Sunday, May 23, 2010

தக்காளி தேங்காய் பால் சொதி + ரசச் சொதி



தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களுமே பயன் தர வல்லன. பாம் (Palm) இனத்தைச் சார்ந்த இதன் தாவரப் பெயர் Cocos Nucifera என்பதாகும்.

coconut எனப் பெரிடப்பட்ட போதும் உண்மையில் Nut வகையைச் சார்ந்தது அல்ல. தேங்காய் நாருடன்(இலங்கையில் பொச்சு என்பர்) அது பழம் (Fruit) எனலாம். உரித்த தேங்காயை (Seed) விதை எனலாம்.


உலகளாவிய ரீதியில் தேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, இந்தியா ஆகியன முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. பிரேசிலை அடுத்து இலங்கை 5ம் இடத்தில் இருக்கிறது.

தெங்கு + காய் = தேங்காய் என அழைப்பர்.

இது வெப்பவலயப்பிரதேசங்களில் நன்கு வளரும்.
இலங்கை, கேரளாச் சமையல்களில் தேங்காய்க்கு முக்கியத்துவம் உண்டு.

தேங்காயைத்துருவி பால் எடுத்து கறி சமைப்பது இலங்கையர் வழக்கம். தேங்காய் அரைத்த கூட்டு இட்டும் சமைப்பார்கள்.

100 கிறாம் தேங்காயில் போசனை அளவு

கொழுப்பு 33.49 சதவிகிதம்
மாப்பொருள் 15.23 கிறாம்
புரதம் 3.39 கிறாம்
நார்ப் பொருள் 9 கிறாம்
பொஸ்பரஸ் 113 மிகிராம்
இரும்பு 2.43 மிகிராம்
பொட்டசியம் 356 மிகிராம்
மக்னீசியம் 32 மிகிராம்
B1, B2, B6, Folate ஆகிய விற்றமின்கள் குறைந்த அளவில் உண்டு
கல்சியம் 14 மிகிராம்

தேங்காய், தேங்காய்ப் பால் இரண்டிலும் கொலஸ்டரோல் நோய்க்கு அடிப்படையான கொழுப்பு இருப்பது தெரிந்ததே.

தேங்காயில் உள்ள கொழுப்பில் பெரும் பகுதி நிரம்பிய கொழுப்பு அமிலமாகும் எனவே இது நல்ல கொழுப்பு அல்ல.

ஆயினும் இது மீடியம் செயின் பட்டி அசிட் என்பதால் ஆபத்து அதிகம் இல்லை என மாற்றுக் கருத்தும் உண்டு.

எனவே இடையிடையே செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் நல்லது என்ற கருத்தும் உண்டு. நோயை எதிர்க்கும் சக்தியும் தேங்காய்ப் பாலுக்கு உண்டு என்கிறார்கள்.

முதிர்மையைத் தவிர்ப்பதற்கும், முடி வளர்வதற்கும் உகந்தது எனக் கருதப்படுகிறது. அதனால்தான் கேரளப் பெண்கள் அழகாகவும் கூந்தல் நீளமாகவும் இருக்கிறார்களோ?

சாதம், இடியாப்பம், புட்டு, உணவுகளுக்கு தொன்று தொட்டே தேங்காயைப் பிழிந்து பாலெடுத்து குழம்பு,சொதி செய்வார்கள்.
இன்று பாணுக்கும் சொதி என்றாகிவிட்டது.

பாலுடன் இலைவகைகள், மரக்கறி வகைகள் சேர்த்து செய்யும்போது சத்துக்களுடன் வித்தியாசமான சுவையும் கிடைக்கும்.

வெளிநாட்டுச் சொதியா!! கிறேவி?


வெளிநாட்டினர் கிறேவி எனப் பெயரிட்டு வேறுவிதங்களில் தயாரித்துக் கொள்வர். அவர்கள் தேங்காய்க்கு எங்கே போவது? இப்பொழுது தமிழர் வாழும் இடங்களில் தேங்காய் அதிக விலையில் கிடைக்கிறது.தேங்காய்ப் பாலும் கிடைக்கிறது.

மரக்கறிகள் இறைச்சியிலிருந்து கிறேவி செய்து கொள்வார்கள்.
கோர்ன் பிளவர் சோஸ், பிஸ் சோஸ், சிக்கன் சோஸ், சோயா சோஸ், டொமடோ சோஸ், எக் கிறெவி, கிறீம் கிறேவி, அனியன் கிறேவி, வைட் கிறேவி எனப் பலவாறு செய்து எடுத்து நூடில்ஸ், பேஸ்டா,மக்கரோணி உணவுகளுடன் பரிமாறுகிறார்கள்.

நாவுக்குச் சுவையான இரு சொதி வகைகள் இன்றைய பதிவில் பார்க்கலாம்.

இடியப்பதிற்கு பால் சொதிதான் சூப்பர்.

சொதி வகைகள் பற்றிய முன்னைய எனது பதிவுகள் காண



தேங்காய்ப் பாலில் சர்க்கரை கலந்தெடுத்து இடியப்பம் புட்டுக்கு ஊற்றிச் சாப்பிடுவார்கள்.

அதில் பழ வகைகள் சேர்த்து பழப் பாயாசமும் செய்து கொள்ளலாம்.

தக்காளிச் சொதி
தேவையான பொருட்கள் -

பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சின்ன வெங்காயம் - 7-8
தக்காளி - 2
கறிவேற்பிலை - 2 இலைகள்
ரம்பை - 1 துண்டு
சோம்பு - ¼ ரீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால் - சிறிதளவு
தேங்காய்ப்பால் - 2 கப்

பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் போட்டு கறிவேற்பிலை, ரம்பை, சோம்பு, உப்பு, மஞ்சள் சேருங்கள்.

சிறிது தண்ணீர் விட்டு அவியுங்கள். அவிந்த பின் தேங்காய்ப் பால் ஊற்றி கலக்கிவிடுங்கள்.

பால்கொதிக்க ஆரம்பிக்கும்போதே கலக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால் ஆடைகட்டி திரண்டுவிடும்.

இரண்டு மூன்று கொதிவிட்டு இடையிடையே கலக்கி இறக்கிவிடுங்கள்.

தக்காளி,பச்சைமிளகாய் வாசத்துடன் சொதி தயாராகிவிட்டது.

தக்காளி தேங்காய்ப்பால் ரசச் சொதி

தேவையான பொருட்கள் -

தக்காளி- 2
பூண்டு – 4
மிளகு- ¼ தேக்கரண்டி
மல்லி -1 தேக்கரண்டி
செத்தல்மிளகாய்; -1
சின்ன வெங்காயம் - 5-6
தக்காளி - 2
கறிவேற்பிலை - 2 இலைகள்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால் - சிறிதளவு
தேசிச்சாறு – ½ தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 2 கப்
செய்முறை -

வெங்காயம், தக்காளியை வெட்டி வையுங்கள்.

மிளகு, தனியா, செத்தல்பொடிபண்ணி எடுங்கள்.

பூண்டைமுழுதாய்த் தட்டி எடுத்து வையுங்கள்.

இவை அனைத்தையும் பாத்திரத்தில் போட்டு கறிவேற்பிலை, உப்பு, மஞ்சள் சேருங்கள்.

சிறிது தண்ணீர் விட்டு அவியுங்கள்.

அவிந்த பின் தேங்காய்ப் பால் ஊற்றி கலக்கிவிடுங்கள்.

பால்கொதிக்க ஆரம்பிக்கும்போதே கலக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால்
ஆடைகட்டி திரண்டுவிடும்.
அடிக்கடி கலக்குங்கள்.

இரண்டு மூன்று கொதிவிட்டு இடையிடையே கலக்கி இறக்கிவிடுங்கள்.

தேசிச்சாறு விட்டுக்கலந்து விடுங்கள்.

உள்ளி, மிளகு, தேங்காய்ப்பால் வாசத்துடன் மூக்கைக் கிளறி சாப்பிட அழைக்கும்.

குறிப்புகள் :–
  • தக்காளி அலர்ஜி இருந்தால் தக்காளியைத் தவிர்த்துச் செய்யுங்கள். தேசிச்சாறு சற்றுக் கூடுதலாகச் சேருங்கள்.
  • விரும்பினால் சொதிவைத்து எடுத்தபின் தாளித்துக்கொட்டலாம்.
மாதேவி

0.0.0.0.0.0

16 comments:

  1. அது சரி மாசக்கணக்குல ஆளையே கானோமே !!!

    ReplyDelete
  2. நெல்லை பக்கம் செய்யப்படும் சொதி வகையில் இருந்து சிறிது வேறுப் பட்டு இருக்கிறது.

    ReplyDelete
  3. மாதேவி,நெல்லை பக்கத்தில் கல்யாணத்தின் மறுநாள் சொதி
    சாப்பாடு மிகவும் விசேஷமானது.கல்யாணத்திற்கு வந்தவர்களை மறுநாள் சொதி சாப்பாடு சாப்பிட்டு விட்டு போகலாம் என்று உபசரிப்பார்கள்.

    வீடுகளுக்கு விருந்தினர் வந்தால்சிறப்பு சமையலாக சொதி செய்வார்கள்.

    உங்கள் சொதியிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்.


    உங்கள் குறிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  4. //ஆயினும் இது(தேங்காய் பால்) மீடியம் செயின் பட்டி அசிட் என்பதால் ஆபத்து அதிகம் இல்லை என மாற்றுக் கருத்தும் உண்டு.//
    இந்த தவறான கருத்தை நீங்கள் குறிப்பிட்டிருக்கவே கூடாது. தவறானதை தான் எங்கள் ஆட்கள் எப்போதும் பிடித்துகொள்வார்கள்.

    ReplyDelete
  5. மாதேவி..இத்தனை வகை சொதி இருக்கா ?மாங்காய் சொதி,
    முருங்கைக் கீரைச் சொதி,மீன் சொதி....இப்பிடித் தெரியும்.ரசச் சொதி தெரியவே தெரியாது.செய்து பாக்கிறேன்.நன்றி.

    எங்க ஆளைக் கன நாளாக் காணேல்ல !

    ReplyDelete
  6. இதே முறையில் தான் எங்கள் வீட்டிலும் தக்காளி தேங்காய் பால் சொதி செய்வோம். சுவையோ சுவை தான்.......

    ReplyDelete
  7. மாதேவி,

    தங்களுக்கு விருது இங்கே

    http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_27.html

    ReplyDelete
  8. ஜெய்லானி
    சித்ரா
    கோமதிஅரசு
    அனானி
    ஹேமா
    ஜெயா
    சந்தனமுல்லை
    தலைவன்குழுமம்
    உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. பாத்தாலே நாக்குல எச்சில் ஊறுதே...

    ReplyDelete
  10. வாருங்கள் பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி.

    முதல்வருகைஎன எண்ணுகிறேன். வருகைக்குமிக்கமகிழ்ச்சி.
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. வித்தியாசமா இருக்கு சொதி.

    ReplyDelete
  12. கருத்துக்கு நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  13. நீண்ட இடைவேலைக்கு பிறகு ஒரு அசத்தலான குறிப்பு.

    ReplyDelete
  14. ஆமாம் ஸாதிகா.நன்றி.

    ReplyDelete
  15. மாதவி சொதி சூப்பர் போட்டோக்களே சாப்பிட வான்னு அழைக்கிறது சூப்பர்..

    ReplyDelete
  16. இது எங்க ஊர் ஸ்பெஷலுங்க:)!

    கோமதிம்மா சொல்லியிருப்பதையும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்