Tuesday, December 8, 2009

கலர் கலராகச் சாதங்கள்



மரக்கறி உணவுகள் என்றாலே முகம் சுழிப்பார்கள் குழந்தைகள். அவர்களுக்கு இப்படியான உணவுகள் சாப்பிடுவது என்பது வெறுக்கத்தக்க நேரம்தான்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்.

கண்ணுக்குக் கவர்ச்சியாக மாற்று முறையில் தயாரித்துப் பரிமாறினால் பலவகை மரக்கறி உணவுகளையும் சாப்பிட வைத்துக் கொள்ள முடியும்.

பீன்ஸ், கோவா, பீட்ரூட், வெண்டைக்காய், முள்ளங்கி, பாவற்காய், வாழைமொத்தி, கோஹில தண்டு, போன்ற பெயர்கள் பல பெரியவர்களுக்குக் கூடப் பிடிப்பதில்லை.

கலர் கலரான சாப்பாடு

பீட்ரூட்டை தனியே சமைத்துக் கொடுப்பதை குழந்தைகள் விரும்பாத போது சாதத்திற்குள் கலந்து செய்து கொடுக்கலாம். கண்கவரும் சிவத்த சாதத்துடன் சுவை சேர்க்க நெய். கஜீ, சேர்த்துக் கொண்டால் விரும்பி உண்பார்கள்.

பீட்ரூட்டை கூடிய நேரம் சமைத்தால் அதிலுள்ள மிக முக்கியமான போசனைப் பொருட்கள் யாவும் அழிந்துவிடும். பச்சையாக உண்பது சமிபாடடையச் சிரமமாக இருக்கும்.

எனவே நீராவியில் அவித்தெடுத்துச் செய்து கொண்டால் சத்துக்கள் அழியாது இருப்பதுடன், விரைவில் சமிபாடும் அடையும்.

போஷாக்கு உள்ளது


நார்ப்பொருள் அதிகமுள்ளது. Vitamin C, Folic acid அதிகமுள்ளது. Vitamin A, Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6 and Pantothenic Acid ஆகியன ஓரளவு உண்டு

பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொஸ்பரஸ், ஆகியன அதிகம் அடங்கியுள்ளது. ஆனால் கல்சியம், சின்க், செலினியம் ஆகியன ஓரளவே உண்டு.

அதில் குறைந்தளவு கலோரிச் சத்தே உண்டு. 100 கிராம் பீட்டில் 43 கலோரி மட்டுமே உண்டென்பதால் எடை குறைப்புச் செய்ய விரும்புபவர்கள் சலட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு

இரத்தசோகையை குறைக்கும். இரும்புச் சத்து அதிகமுள்ளது.

பீட் ஜூஸ் அருந்துவது உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனக் கூறுகிறார்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் பீட்டாஅமினோ அசிட் இதில்
அடங்கியுள்ளது.

ஜூஸ் ஆக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்


மலச்சிக்கலைத் தடுக்கும்.
நாட்பட்ட மலச்சிக்கலுக்கும் சுகம் தரும்.

உடல் இளைக்க பீட்ரூட்டை அடித்து எடுத்து உப்பு, மிளகு, சிறிது தேசிக்காய் விட்டு அருந்தலாம்.

பீட்ரூட் சாற்றை தனியே குடிக்க முடியாதவர்கள் தோடம்பழச் சாறு, ஆப்பிள் சாறு கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட் கிழங்கைச் சேமித்து வைத்தல்

ஈரலிப்பான மண் நிலத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். பிரிட்ஸ்ல வைத்தால் ஓரிரு வாரம் இருக்கக் கூடியது.

வைன், சீனி


Rum, Tuzemak, Vodka போன்ற மதுவகைகளுக்கும், சீனி தயாரிப்பிற்கும் வெவ்வேறு விசேடமான பீட் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக்குப் பயன்படுவதிலிருந்து இவை வேறுபட்டவையாகும்.


வழமையான ரெட் பீட்டிலிருந்து சிறந்த வைன் தயாரிப்பார்கள். இதைப் பதப்படுத்திச் செய்ய நீண்டகாலம் எடுக்கும்.

பீட்ரூட் சாதம்


சாதம் - 1 கப்
பீட் பெரியது – 1
பம்பாய் வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கருவேற்பிலை – 2 இலைகள்
கஜூ - 10
மிளகாய்ப்பொடி – 1 ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
நெய் அல்லது மாஜரின் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

தோலைச் சீவி பீற்றூட்டைத் துருவி வையுங்கள்.

மெல்லிய நீள் துண்டுகளாக வெங்காயத்தை வெட்டி வையுங்கள்.

மிளகாயை நாலு பாகமாக வெட்டிவிடுங்கள்.

கஜூவை உடைத்து வையுங்கள்.

சிறிது மாஜரினில் கஜூவைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

ஒரு டேபிள் மாஜூரினில் உப்பு, மிளகாய்த்தூள் பிரட்டி எடுத்த வெங்காயத்தைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

மிகுதி மாஜரீனை விட்டு கடுகு, உழுத்தம் பருப்பு தாளித்து பச்சை மிளகாய் கருவேற்பிலை போட்டு துருவிய பீட் போட்டு வதக்கி, உப்பு மிளகாய்ப் பொடி இட்டு சாதம் சேர்த்துக் கிளறி எடுங்கள்.

பரிமாறும் பிளேட்டின் பாதியில் அரைவாசி போட்டு மேலே பொரித்த கஜூ, வெங்காயம் தூவி விடுங்கள்.

தயிர்ச் சாதம்

சாதத்தில் தயிர் உப்பு, பெருங்காயப் பொடி கலந்து சாதா தயிரச்சாதம் செய்வதை விட வெங்காயம், பச்சை மிளகாய், கரட்,வெள்ளரிக்காய். இஞ்சி கருவேற்பிலை,மாதுளைமுத்துக்கள் கலந்து செய்து கொள்ளலாம்.

தயாரிக்க

சாதம் - 1 கப்
தயிர் - ½ கப்
துருவிய கரட் - 1
துருவிய வெள்ளரிக்காய் -1
மாதுளைமுத்துக்கள் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1-2
சாம்பார் வெங்காயம் - 10-15
கருவேற்பிலை- 2 இலைகள்
மல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி – துருவியது 1 ரீ ஸ்பூன்
உப்பு, பெருங்காயம் சிறிதளவு

தாளிக்க

கடுகு – 1 ரீ ஸ்பூன்
கருவேற்பிலை 2 இலைகள்.
ஓயில் 1 ரீ ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை,மல்லித்தழை சிறியதாக வெட்டி எடுங்கள்.

ஓயிலில் கடுகு கருவேற்பிலை தாளித்து சாதத்தில் கொட்டிக் கலந்து விடுங்கள்.

தயிரை நன்கு கலக்கி எடுத்து உப்பு, பெருங்காயம்,கலந்து சாதத்தில் ஊற்றிகலந்துவிடுங்கள்.

துருவிய கரட்,வெள்ளரி இஞ்சி,வெங்காயம், மிளகாய் கறிவேற்பிலை,மல்லித்தழை,மாதுளை, கலந்து கிளறிவிடுங்கள்.

பீட் சாதம் வைத்திருக்கும் பிளேட்டின்
மறுபகுதியில் வைத்து பாருங்கள்
தெரியும் அழகு.

அழகில் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விடாதீர்கள்.

குழந்தைகள் வரும்வரை காத்திருங்கள்.

ஓடோடி வந்து குழந்தைகள் முடிப்பார் பிளேட்டை. பிறகென்ன உங்கள் முகத்தில் ஆயிரம் வோல்ட் பல்ப் மகிழ்ச்சி தெரியும்.

மாதேவி

27 comments:

  1. அருமையான அசத்தலான சாதம் அதுவும் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று மிஞ்சிய சத்து கொண்டது.

    சூப்பரான குறீப்பு மாதேவி அசத்துங்கள் அசத்துங்கள்

    ReplyDelete
  2. பசி நேரத்தில் படிச்சுட்டேன். பசி அதிகமாயிடுச்சு :) கலர் கலர் சாதத்திற்கு பலப் பல நன்றிகள்.

    ReplyDelete
  3. சுவையோ சுவை..... மிக்க நன்றிங்க

    ReplyDelete
  4. வாருங்கள் ஜலீலா.உங்கள் மிகுந்த பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  5. பலப்பல நன்றிகள் கூறியதற்கு மிகமிக நன்றி கவிநயா.

    ReplyDelete
  6. சுவைத்ததற்கு நன்றி ஞானசேகரன்.

    ReplyDelete
  7. மாதேவி,பீற்றூட் சாதம் செய்து சாப்பிட்டேன்.குழந்தைகளுக்குத்தான் நிறையப் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.எனக்கு இனிக்குது.

    ReplyDelete
  8. வாருங்கள் ஹேமா.

    நீங்கள் கூறியது சரியே. பீற்றூட்டில் இனிப்பு இருப்பதால் சாதம் இனிக்கத்தான் செய்யும். குழந்தைகளுக்குத்தான் நிறையப் பிடிக்கும்.

    பெரியவர்களுக்கு என்றால் காரத்தை அதிகம் சேர்த்துச் செய்யவேண்டும். அதனால்தான் துணைசேர்க்க தயிர்சாதமும் செய்து வைத்திருந்தேன்.

    ReplyDelete
  9. மரக்கறின்னா குழந்தைங்க முகம் சுளிக்கத்தான் செய்வாங்க. மரத்ததையேவா கரி பண்ணுவாங்க!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  10. எதையுமே செய்யறவங்க செஞ்சா அதோட பக்குவமே தனிதான். பிரமாதமா சொல்லியிருக்கீங்க கல்யாணம் ஆயி தங்கமனி வரட்டும் செஞ்சு டேஸ்ட் பாத்துடறேன்..

    ReplyDelete
  11. பீட்ரூட் சாதாம் வித்தியாசமா இருக்கு.

    குழந்தைக்கு ஏற்ற உணவு.

    தாங்கள் என் தளத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  12. வணக்கம் மாதேவி அக்கா முடிஞ்சா ஒரு பார்சல் அனுப்ப முடியுமா?..

    ReplyDelete
  13. தமிழச்சிக்கு வணக்கம்.. மன்னிக்கவும் எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்

    ReplyDelete
  14. மிகவும் நன்று. நல்ல அசத்தலான பதிவு. நல்ல வித்தியாசமான வகையில் கிரியேட்டிவாக சிந்தித்து ரெசிப்பி இட்டு உள்ளீர்கள். நன்று.

    ReplyDelete
  15. தயிர் சாதம் செய்யும் முறை
    வித்தியாசமாய் உள்ளது .நானும்செய்து பார்க்கிறேன்

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி Jawahar.

    ReplyDelete
  17. வாருங்கள் அண்ணாமலையான். என்னுடைய ரங்கமணி போல உங்களுக்கும் சமைக்கவராதா.

    ReplyDelete
  18. வாருங்கள் RAJESH. நன்றி்.
    ஒரு பார்சல் அனுப்பிவிட்டால் சரி.

    ReplyDelete
  19. வருகைக்கு நன்றி sakthi.

    ReplyDelete
  20. கருத்திற்கு மிகவும் நன்றி பித்தனின் வாக்கு.

    ReplyDelete
  21. வருகைக்கு நன்றி நினைவுகளுடன் -நிகே-.

    தயிர் சாதம் செய்து பாருங்க.

    ReplyDelete
  22. நன்றி சக்தி த வேல்..!

    ReplyDelete
  23. பீட்ரூட் சாதாம் வித்தியாசமா இருக்கு!!

    ReplyDelete
  24. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி suvaiyaana suvai.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்