இருப்பதால் அளவோடு சாப்பிட வேண்டும் என்கிறார்கள். இறாலில் 199 இருப்பதால் அதையும் ஓரளவு மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஆனால் இறால் முட்டை, இறைச்சி எல்லாவற்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இலங்கையில் இஸ்சோ வடை Isso Vade மிகவும் பிரபலம். 



கூனி இறால் என அழைக்கப்படும் சிறு இறால் போட்டு புட்டு அவித்து உண்பார்கள். சிறிய இறால் கருவாடும் பிரபலம். பருப்பு, பலாக்காய் கறிகளில் கலந்து கொள்வார்கள். இறால் பிரியாணி, ப்ரைட் ரைஸ், புட்டு, இடியாப்ப பிரியாணி, நூடில்ஸ் என மக்கள் வெளுத்துக் கட்டுவார்கள்.

சைனீஸ்தாய் குக்கிங் இல் புரொன் டிஸ்சஸ் முக்கியத்துவம் வகிக்கின்றன. ஹார்லிக் புரொன் பெப்பர் புரொன், ஸ்வீற் அன்ட் சவர் புரொன், புரொன் சூப், கிறில்ட் புரொன், பட்டர் புரொன், புரொன் பாஸ்ரா, ஹாட் சில்லி புரொன், ஸ்பைசி ரொமாட்டோ புரொன், என இன்னும் பல விதங்களாக உணவுகள் தயாரிக்கலாம்.

சிப்ஸ் பிரியர்களுக்காக இறால் ப்ளேவட் சிப்ஸ்சும், பைக்கற்களில் விற்பனை ஆகின்றன.

இலங்கை இந்தியச் சமையல்களில் இறால் முருங்கைக் காய், கத்தரிக்காய் குழம்பு, பலராலும் விரும்பப்படும் உணவாகும்.

இறால் வறை, சலட், பொரியல், தேங்காய்ப்பால் கறி, சொதி, தொக்கு, கூழ், சம்பல், பஹோடா, எனப் பலவாறு உண்ணப்படுகிறது.

இறால் தேங்காய்ப் பால் காரக் குழம்பு

சேகரிக்க வேண்டியவை

இறால் -  20
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பெரும்சீரகம் - ¼ தேக்கரண்டி
வெந்தயம்  - ¼ தேக்கரண்டி
தட்டிய பூண்டு - 4
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
மல்லித் தூள் - ½ ரிஸ்பூன்
மஞ்சள் - ¼ ரிஸ்பூன்
தேங்காய்ப்பால் - ¼ கப்
உப்பு - தேவைக்கு
புளிக்கரைசல் - தேவைக்கு
ரம்பை - 4 துண்டு
கறிவேற்பிலை - சிறிதளவு.
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்

தயாரிப்பு

இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள்.

உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள்.

ஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.

ரம்பை, கறிவேற்பிலை சேருங்கள்

இறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்பொடி. மஞ்சள்பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள்.

மணம்; ஊரையெல்லாம் கூட்டி வயிற்றைக் கிளறும்.

சாப்பிடாதவர்களுக்கு வயிற்றைக் குமட்டும். மூக்கைப் பொத்தி வீட்டைவிட்டே ஓட வைக்கும்.

புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். இறுதியாக தேங்காய்பால் ஊற்றி பரிமாறும் போலில் மாற்றி விடுங்கள். நாலுகால் பூனைகளுடன் இரண்டுகால்
பூனைகளும் களவு எடுக்க வரும்.

(  குறிப்பு - மகளுக்காக சமைத்தது  )

மாதேவி

0.0.0.0.0.0.0.0

17 comments:

  1. அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க போல!!!!!!!

    ReplyDelete
  2. ம்,.... ஏதோ சுவையான ஐட்டம் பகிர்ந்திருககீங்கன்னு தெரியுது. ஆனா நான் சுத்த சைவமா வளர்ககப்பட்டு அப்படியே இருக்கறதால இதோட முழு எஃபெக்ட் எனக்குப் புரியலை. ஸோ... ஸீ யு இன் நெக்ஸ்ட் பதிவு!

    ReplyDelete
  3. நல்ல தகவல்களுடன் அருமையான குறிப்பும் கூட,.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. உடன் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.

    சாப்பிடாவிட்டாலும் செய்து அசத்திடுவோம் :))

    ReplyDelete
  5. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி கணேஷ்.

    நான் சிறுவயதில் சாப்பிட்டு அப்புறம் சுத்த சைவம். அசைவம் சமைக்கத் தெரியும்.

    ReplyDelete
  6. வாருங்கள் அமைதிச் சாரல்.
    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. நாலுகால் பூனைகளுடன் இரண்டுகால்
    பூனைகளும் களவு எடுக்க வரும்.//


    அருமை மகளுக்கு பிடித்த உணவா?

    வாழ்க வளர்க!

    ReplyDelete
  8. எங்க வீட்ல தேங்காய் அரைத்து ஊற்றுவாங்க...நான் இறால் சாப்பிடமாட்டேன்,அதனால் இதன் சுவை தெரியவில்லை.குழம்பு காரசாரமா பார்க்க நல்லாயிருக்குப்பா...

    ReplyDelete
  9. வாருங்கள் கோமதி அரசு.

    ஆமாம் மகளுக்குப் பிடிக்கும்.

    உங்கள் வாழ்த்துக்கு மகிழ்கின்றோம். மிக்க நன்றி.

    ReplyDelete
  10. மேனகா உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

    நீங்கள் சொல்வது போல நல்ல காரசாரமானதுதான்.

    தேங்காய் அரைத்து ஊற்றினால் குழம்பு நன்கு கெட்டியாக இருக்கும்.சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

    இலங்கையில் செய்யும் சட்னி, குழம்புகள் நல்ல காரத்துடன்தான் இருக்கும்.

    ReplyDelete
  11. உங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறவும். ந்ன்றி.

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html

    ReplyDelete
  12. இண்டைக்கு இறால் குழம்பும் புட்டும்,பருப்புச் சொதியும்...எப்பிடி மாதவி.சூப்பரெல்லோ !

    அந்த இறால் வடை ஊருக்குப் போயிருந்த நேரம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன் !

    ReplyDelete
  13. இலங்கை சமையலா? டிரை பண்ணி பார்க்குறேன்.

    ReplyDelete
  14. வித்தியாசமான பெயர் வித்தியாசமான தயாரிப்பு.

    ReplyDelete
  15. மிகவும் அருமையான, புதுமையான இறால் காரக்குழம்பு . பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கிறது. அப்ப சாப்பிட்டால்! ம்ம்ம்ம்ம் ......சூப்பர்.

    ReplyDelete
  16. அருமையான இலங்கைச் சமையல் பார்க்கவே மனதை கொள்ளை கொள்கிறதே!

    ReplyDelete
  17. அருமை போங்கள்!!!!

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்