Sunday, November 14, 2010

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள்

மொஸபத்தேமியா சிந்து வெளி நாகரீக காலத்தில் உபயோகிக்கப்பட்ட மட்பாண்டப் பொருட்கள் பலவும் அகழ்வாரச்சிகளில் கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அக்கால நாகரீக மக்கள் வாழ்க்கை, கலைகலாசாரங்களை அறிந்து கொள்ளுகின்றோம்.

தற்பொழுது வழக்கொழிந்துபோன,  சில தலைமுறைகளுக்கு முந்திய அடுக்களைப் பொருட்களை நினைவு மீட்போமா?


ஆதியிலிருந்து வந்த மட்பாண்டப் பொருட்கள் சட்டி, பானை, முட்டி என்பன பெரும்பாலும் பாவனையில் இல்லை என்றே சொல்லலாம்.கிராமங்களில் கூட உபயோகம் குறைந்துவிட்டது. மிக அருமையாக ஒரு சிலர் சட்டியில் சுவைக்காக சமையல் செய்வதுண்டு.

எமது கிராமத்தில் உள்ள வீடுகளில் சிலவற்றின் பரணிலிருந்து தேடி எடுத்த பொருட்களை எனது கமராவில் அடக்கிக் கொண்டேன்.

எங்கள் பாட்டிமார் சட்டியில் பால் காய்ச்சி அதைச் சுண்ட வைக்க அடுப்பில் உமியிட்டு தணலில் வைத்து விடுவார்கள். பால் நன்றாகச் சுண்டி சூடேறி உமி வாசம் கமழத் தொடங்கவும்  இரண்டு கால் பூனைகளும் அடுப்புப் பிட்டியில் குந்திக் காத்திருக்கும். பால் ஆடை திரள்வதை ஆசையுடன் பார்த்திருக்க நாவில் சுவை ஏறும்.


வயல்நெல்அரிசிச்சாதத்தை மண்பானையில் சமைத்தெடுப்பர். இறக்கி வைத்து வெளியே சாம்பல் போகக் கழுவிய பின்னர் பானையைச் சுற்றி மூன்று குறியாக திருநீறு பூசி விடுவர்.அன்னம் இடும்பாத்திரம் லஷ்மிஎன்பர்.


புட்டு, இடியப்பம் செய்வதற்கு வாய் ஒடுங்கிய பானைகள் இருந்தன. களி கிண்ட  மாவறுக்க பெரிய மண் சட்டியும்,  பொரியல் செய்ய தட்டையான சட்டியும், கறிச்சட்டியும், உலைமூடியும், அரிசி கிளைய மண் அரிக்கன் சட்டியும் வைத்திருந்தனர்.

மண்சட்டித் தயிரின்சுவை நாக்கில் ஊறுகிறதா? மண்பானையில் தண்ணீர்வைத்திருப்பர் வெய்யிலுக்கு குடிக்க ஜில் என்று இருக்கும்.
நிலாச்சோறு எப்படி?



வெண்கலப் பாத்திரங்கள் குடிபுகுந்தன. வெண்கலச் சருவச்சட்டி, குடம், செம்பு, பானை, அண்டா, குண்டா,கரண்டி, இட்லிப் பானை, தாம்பாளம், குத்துவிளக்கு, கைவிளக்கு, வெற்றிலைத்தட்டு, செம்பு என்பன புளக்கத்தில் இருந்தன.


வெண்கலக் கடைக்குள் ஆனை புகந்தாற் போல் தடாம்...டமார்.... சத்தங்களுக்கும் குறைவிருக்கவில்லை.

வெற்றிலைத் தட்டும் பூட்டுச் செம்பும்

பிரயாணத்தின் போது காப்பி எடுத்துச் செல்ல பூட்டுச் செம்பு பேணியுடன் இருந்தது. வெண்கலச் சருவச் சட்டியில் கறி செய்வதாக இருந்தால் உட்புறம் ஈயம் பூசி வைத்திருந்தார்கள். மூக்குப் பேணி, வெண்கலப் பேணி,  காப்பி ரீ அருந்த உபயோகமாக இருந்தன.


கூஜா, தூக்கு வாளி என்பன பிரயாணத்தில் சாப்பாடு எடுத்துச் செல்ல உதவியாக இருந்தன. தூக்கு வாளியுள் சாதத்தையிட்டு இடுக்குச் சட்டியில் கறிகளை வைத்து எடுத்துச் சென்றனர்.

இரும்புப் பாத்திரங்கள் தாச்சி, கண் அகப்பைக் கரண்டி, தோசைக் கல்லு, தட்டு அகப்பை(தோசை திருப்பி), கேத்தல் போன்றவை நீண்ட காலம் அழியாது உழைத்தன. பெரிய இரும்புத் தாச்சிகள் கச்சான், பயறு, உழுந்து, மிளகாய் அரிசிமா வறுக்கவும் இருந்தன. சிறிய தாச்சியில் குழம்பு, பொரியில் செய்து கொள்வர். இதில் சமைத்த வத்தல் குழம்பு மிகுந்த சுவையைத் தரும்.

காம்புச் சத்தகம்

இரும்பாலான காம்புச் சத்தகம், இது மரக்கறி வெட்டவும் பயன்பட்டது. நீண்ட காம்புடன் முன் பகுதிவளைந்திருக்கும் பெட்டி இளைக்கும்போது காம்பால் குத்தி ஓலையைத் தள்ளிப் பின்னுவார்கள். தோக்கத்தி தேங்காய் உடைக்கவும் மரங்கள் வெட்டவும் பயன்பட்டன.

வெட்டுக் கத்தி இறைச்சி மீன் வெட்டவும் பயன்பட்டது. இரும்பாலான மேசைக் கத்தியும் பாவனையில் இருந்தது.


திருவலகை

தேங்காய் துருவ திருவலகை மரக்கறி வெட்ட அரிவாள் மனை என்பனவும் கை கொடுத்தன.

கொக்கைத் தடி

கொக்கச் சத்தகம் உயர்ந்த தடியில் கட்டி வைத்திருப்பர் தோட்டத்தில் தேங்காய்,மாங்காய்,முருங்கக்காய் பறிப்பதற்கு.


அந் நாட்களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் "வெத்தலைத் தட்டைக் கொண்டு வா" என அம்மா மகளுக்கு ஓடர் போடுவாள். வெற்றிலைத் தட்டில், பாக்கு வெட்டியும் இருக்கும்.

பாக்கு வெட்டி

பாக்கு வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சீன ஜாடிகள் ஊறுகாய், உப்பு, புளி, எண்ணெய், நெய் சேமிக்க உதவின.  கண்ணாடிப் போத்தல்கள் சீனி, தேயிலை, கோப்பி, மிளகாய்ப் பொடி, மா வகைகள், தின் பண்டங்கள் சேமித்து வைக்க உதவின.

அலுமினிய ஈயப் பொருட்கள் பாவனையில் வந்தன. ஈயத்தில் அரிசி அரிப்பதற்கு அரிக்கன் சட்டி இருந்தது. சட்டி, தோசைக் கல்லு, குளிப் பணியாரக் கல்லு, தாச்சி என்பனவும் இடம் பிடித்தன.


குசினியில் தண்ணி அள்ளி வைத்துப் பிழங்குவதற்கு தகர வாளி இருந்தது. குடமும் உபயோகித்தனர்.

மரத்தாலான இடியாப்ப உரல்,முறுக்கு உரல், கரண்டி, அகப்பை,மோர்கடைய மத்து, இருந்தன.ஆப்பைக்கூடு துளையுள்ளது தட்டகப்பை ,மத்து,கரண்டி செருகிவைத்து தொங்க விட்டிருப்பார்கள்.


மத்து உருட்டும் பெண்

பனைநாரால் செய்யப்பட்ட திரிகணை சட்டி பானையை இறக்கி வைப்பதற்கு இருந்தது. பனங் சார்வோலையை வெட்டி  வெயிலில் காய வைத்து எடுத்து ஓலைப் பெட்டி, மூடியுடன் இளைத்து வைத்திருப்பர். புட்டு இடியப்பம் பலகாரங்கள் வைத்து மூடி வைப்பர்.

தட்டுப் பெட்டி, வெங்காயம் மரக்கறி, மிளகாய் பரப்பி வைப்பதற்கு உதவின. நிலத்தில் போட்டு இருப்பதற்கு தடுக்கு வைத்திருந்தனர்.வைபவங்களுக்கு சோறு சமைத்து ஆறப்போடச் சோற்றுப் பாய் இருந்தது. சாப்பிட பந்திப் பாய் வைத்திருந்தனர்.


சுளகு, இடியாப்பத் தட்டு, ஓலைத் தட்டு

ஐஞ்சறை ஓலைப் பெட்டி மசாலா சரக்கு சாமான்கள் வைப்பதற்கும், சுளகு புடைப்பதற்கும், நீத்துப் பெட்டி புட்டு அவிக்கவும், இடியாப்பத் தட்டுக்கள்,பனங்கட்டிக்குட்டான் இருந்தன.

நீத்துப் பெட்டி, முறுக்கு இடியாப்ப உரல்கள்

பனை நாரில் உறிகட்டி சமைத்த உணவை பாதுகாத்தனர்.கடகம், குஞ்சுக்கடகம் தானியசேமிப்புக்கும் தோட்டத்தில் மரக்கறிபிடுங்கவும் உதவியது.வியர்க்கும்போது விசுறுவதற்கு பனைஓலை விசிறி வைத்திருந்தனர்.


சந்தைக்கு எடுத்துச் சென்று மீன் மரக்கறி வாங்க பன் உமல் இப்பொழுது உள்ள சொப்பிங் பாக் போலப் பயன்பட்டது. இவை சாயமிடப்பட்ட ஓலையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

அடுக்களைக் கனவுகள் தொடரும் .......

மாதேவி

44 comments:

  1. அருமையான பதிவு மாதேவி. எத்தனை விஷயங்களை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.

    உயரமான வெண்கல விளக்குகள், வெண்கலப் பானைகள்(மேலே செடி வைத்து) இப்போதும் காட்சிப் பொருட்களாய் வீட்டில் வைத்துள்ளேன்:)! சின்ன சைஸ் மர தயிர் மத்தும் உண்டு. அதுபோல வருமா?

    மற்ற யாவும் அந்தக் காலத்துக்கே கொண்டு சென்று விட்டன.

    தொடருங்கள் கனவுகளை.

    ReplyDelete
  2. மாதேவி அருமை. பலயகால் பாத்திரங்களை காண்பித்து எங்களுக்கு சிறிய பாடம் எடுத்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  3. சூப்பர்!!!!!

    நான் இந்தியா வந்தபின் ரெண்டு சட்டி வாங்கி வச்சுருக்கேன். சிலசமயம் கறிகள் செய்ய பாவிக்கிறேன்.
    அதுலே முதன்முதலில் தோய்ச்ச தயிரின் ருசி இன்னும் நாவில் இருக்கு.

    நியூஸி போகுமுன் இன்னும் சிலது வாங்கிக்கணும்.

    ReplyDelete
  4. சகோதரி - கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள் - மட்டும்மல்ல நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கையும்கூட
    அரிய படங்கள்
    நல்ல பதிவு நன்றி .

    ReplyDelete
  5. அருமையான பதிவு மாதேவி. இந்த படங்களை பார்க்கும் போது சந்தோசமாகவும் இன்னுமொருபுறம் கவலையாகவும் இருக்கின்றது. இவை எல்லாவற்றையும் விட்டு நாங்கள் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம்?

    ReplyDelete
  6. ஹைய்யோ.. இந்த யாழ்ப்பாண வெற்றிலைத்தட்டு எங்கவீட்டுலயும் இருக்குதுப்பா.. என்னோட முன்னோர்களில் ஒருத்தர் ஒருசமயம் இலங்கைக்கு பயணம் வந்தப்ப வாங்கியாந்தது.. பொக்கிஷமா பாதுகாத்துட்டு வரேன்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. மிக அருமையான பதிவு மாதேவி. எனது முகப்புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி

    ReplyDelete
  9. அருமையான ஆவணம். யாராவது இப்படியான பொருட்களை எடுத்து வைத்து ஒரு அருங்காட்சியகத்தில் வைத்திருந்தால் நல்லம்.

    சிறப்பான பதிவு

    நட்புடன்
    சஞ்சயன்

    ReplyDelete
  10. அருமையான பதிவு மாதேவி.

    திருநெல்வேலி மண் பானை சமையல் என்று சில இடங்களில் விளம்பரம் இருக்கும்.திருநெல்வேலி சூட்டுக்கு மண்பானை சமையல் குளிர்ச்சி என்று முன்னோர்கள் செய்தார்கள்.

    இரும்பு பாத்திரங்கள்,வெண்கல,பித்தளை
    மரபாத்திரங்கள் மறைந்து பிளாஸ்டிக் பாத்திரயுகம் ஆகிவிட்டது கவலை அளிக்கிறது.

    அழகான பழைய பாத்திரங்கள் காட்டினீரகள்.

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு...பழைய நினைவுகளை ஞாபகபடுத்திட்டீங்க..தொடருங்கள்!!

    ReplyDelete
  12. அருமையான பதிவு

    ReplyDelete
  13. ஆஹா..மாதேபி அருமையான கலெக்ஷன்..மறந்து போனவைகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.நாங்கள் என்னதான் ஸ்டீலில் இடியாப்பத்தட்டு வந்தாலும் பனை ஈக்கியில் செய்த படத்தில் காட்டியுள்ள இடியாப்பத்தட்டில்த்தான் இடியாப்பம் இன்னும் செய்து கொண்டு இருக்கிறோம்.அதில் கிடைக்கும் சஃப்ட்னெஸ் உலோகத்தட்டில் கிடைக்காது.அந்த தட்டுக்கு மேல் அதே பனை ஈக்கியில் செய்த வளையத்தை பிரிமனை என்போம்.இன்னும் எங்கள் ஊரில் இதை தயாரித்து விறபனை செய்பவர்கள் இருக்கின்றார்கள்.வித்தியாசமான இடுகை மாதேவி.

    ReplyDelete
  14. என்னுடைய கமெண்ட் கானோம்???

    ReplyDelete
  15. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    இவை எல்லாம் பொக்கிசங்கள் அல்லவா
    பாதுகாத்துவைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  16. வாருங்கள் LK.

    பெரும்பாலும் இளைய தலைமுறையினர் இவற்றை அறிந்திருக்க மாட்டார்கள். தெரிந்துகொள்ளத்தான் விரிவாகப் படங்களுடன் போட்டிருந்தேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. வாருங்கள் துளசிகோபால்.
    நீங்கள் கூறுவதுபோல் அதன்சுவையே தனிதான்.

    நீயுசியையும் பார்க்கப்போகிறார்கள் எங்கள் ஊர் ஆட்கள் :) மிக்கமகிழ்ச்சி.

    ReplyDelete
  18. venkat said...

    "கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள் - மட்டும்மல்ல நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கையும்கூட".

    மிகச்சரியாகச் சொன்னீர்கள் வெங்கட்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. வருகைக்கு நன்றி yarl.

    நீங்கள்கூறியது போல நிறையவற்றை இழந்துவிட்டோம் என்பது உண்மையே.

    ReplyDelete
  20. நினைவுகள் என்றும் இனிமையானவைதான்.

    பொக்கிஷத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
    நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  21. மகிழ்ச்சியடைகிறேன்.

    முகப்புத்தகத்தில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி டொக்டர்.

    ReplyDelete
  22. ஆமாம் தற்காலத்தில் இவை எல்லாம் அருங்காட்சியகப் பொருட்கள் தாம்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சஞ்சயன்.

    ReplyDelete
  23. வாருங்கள் கோமதிஅரசு.

    மண்பானைச் சமையல் இப்போதும் இருப்பது மகிழ்ச்சி.

    இங்கு கிராமத்துக்கடை என வைத்திருப்பார்கள். எங்கிருந்தோ எந்தப்பாத்திரத்தில் சமைத்ததோ சொப்பிங்பைகளில் கொண்டுவந்து வைத்திருக்கும் சட்டிகளில் அழகாய் கொட்டிவைத்து விற்பார்கள்.:(

    ReplyDelete
  24. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்திரவதனா.

    முதல் வருகைக்கும் மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  25. ஸாதிகா said... "இடியாப்பத்தட்டில்த்தான் இடியாப்பம் இன்னும் செய்து கொண்டு இருக்கிறோம்".மகிழ்ச்சி. ஹெல்த்துக்கும் ஏற்றதே.

    சுளகும்,இடியாப்பத்தட்டும் ஊர் சென்றபோது எனது பாவனைக்கு வாங்கிவந்ததுதான்.

    பிரிகணை இங்கு திரிகணை என்பர்.படம் எடுக்கமறந்துவிட்டேன்.

    மிக்க நன்றி ஸாதிகா.

    ReplyDelete
  26. சிலவேலைகளால் பார்கவில்லை. அதனால் உடனே பப்ளிஸ் பண்ண முடியவில்லை.

    மன்னித்துக் கொள்ளுங்கள் ஸாதிகா.

    ReplyDelete
  27. மிக அருமை. பல பாத்திரங்கள் இப்போது பயன்பாட்டிலேயே இல்லை. அரிய படங்கள்..

    ReplyDelete
  28. மாஷா அல்லாஹ்.

    சில பாத்திரங்களைப் பார்த்திருக்கேன். சிலவற்றை இன்னமும் உபயோகத்திலும் பார்த்துள்ளேன். இருந்தாலும் இவற்றை தேடி எடுத்து ஒரு இனிய நினைவை மீண்டும் அசை போட வைத்து விட்டீர்கள். நன்றி.

    :)

    ReplyDelete
  29. வாருங்கள் ரிஷபன்.

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி்.

    ReplyDelete
  30. இனிய நினைவை மீண்டும் அசைத்ததற்கு நன்றி அன்னு.

    ReplyDelete
  31. நல்ல பதிவு மாதேவி. எல்லாப்பொருள்களும் எங்கள் வீட்டில் எங்கள் அம்மா காலத்தில் இருந்தன. என் 'அம்மா' வந்த பிறகு அனைத்தும் காணாமற்போயின.

    "பெட்டி இளைக்கும்போது காம்பால் குத்தி ஓலையைத் தள்ளிப் பின்னுவார்கள்"

    இலங்கைத்தமிழ் மிக அழகானது. இந்த ஊர்ல இதைப்படிச்சா, "அதென்ன பெட்டி எப்படி இளைக்கும்? மனுசன்தான் இளைப்பான்" என்பார்கள்.

    இது புரிகிறதா பாருங்கள்- "அங்கராக்கு சோப்பில தொரப்புக்காய் இருக்குது, எடுத்துட்டு வா அம்மணி"

    ReplyDelete
  32. அருமையான பதிவு மாதேவி.
    இதில் நிறைய பொருட்களை ஆச்சி(அம்மாவின் அம்மா) வீட்டில் பார்த்திருக்கிறேன்.
    உரலில் மாவு இடிக்கும் போது சிந்தாமல் இருக்க ஓலையில் தடுக்கு, நெல்லை சேமித்து வைக்க குலுக்கை(பானை போன்று உயரமாய் இருக்கும், கீழ் பாகத்தில் துளை இருக்கும். அதன் வழி நெல்லை எடுத்துக் கொள்ளலாம்) களி குடிக்க கும்பா, வட்டில் போன்றவையும் இருந்தன. அதன் அருமை அப்போது தெரிய வில்லை. படங்களின் சேகரிப்பும் அருமை.

    ReplyDelete
  33. மாதேவி...அருமையான பதிவு.இப்பொழுதுதான் பார்க்கிறேன்.இந்தப் பொருட்களை வைத்தே பழைய ஞாபகங்கள் வந்து போகுது.எல்லாப் பொருட்களையும் பார்த்துப் பழகிய நினைவு வருது.இப்போது ஊரிலேயே இந்தப் பொருட்களைப் பாவிப்பது குறைந்துவிட்டதே.

    இந்தமுறை நான் ஊரிலிருந்து இரண்டு மண்சட்டியும் ஒரு மண்கூசாவும் வாங்கி வந்து பாவிக்கிறேன் !

    ReplyDelete
  34. படங்களில் இருக்கும் அநேகப்பொருட்கள் வழக்கிலில்லாமலே போய்விட்டது வருத்தம்தான். அடுத்த தலைமுறைக்குக்காட்ட இப்படிப்பட்ட படங்கள்தான் மிஞ்சும்.

    நல்ல பதிவு மாதேவி!

    ReplyDelete
  35. இதில் சிலதை நான் இங்கும் எடுத்து வந்திருக்கிறேன்,அதனை உபயோகித்து சமைத்து பழகியதால் அந்த சாமான்கள் போல் வருமா?ஊரில் மாமியின் சாமான்கள் இப்படி நிறைய உண்டு.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  36. ரொம்ப அருமை , அந்த தேங்காய் துருவியில் தான் சின்னதில் நான் தேங்காய் துருவுவேன்,
    அந்த பெரிய பானை , முறம், ஆகா பழைய நினைவுகல் அப்ப்டியே சிறகடிக்குது மாதேவி.

    ReplyDelete
  37. வாருங்கள் DrPKandaswamyPhD.
    உடன் பதில் தராததற்கு மன்னியுங்கள்.

    இது புரிகிறதா பாருங்கள்- "அங்கராக்கு சோப்பில தொரப்புக்காய் இருக்குது, எடுத்துட்டு வா அம்மணி"

    பெட்டகத்தில் தோட்டத்து தானியம் இருக்குதா? அல்லது துறப்பா சரியாகப் புரியவில்லை.வட்டார வழக்குகள் இனிமையானவை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  38. அம்பிகா said...
    நெல்லை சேமித்து வைக்க குலுக்கை(பானை போன்று உயரமாய் இருக்கும், கீழ் பாகத்தில் துளை இருக்கும். அதன் வழி நெல்லை எடுத்துக் கொள்ளலாம்)

    ஆமாம் இங்கு மரப்பலகையால் ஆன பெரிய நெல்லுப் பெட்டகம் வைத்திருந்தார்கள்.

    நீங்கள் கூறியது போல கிராமத்தில் இப்பொழுது ஓரிருவரிடம் தான் இப்படியான அரிய பொருட்கள் இருக்கின்றன. படம் எடுக்க நினைத்திருந்தேன் நேரமின்மையால் சென்று எடுக்க முடியவில்லை.

    பின்பு ஒருமுறை எடுத்துப்போடுகிறேன்.

    மிக்க நன்றி அம்பிகா.

    ReplyDelete
  39. பழைய ஞாபகங்கள் மறக்கக் கூடியவையா? என்றுமே இனிக்கும் நினைவுகள் ஹேமா.

    அப்போ உங்க வீட்டில் கிராமத்துச் சமையல் இனித்திடுமே.
    மண்சட்டிக்கறியின் சுவை சொல்லவா வேண்டும்.
    நன்றி ஹேமா.

    ReplyDelete
  40. மிக்க நன்றி சுந்தரா.

    ReplyDelete
  41. கிராமத்தார்கள் பட்டிணம் பார்க்க வந்துவிட்டார்களா :)
    ஆமாம் அவைபோல் வருமா.

    மிக்க நன்றி asiya omar.

    ReplyDelete
  42. இயற்கையானவை,உடலுக்கு தீங்கில்லாத பல சமையல் பாத்திரங்கள் அருமை தெரியாமல் நாம் புறக்கணித்து,அவை இருக்கும் நிலையைப் பார்த்தால் கண்ணில் நீர் வருகிறது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  43. மிக அருமையான இப்போது காணக் கிடைக்காத பல சமயலறை உபகரணங்களைப் படத்தோடு தந்திருக்கிறீர்கள்!

    அவை மிக அருமை! பல பழைய நினைவுகளை அவை மீட்டிச் சென்றன.

    அவ் அரிய படங்களை ஈழத்து முற்றம் என்ற நம் இணையப் பக்கத்தில் உபயோகப் படுத்தி இருக்கிறேன்.

    நன்றி சகோதரி!

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்