Thursday, July 4, 2013

கொட்டெப் பாக்கும் கொழுந்து வெற்றிலையும்.. ...சமைக்காமலே......




பச்சை பச்சை டக்டக் பால்பால் டக்டக் குந்து மணி டக்டக் குதிரைவால் டக்டக் அவர்கள் யார் ? 



வெற்றிலை மங்களப் பொருளின் அடையாளம். கோயில்களில் நைவேத்தியப் பொருட்களில் முக்கிய இடம் வகிக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வணங்குவார்கள்.


விழாக்களில் முகப்புவாயில்களில் வெற்றிலை வைத்து வரவேற்பார்கள். பண்டிகைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.


வெற்றிலையைச் சுருட்டி பாக்கு, பணம் வைத்து பூப்பெய்திய பெண்ணின் இரு கைகளிலும் விரல்களுக்கு இடையே நிமிர்த்தி வைத்திருக்கக் கொடுத்து அழைத்துச் சென்று நீராட்டுவது வழக்கமாக இருக்கின்றது. திருமண நிச்சயதார்த்தத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் மாற்றுவது பழைய காலந்தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது.


வெற்றிலையில் லஷ்மி உறைவாள் என்பார்கள். சித்திரைப் புதுவருடத்தன்று வெற்றிலையில் நெல்லு மணிகள். குங்குமம், மஞ்சள், பூ, பணம் வைத்து கைவிசேசம் கொடுக்கும் வழக்கம் இந்துக்களின் பண்பாக இருந்து வருகின்றது.

பௌத்தர்களும் சித்திரை வருடத்தன்று வெற்றிலை வைத்து பெரியோரை வணங்கி ஆசி பெறுவார்கள். புதுமணத் தம்பதிகள் வரவேற்பு , விழா பிரதம விருந்தினர்களை வரவேற்க  வெற்றிலை கொடுத்து வரவேற்கும் வழக்கமும் பௌத்தர்களிடம் இருக்கிறது.


அரசர்கள், நாட்டாண்மைமார்கள் வெற்றிலை போட அழகிய வெற்றிலைப் பெட்டியும், வெற்றிலை துப்புவதற்கு கோளாம்பி தூக்க ஒருவரும் கூடவே இருப்பார்கள்.

வெற்றிலைத் தட்டமும் பாரம்பரிய தமிழர் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.


வெற்றிலைத் தட்டம், பாக்கு வெட்டி, பாக்கு உரல் இல்லாத வீடுகளே இருக்காது.


வெற்றிலை மூலிகைத் தாவரமாகும். மருத்துவ குணங்கள் அடங்கியது என்கிறார்கள்.


சமையலில் கஷாயம், ரசம், செய்கின்றார்கள். தோசை, அடை மாக்களில் கலக்கின்றார்கள். மூலிகைகளாக சாதம்,சலட் வகைகளில் கலந்துகொள்கின்றார்கள். வறுத்த தேங்காய் துருவல், நட்ஸ், மாதுளை முத்துக்கள், மல்லிதழை,புதினா கலந்து எடுத்து இலைகளில் வைத்து பரிமாறுகின்றார்கள்.  சிக்கன் கறிகளில் அரைத்த வெற்றிலை கலவை கலந்து சமைக்கப்படுகின்றது.
வியட்னாமிய சமையலில் wild Betel leaf (la lot) அரைத்த மாட்டிறைச்சியை மசாலாக்கள் கலந்து இலைகளில்வைத்து சுற்றி எடுத்து கிரில், பார்பிக்யூ, ப்ரை களாக செய்து கொள்வது பிரசித்தமாக விளங்குகின்றது.

வெற்றிலை மலேசியாவில் தோன்றிய செடியாகும். Piper Betel மிளகு குடும்பத்தைச் சார்ந்தது. இலங்கை இந்தியா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது. கும்பகோணம் வெற்றிலைக்கு பெயர்பெற்றது.

மிகவும் அழகிய கொடிதான் இலையும் அழகானது நாகஇலை, நாகவல்லி, திரையல், வேந்தன் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களை தாங்கி நிற்கின்றது.

வெற்றிலையை அழகுக்காக பல்கனிகளிலும் சாடிகளில் வளர்க்கலாம். மங்களப் பொருளாக கொள்வதில் தவறில்லை.


கமுகு மரம் பினாங்கு மாநிலத்தின் சின்னமாக இருக்கின்றது. இங்கு பாக்கு மரங்கள் அதிகம். கமுகுமரம் நிழல்தரும், குளிர்மையாக இருக்கும். பச்சை மஞ்சள் நிறங்களில் பாக்குகள் அழகாககுலைகளாக பழுத்துத் தொங்கும்.
Arecanut > Betel nut    என்கின்றோம்.  சில சாப்பாட்டுக்கடைகளில் சாதத்தில் பாக்கை கலந்து சமைத்துவிடுவார்கள். ஆட்டு இறைச்சி கறி மென்மையாக வருவதற்காக சீவல்பாக்கு சிலவற்றை கலப்பதுண்டு.

பல்வேறுசிறப்புக்களும் கொண்ட வெற்றிலை, பாக்கு, ஆபத்தான விளைவுகளையும் தருகின்றது.


விவசாயிகள், தொழிலாளர்கள், மலையக மக்கள் பெரும்பாலும் வெற்றிலை போடும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அப்பொழுது இதன் தீமையையும் எடுத்துக் கூறுங்கள். அவர்களிடம் விழிப்புணர்த்தவே இப்பகிர்வு.

வெற்றிலை போடுவது அல்லது வெற்றிலை சப்புவது எனச் சொல்லும்போது அது வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் சேர்ந்து உண்ணப்படுவதையே குறிக்கிறது.

யாழ்குடா புகையிலை பயிர்செய்கைக்கு பெயர் பெற்று விளங்குகிறது. வடக்கன் புகையிலை மிகுந்த காரமானது.  பலருக்கு மயக்கம், மரணங்கள் கூட ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

வெற்றிலை பாக்கு சப்புவதால் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தாய்வானில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது. இருதய நோய்கள் இரண்டு விதத்தில் வரலாம் என்கிறார்கள். இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவடைவதாலும், இருதயத் துடிப்பு லயத்தில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களாலும் நேர்கிறது. இவற்றிற்கு காரணமாக இருப்பது பாக்கில் உள்ள
Arecoline என்ற இராசாயனமும் புகையிலையில் உள்ள நிக்கடினும் ஆகும்.

அதேபோல ஆஸ்த்மா தூண்டப்படுவதற்கு வெற்றிலை சாப்பிடுதல் மற்றொரு காரணமாகிறது.


புகைத்தலுக்கு அடிமையாவதற்குக் காரணம் அதிலுள்ள நிக்கரின் ஆகும். வெற்றிலை போடும்போதும் புகையிலை சேர்ப்பதால் பலரும் அதற்கு அடிமையாகிறார்கள். இதனால்தான் புகைத்தலை கைவிடும்போது எரிச்சல், சினம், மனச்சோர்வு, அதிக பசி, மீண்டும் புகைக்க வேண்டும் என்ற அடக்கமுடியாத தவனம் ஏற்படுவது போலவே வெற்றிலை சப்புவதைக் நிறுத்தும்போதும் ஏற்படுகிறது.

இதற்கு மாற்று வழி மீண்டும் புகைப்பதோ வெற்றிலை போட ஆரம்பிப்பதோ இல்லை. மன அடக்கப் பயிற்சிகள் வேறு உற்சாகமூட்டும் பணிகளில் ஈடுபட்டு மறப்பதே ஏற்றது. முடியாவிட்டால் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொண்டு கைவிடவும் நேரலாம்.


அத்துடன் முரசு கரைதல் அதன் காரணமாக பல்லின் வேர்கள் வெளிப்படுவது, பற்கூச்சம், பற்சொத்தை போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தொடர்ந்து சப்பிக் கொண்டே வாயில் குதப்பி வைத்திருப்பதால் வாயின் உட்புறத் தோலில் வெண்நிறமான படலம் தோன்றும். leukoplakia என்ற இது வாய்ப்புற்று நோய் ஏற்படுவதன் ஆரம்ப நிலை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதில் பின்பு புண்கள் ஏற்படும். புற்றுநோயாக மாறும்.  கவனம்.


வாய்ப்புற்று மட்டுமின்றி உதட்டு புற்று, தொண்டை புற்றுநோய் ஆகியவையும் ஏற்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை சப்பினால் புகைப்பதனால் ஏற்படுவது போன்ற ஆபத்துக்களைக் கொண்டு வரும்.

வெற்றிலை ,பீடா கடைகளுக்குக் குறைவில்லை. பான் என்பது ஹிந்தி, பர்னா என்பது சமஸ்கிருதம்.

வெற்றிலையுடன் கலர் பாக்கு, இனிப்புத் தூள்கள், கலர்த் தேங்காய்த் துருவல், குங்குமப்பூ, ஏலம், தங்க பஸ்பம், வாசனைகள், கலந்து சுற்றி மடித்து மேலே கராம்பும் குத்தி வைத்திருப்பார்கள். பச்சை பசேலென வா வா என அழைக்கும். பார்க்க அழகாகத்தான் இருக்கும். கையும் எடுக்க நீளும். உசாராகிவிடுங்கள்....விதியும் ஓர் ஓரம் நின்று பார்த்துச் சிரிக்கலாம்.


மங்களப் பொருளாக மட்டும் நிலைத்து வாழ வழி செய்வோம். பாமரர்களுக்கு அறிவுறுத்துவோம்.

எனது படங்களைவிட  ஏனைய படங்கள்  இணையத்திலிருந்து எடுத்து இணைத்துக்கொண்டேன் . நன்றி.

-: மாதேவி :-

42 comments:

  1. அருமையான தகவல்கள்..

    ReplyDelete
  2. வெற்றிலை பற்றி அருமையான பதிவு தந்தீர்கள்.
    வெற்றலை போடுவதால் ஏற்படும் நோய்கள் பற்றிய விபரங்களைத் தந்தமை சிறப்பாக இருந்தது.
    வெற்றிலையில் சமையலுமா, என் மனைவிக்கு சொல்லுகிறேன்.

    ReplyDelete
  3. வெற்றிலை பற்றி இவ்வளவு தகவல்களா?!

    ReplyDelete
  4. அபாரமான படங்களுடன் அற்புதமான தகவல்கள். நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு. நன்றிகள்.

    ReplyDelete
  5. ஒவ்வொரு பதிவையும் மிகச் சிறப்பாகத் தர
    தாங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும்
    மிகச் சரியாக எடுத்துக் கொண்ட பொருள் குறித்த
    அனைத்துத் தகவல்களையும் படங்களுடன்
    சுவாரஸ்யத்துடன் தரும் பாங்கும் பிரமிக்கவைக்கிறது
    மலைக்கவைக்கும் பதிவுகளுக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வெற்றிலை பற்றிய படங்கள் தகவல்கள் அருமை. பாக்குவெட்டி அழகாய் இருக்கிறது.

    நன்மைகளோடு அதன் தீமைகளையும் சொல்லியிருப்பது சிறப்பு. விழிப்புணர்வைத் தரும் பகிர்வு.

    ReplyDelete
  7. வணக்கம் தோழி!
    அருமையான தகவல்கள்! அறிந்ததும் அறியாததும்தான்.
    வெற்றிலைச்சாறு நல்ல கபம் இளக்கியென ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்ல அறிந்துள்ளேன். ஊரில் இருந்த சமயம் ஆயுர்வேத கடுகளவு குளிகையை வெற்றிலைச்சாற்றில் உரைத்து சிறிது கல்லாக்கார நீருடன் கலந்து சளி இளக்கி வெளியேறக் கொடுப்பதைக் கண்டுள்ளேன்.

    நல்ல தகவல்கள். பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. வெற்றிலை பற்றிய விபரங்கள் சிறப்பாக இருக்கிறது! சென்னையில் ஸ்பென்ஸர் பிளாசா அருகே செந்தூரி ஹோட்டல் என்று நினைக்கிறேன், அங்கே வெற்றிலை தோசை
    பிரபலமான ஒன்று! பொதுவாக வெற்றிலைக்கு மருத்துவ குணங்கள் உண்டு என்று படித்திருக்கிறேன் அதை மருந்தாக மட்டும் உண்ணும்போது. வெற்றிலையில் பூண்டு வைத்து மென்று தின்றால் இயற்கை முறையில் கர்ப்பப்பை சுத்தமாகிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. வெற்றிலையுடன் புகையிலை சேர்த்து உண்ணும்போது தான் வாயிலும் தொண்டையிலும் புற்று ஏற்படுகிறது.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  10. பல அருமையான தகவல் தந்தீர். நன்றி மாதேவி!

    ReplyDelete
  11. மகிழ்கின்றேன்.

    மிக்கநன்றி சங்கவி

    ReplyDelete
  12. நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  13. வெற்றிலைசமையல் சாப்பிட நீங்கள் ரெடியா :)))

    நன்றி டொக்டர்.

    ReplyDelete
  14. வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன்.

    மகிழ்கின்றேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  15. வாருங்கள் ரமணி.
    உங்கள் நீண்ட கருத்துக்கு மிக்க நன்றி.

    வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. நன்றி ராமலஷ்மி.

    ReplyDelete
  17. வருகைக்கு மிக்க நன்றி இளமதி.

    ReplyDelete
  18. நன்றி மனோ சுவாமிநாதன்.

    ReplyDelete
  19. கிரேஸ் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் .

    ReplyDelete
  20. வாருங்கள் திண்டுக்கல் தனபாலன்.

    மகிழ்கின்றேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  21. தகவல்களும் படங்களும் அருமை. மருந்தாக பயன்படுத்தினால் நல்லது...

    ReplyDelete
  22. இதற்குப் பெயர் தான் புகழ்பட இகழ்தலோ!!! வெற்றிலை பற்றி முன் பகுதியில் அழகாகவும் பின் பகுதியில் அதன் கெடுதலை சொல்லியுள்ளீர்கள்... நல்லது, எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தானே! அழகான பதிவு...

    ReplyDelete
  23. ஆஹா! என்ன அழகு அந்தப் பாக்குவெட்டியும் பின்னணியில் இருக்கும் வெற்றிலை பாக்கும்!!

    கீழே வந்தால் பாக்குரல்.அப்படியே என்னை ஊருக்குக் கூட்டிப் போய் விட்டீர்கள்!

    காலம் கடந்து பின்னோக்கிப் பாய வைக்கிறது பதிவு! நன்றி

    ReplyDelete
  24. நல்ல தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  25. அருமையான தகவல்கள்!!

    ReplyDelete
  26. நன்றாகச் சொன்னீர்கள்.

    நன்றி கோவை2தில்லி

    ReplyDelete
  27. மிக்க நன்றி இரவின் புன்னகை.

    ReplyDelete
  28. அழகு ஆபத்தும் கூட. :)
    கருத்துக்கு நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  29. மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  30. மகிழ்கின்றேன் மேனகா.

    ReplyDelete
  31. அருமையான தகவல்கள்..

    வெறும் வெற்றிலை மருந்துப்பொருள்ன்னு சொல்லுவாங்க. வயித்து வலி வந்தா அதில் மிளகு, உப்பு, பூண்டு வைத்து கடித்துச் சாப்பிடச்செய்தால் வலி குறையும்.

    ReplyDelete
  32. வெற்றிலையை வெறும் வெற்றிலையாய் பயன்படுத்தினால்தான் நன்மையென்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு நறுக்கு மருந்தில் வெற்றிலை சேர்த்து சளி இளக்கக் கொடுப்பார்கள். புகையிலையுடன் சேரும்போதுதான் அது கெடுதி மிக்கதாகிறது.

    சின்னப்பிள்ளைகள் வெற்றிலை தின்றால் மாடுமுட்டும் என்பார்கள். அதனால் அப்போது பெரியவர்கள் கிள்ளி எறியும் வெற்றிலைக் காம்புக்கு அடித்துக்கொள்வோம்.

    நல்ல விஸ்தாரமான பதிவு. நல்லதையும் கெட்டதையும் அலசி அனைவரையும் அறியச் செய்யும் அற்புதமான முயற்சி. புகையிலைக் கேடால் வரும் நோய்கள் பற்றிய படங்களே பயமுறுத்துகின்றன.

    பகிர்வுக்கு நன்றி மாதேவி.

    ReplyDelete
  33. இவ்வளவு இருக்கா வெற்றிலையில்.. உசார் உசார் தான் இனிம.. நல்ல பகிர்வு தோழி.

    ReplyDelete
  34. வாருங்கள் அமைதிச்சாரல்.
    நீங்கள் சொன்னதுபோல மருந்தாக மட்டும் கொள்வதில் தவறில்லை.

    மிக்கநன்றி.

    ReplyDelete
  35. விரிவாக கருத்துத் தந்துள்ளீர்கள் கீத மஞ்சரி.

    நன்றி.

    ReplyDelete
  36. வெற்றிலையின் உபயோகமும்
    அதன் பாதிப்பும் சொல்லி விட்டீர்கள்.
    மங்களகரமாக வெற்றிலை தாம்பூலமாகப் பார்ப்பதே ஒரு சுகம் எல்லோரும் கூடிக் களித்த நாட்கள். அத்தையிடம் வெற்றிலைக்குக் கெஞிசிய நாட்கள். அப்பாவின் வெற்றிலைச் செல்லத்திலிருந்து பாக்கு திருடிய நாட்கள்.
    கொட்டப் பாக்குச் சாப்பிட்டுத் தலை சுற்றிய நாட்கள்

    எல்லா நினைவுகளையும் கொண்டு வந்துவிட்டீர்கள் மாதேவி.
    ஆராய்ச்சியும் ஆன்ந்தமும் நிறைந்த பதிவு.
    மிக நன்றி.

    ReplyDelete
  37. இனியநாட்களை நினைவுகளில் கொண்டுவந்ததில் மகிழ்ச்சி.
    சிறுவயதில் வெற்றிலையைக் கண்டால் எல்லோருக்குமே விளையாட்டுத்தான்.:)

    வருகைக்கு நன்றி.
    .

    ReplyDelete
  38. சிறுவயதில் வெற்றிலைப் போட்டுக் கொள்ள மிக விருப்பம். அப்போது மாடு முட்டும், கோழி கண்ணை கொத்தும் என்று தர மாட்டார்கள். இப்போது போடுவது இல்லை.
    படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
    பயன்களும், பாதிப்புகளும் சொல்லியதற்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்