Tuesday, September 30, 2008

சமையலறையில் மருத்துவம்


“எதிரி வீட்டில் சாப்பிடப் போவதாக இருந்தால் நாலு மிளகுடன் போ” என்பார்கள் முன்னோர்கள். விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டென்பர்.

இப்பொழுது வயிற்று வலி அல்லது வயிற்றுப் பொருமல் என்றால் என்ன செய்வீர்கள்? இரண்டு மூன்று வறுத்த அல்லது சுட்ட உள்ளியைச் சாப்பிடுவீர்களா?

எனது சிறு வயதில் வரதகணபதிப்பிள்ளைப் பரியாரியாரின் 'சக்தி உள்ளிக் குளிகை' எங்கள் பிரதேசம் எங்கும் பிரபலம். தூரதேசம் செல்பவர்களின் பிரயாணப் பைகளில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இன்று ஹார்லிக் பில் பல நிறுவனங்களால் வர்த்தக ரீதியாகத் தயாரிக்கப்படுகின்றன. நன்றாக விலை போகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எமது மருத்துவ முறைகள். சித்தர்கள் தமது நுண்ணறிவால் பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்களை இனங்கண்டு தாமும் பயன்படுத்தி மக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அவற்றில் பல மூலிகைகள் மருத்துவர்களின் களஞ்சியங்களையும், மருந்துப் பெட்டிகளையும் கடந்து எமது அம்மாமார்களின் சமையலறையிலும் இடம் பிடித்தன. குடிநீர்களாகவும் கசாயங்களாகவும் மாறி கைவைத்தியமாக உயிர் காத்தன.

மற்றும் பல மூலிகைகள் எமது உணவுகளுக்கு சுவையூட்டிகளாகவும், வாசனைத் திரவியங்களாகவும் பல் பயன் தந்தன.

மேலைநாட்டு வைத்திய முறைகள் எங்களுக்கு அறிமுகமாகி ஒரு சில நூற்றாண்டுகள் மட்டுமே ஆகிறது. அதுவரையும், ஏன் இன்றும் கூட எம்மவர் பலர் தமது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு எமது பாரம்பரிய முறைகளையே நாடுகிறார்கள்.

ஆயினும் இன்றைய நாகரீகப் புதுயுகத்தில் அவற்றையெல்லாம் பலரும் மறந்து எடுத்ததற்கெல்லாம் வைத்தியர்களையும் பார்மஸிகளையும் நாடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

சமையலறையில் மருந்திருக்க ஏன் இந்த ஓட்டம்?

சாதாரண காய்ச்சல், தடிமன் சளி, மூட்டுவலி, இருமல், வயிற்றுக் கோளாறு, சிறுநீரக்கடுப்பு போன்ற பல நோய்களுக்கு பாரம்பரிய முறைகள் கைகொடுக்கும். நோய் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவற்றைப் பருகி சுகம் காணலாம், இல்லையேல் மருத்துவரை நாடுவதில் தவறில்லை.

மருந்துச் சிரட்டை ஞாபகம் வரவில்லையா? வீடுகளில் பரியாரியாரின் மருந்துக் குளிகைகளை உரைப்பதற்கு பயன்படுத்துலார்களே. சிறிய தேங்காய் மூடிகளை நன்கு வழவழப்பாகச் சீவி கவனமாக வைத்திருப்பார்கள். அடிக்கடி யாருக்காவது தேவையும் வரும்.

பாரம்பரிய குடிநீர்வகைகள்

சளி இருமலுக்கான குடிநீர்

தூதுவளம் இலை 10-15, மிளகு ½ ரீ ஸ்பூன், அதிமதுரம் 1 துண்டு, தண்ணீர் ஒரு கப் ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டு அவித்து எடுத்து குடியுங்கள். சளி நீங்கும்.

காய்ச்சலுக்கான குடிநீர்

மல்லி 2 மேசைக் கரண்டி, மிளகு 4-5, திப்பலி 2, வேர்க்கொம்பு 1 துண்டு (சிறியதாக வெட்டியது) ஆகியவற்றை 1 ¼ கப் நீர் விட்டு அவித்து எடுத்து, நாள் ஒன்றுக்கு 2-3 தடவை நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்துவது காய்ச்சலைத் தணிக்கும். திப்பலி வேர்க்கொம்பு சேர்வதால் காய்ச்சலுடன் கூடிய உடல் வலியும் நீங்கும். மிளகு சேர்ப்பதால் இருமல் மறையும்.

வயிற்றுப் போக்கு, உணவு செமிபாடடையாமை

2 தேக்கரண்டி வெந்தயத்தை சிறிதளவு நீரில் ஊறவைத்து எடுத்து நீருடன் வெந்தயத்தையும் சாப்பிட தொல்லைகள் நீங்கிச் சுகம் கிட்டும்.

சலக்கடுப்பு, சிறுநீர் போகாமை

தேங்காயப்பூ கீரையை அவித்துக் குடிப்பது நன்மை தரும்.

சாதாரண சளிக்கு

வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இலைகளை தினமும் சப்பிச் சாப்பிட்டுவர சளித் தொல்லை தீரும்.

வரட்டு இருமலுக்கு

பனம் கல்லக்காரம் இரண்டு மூன்று துண்டுகளை வாயில் போட்டு கரையவிடுங்கள்.

முக்கிய குறிப்பு

நான் மருத்துவன் அல்ல. இவை நானறிந்த பாரம்பரிய கைவைத்தியத்தில் சில. நீங்களும் உங்களது வீட்டு வைத்தியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

:- மாதேவி -:

6 comments:

  1. மிளகுத்தண்ணி என்று சொல்வது
    மிளகுத்தூளில்
    டீ போல்
    தயாரிப்பதா?

    ReplyDelete
  2. என் அப்பாச்சியும் இப்படி செய்வார்கள்..சிலது எனக்கும் தெரியும்..

    நல்ல பதிவு சகோதரி

    ReplyDelete
  3. நான் அறிந்தவரையில் மிளகுத்தூளில் டீ போல மிளகுத்தண்ணி தயாரிப்பதாகத் தெரியவில்லை. இங்கு கந்தஷஷ்டி கடும் விரதம் இருப்போர் நாள் முழுவதும் நீராகாரம் கூட எடுக்காதிருந்து மாலையில் கோயில் பூசை முடிய மூன்று மிளகு சப்பி ஒரு செம்பு தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் முடிப்பர். தொடர்ந்து 6 நாட்களும் இவ்வாறு செய்வார்கள். இதனையே மிளகுத்தண்ணி அருந்துவதாகக் கூறுவர்.

    ReplyDelete
  4. கைவைத்தியம் நல்லா இருக்கு..

    ReplyDelete
  5. வாங்க கண்ணகி கருத்திற்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்