Monday, January 5, 2009

மரவள்ளிக் கிழங்கு தாளிதம்

உடன் கிண்டி எடுத்த 'பிரஸ்' மரவள்ளிக் கிழங்கை மறக்க முடியுமா? கிராமங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது அது. ஏழை மக்களின் நாளாந்த உணவில் தவிர்க்க முடியாதது.

அடைமழை காலத்தில் வெளியே சென்று காய்கறிகள் வாங்க முடியாத வேளையில் பின் வளவில் வளர்ந்து நின்று அவசரத்திற்குக் கை கொடுக்கும்.

"முழுகிவிட்டு வரும் பருவப் பெண்ணின் கூந்தலில் இருந்து நீர் சொட்டுவது போல் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்ற மரவள்ளி இலைகளிலிருந்து மழைத் துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன."

என ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் தனது 'சம்பத்து' சிறுகதையில் ஓரிடத்தில் சொல்கிறார். செழித்து வளர்ந்த நீர்வேலி மரவள்ளித் தோட்டங்களை ஆழ்ந்து ரசித்தவரல்லவா?

ஆம்! மரவள்ளிச் செடியின் அழகோ அழகுதான்.

மரவள்ளித் தோட்டங்களைச் சுற்றி ஒழித்து விளையாடிய நாட்கள் மீண்டும் வருமா? வெய்யிலுக்கு இதமான குளிர்மை தரும் மாலைக் காற்றில் ஆடி அசையும் அழகோ சொல்லி மாளாது. மாலைச் சூரியனின் ஒளியில் பசுமையான இலைகள் தங்கமென தகதகக்கும்.

கிழங்கை நெருப்பில் வாட்டி எடுத்துச் சுவைத்தால் சுவைதான். அவித்த கிழங்குடன் காரச் சம்பல் தொட்டுச் சாப்பிட்டால் அப்பபா ஊ ஊ என உறைக்கிறது. இருந்தும் நாக்கு மீண்டும் சுவைக்கத் தூண்டும்.

மரவள்ளி சிப்சின் சுவை அலாதியானது. குழந்தைகளின் ஆசைக்கு உகந்த உணவாகும். உப்பும் மிளகாய்ப் பொடியும் சேரும்போது ஆகா! அற்புதம்.

"போடா போய் குளிச்சிட்டு வா. புள்ளை அந்தப் பழஞ்சோறு, குரக்கன் புட்டு, மரவள்ளிக் கிழங்குக் கறி, தயிர் எல்லாத்தையும் எடுத்து வை. நான் கொண்ணைக்கு குழைச்சு உறுட்டிக் குடுக்க."

என அதே நீர்வை பொன்னையன் 'அழியாச் சுடர்' என்ற சிறுகதையில் விபரிக்கிறார்.

அதன்போது கிராமங்களில் மரவள்ளியின் முக்கியத்துவமும், தாயின் பாசமிகு ஊட்டலும், மரவள்ளிக் கிழங்குக் கறியின் சுவையையும் உணர முடிகிறது அல்லவா?

மரவள்ளியில் புரதச் சத்துக் குறைவு. எனவே புரதம் கூடிய உணவு வகைகளான கச்சான், கடலை, கௌபீ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சமபல உணவாக நன்மை தரும்.

ஆவியில் வேக வைத்த மரவள்ளிக் கிழங்கு தாளிதம்


தேவையான பொருட்கள்


1. மரவள்ளிக் கிழங்கு – 1
2. வறுத்த கச்சான் - ¼ கப்
3. தக்காளி – 2
4. வெங்காயம் - 1
5. வறமிளகாய் - 3
6. பூண்டு – 2
7. கறிவேற்பிலை – சிறிதளவு
8. உப்பு – வாய் ருசிக்கு ஏற்ப
9. கடுகு - விரும்பினால்
10. கறுவாத் தூள் ¼ ரீ ஸ்பூன்
11. ஓயில் - 2 ரீ ஸ்பூன்


செய்முறை

மரவெள்ளி வேரை நீக்கி அரை அங்குல அளவுள்ள சிறிய துண்டங்களாக வெட்டி எடுங்கள்.

அதை நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேற்பிலை, பூண்டு, வறமிளகாய், வெங்காயம், தாளித்து தக்காளி போட்டு வதக்கி உப்பு கறுவாத் தூள் போட்டு, கிழங்குத் துண்டுகளைக் கொட்டிப் பிரட்டி எடுத்து வையுங்கள்.

இத்துடன் வறுத்த கச்சான் தூவி பரிமாறுங்கள்.

:- மாதேவி -:

4 comments:

  1. இதற்கு தேங்காய்ப் பால் விடதேவையில்லையா???
    எனினும் எங்கள் யாழ்ப்பாண பாற்கறி முறையில் மிளகு; உள்ளி;செத்தல் மிளகாய் நருவல்;பொருவலாக இடித்து; சற்றுத் தூக்கலாகப் போட்டு; நீங்கள் கடலுணவு சாப்பிடுபவரானால் இறாலும்; இறால் தலையை நசித்துச் அந்தச் சாறும் சேர்த்துச் சமைத்துப் பார்க்கவும்.
    நான் மரவள்ளிக் கிழங்குப் பிரியன்.
    இங்கு ஆபிரிக்கர்கள் விரும்பி உண்பதால் வாங்கக் கூடியதாக உள்ளது.

    ReplyDelete
  2. நீங்கள் கூறியது போல தேங்காய்ப் பால் அல்லது துருவல் சேர்த்துத் தயாரிப்பதே பலரும் கைக்கொள்ளும் முறை.
    இறால் சேர்த்துச் செய்யும் முறையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அதுவும் பிரபலமான சமையலே.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்