Saturday, August 25, 2012

பூக்களைப் பறியுங்கள் 2


இயற்கையின் படைப்பில் உருவான பூக்களில் நூற்றுக்கு மேற்பட்டவை சாப்பிடக் கூடியனவாக இருக்கின்றன. இருந்தாலும் மிகக் குறைந்த மலர்களே  பயன் படுத்தப் பட்டு வருகின்றன. 

சலட்வகைகளில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும், அழகிற்காகவும்  ரோஸ்மேரி, கார்னேசன், கார்டீனியா மலர்கள் சேர்க்கப் படுகின்றன. பானங்களுடன் சேர்கின்றார்கள். கேக், டெசர்ட் வகைகளில் கலக்கப்படுகின்றன. உலரவைக்கப்பட்ட ரோஜா, மல்லி, க்ரிஸாந்தமம் பூக்கள் தேனீரில் மணத்துக்காகவும், மருத்துவத்துக்காகவும் ஊறவைக்கப் பட்டு அருந்தப் படுகின்றது.

மேலும் Morifollum ,ஸ்குவான் மலர்கள், க்ரிசாந்தமம், ஹாப்ஸ் மலர்கள்,பயன் படுத்தப்படுகின்றன.

Day Lily சீன, யப்பான் சமையல்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. இன்னும் பல மலர்கள் சமையலில் இடம் பிடிக்கின்றன.


Artichoke பச்சைக் கலரில் தாமரைப்பூ வடிவில் இதழ்கள் இருக்கும். இலைகளின் தடிப்பான நுனிப்பகுதிகளையும் அடிப்பகுதியையும் வெட்டி எறிந்துவிடுங்கள்.  துண்டங்களாக வெட்டி சமைத்துக் கொள்ளலாம்.


முழுதாக கிறில் செய்தும், அவித்தெடுத்தும் சோசுடன் தொட்டு உண்கிறார்கள். ஸ்பினச் டிப் உடனும் சாப்பிடலாம். பிசா, பாஸ்டாவில் கலந்தும் செய்யலாம். கோழி இறைச்சியுடன் இளங் காய்களைக் கலந்தும் சமைக்கலாம்.

கசரோலாகவும், ஸ்டவ் செய்து சலட்டாகவும் செய்து கொள்ளலாம்.

பேபி ஆட்டிசோக் காய்கள் சமைக்காமலே சலட் வகைகளில் கலந்து உண்ணக் கூடியவை. காயை வெட்டி பூண்டு பேஸ்ட், லெமென் யூஸ், ஒலிவ் ஓயில், உப்பு, சீஸ் கலந்து வெட்டிய புதினா கலந்து செய்து கொள்ளலாம்.

இது  Asteraceae குடும்பத்தைச் சார்ந்தது. 100 கிறாமில் காபோகைதரேட் 10.51 கிராம், நார்ச்சத்து 5.4 கி, கொழுப்பு 0.34 கி, புரோட்டீன் 2.89கி, கல்சியம் 21 மைக்ரோ கிராம், பொஸ்பரஸ் 73 மை.கி, விற்றமின் சி 7.4 மை. கி . இருக்கின்றது.

ஆவாரம்பூ



'ஆவாரம்பூவு ஆறேழு நாளாய்....' என்ற பாடலும் உள்ளது. பழமொழி ஒன்று 'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ'. மருத்துவ குணம் நிறைந்த தாவரம்.

கிராமங்களில் தெருவோர நிலங்களில் வளர்ந்து நிற்கும். மஞ்சள் நிறப் பூக்களை உடையது. கை வைத்தியத்தில் சிறுநீர் அடைப்பு நீங்க பூவைக் காய வைத்து பொடியாக்கி குடிப்பார்கள். மேனி பளபளப்புக்கும் உகந்தது என்கிறார்கள். இதன் பூக்களில் கூட்டு, பொரியல், புளிக் காய்ச்சல், சாதம், செய்து கொள்ளலாம்.

இலுப்பைப் பூக்கள்.

Thanks:- http://tamil.boldsky.com

இதன் பூக்கள் இனிப்பு தன்மையாக இருக்கும். பச்சையாகச் சாப்பிடலாம் என்கிறார்கள். பூவை உலர வைத்து எடுத்து பலகாரங்கள் செய்யலாம். பூக்களைப் பிழிந்து எடுத்து பாணியாகக் காச்சி சோற்றுடன் சாப்பிடுவார்கள்.

கல்சியம், இரும்புச் சத்து உள்ளது. இதன் விதையிலிருந்து இலுப்பெண்ணெய் தயாரிக்கிறார்கள். இது கசப்பான எண்ணெயாக இருக்கும். பத்தியத்துக்கு இவ் எண்ணையில் சமைத்து உண்பார்கள். விளக்கு எரிக்கவும் இவ்எண்ணை பயன்படும்.


வெங்காயப்பூ

Thanks:- eelamnaturalfoods.info


உடலுக்கு குளிர்ச்சி தரும். வாய்ப் புண்களுக்கு நல்லது. வயிற்று வலி நீங்கவும் உகந்தது என்கிறார்கள்.

கீழே ஹொலன்ட் நாட்டிலுள்ள Egmond இல் கத்தரிப்பு நிறத்தில் வெங்காயம் பூத்திருக்கிறது.

thanks:- http://www.flickriver.com/photos/elsa11/1401491959/
 பொரியல், கூட்டு, குழம்பு. பால்கறி,காரப்பிரட்டல், முட்டைப் புட்டு, செய்து கொள்ளலாம். சமையலில் பிரியாணி, சூப், அலங்காரங்களுக்குப் பயன்படுத்தலாம்.

 முருங்கைப்பூ



வயிற்றுக் கிருமியை அழிக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடலுக்குத் தேவையான சக்திகளையும் தர வல்லது. ஆயுள்வேதத்தில் இதற்கு முதல் இடம் உண்டு. பூவை அவித்துக் கசாயமாகக் குடிப்பர். வெண்முத்துக்கள் போன்ற சிறிய மொட்டுக்கள் கொத்தாக பூத்துக் குலுங்கி அழகாக மலர்ந்திருக்கும்.

பொரியல், கறி, கூட்டு, துவையல் செய்து கொள்ளலாம்.

வில்வம் பூ



வடை, சாம்பார் செய்து கொள்ளலாம். இதன் பழமும் மருத்துவப் பழமாகப் போற்றப்படுகிறது. இனிய வாசனையுடன் இருக்கும் பழம் சற்றுக் கசப்பானது. மூல வியாதி உள்ளவர்களுக்கு உகந்தது என்பார்கள். வயிற்றுக் கோளாறுகளுக்கும் உகந்தது.

காளான் 


காளானில் நிறைந்த சத்துக்கள் உள்ளது. இவற்றில் இலட்சத்திற்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். சில காளான்கள் நச்சுத்தன்மை உடையன. முட்டைக் காளான் நாய்க்குடைக்காளான், சிப்பிக் காளான், பூஞ்சைக் களான் எனப் பல வகைகள் உள்ளன.

நூறு கிராமில் புரோட்டின் 2.5 கிராம், காபோகைதரேட் 4.1 கி, கொழுப்பு 0.1 கி, பொற்றாசியம் 448 மை.கி,பொஸ்பரஸ் 120 மை.கி,கல்சியம் 18 மை.கி, நியாசின் 3.8 மை.கி அளவில் இருக்கின்றது. 

சூப், வறுவல், பொரியல், பிரியாணி, காரப் பிரட்டல், குழம்பு, பிட்சா ரொட்டிகளில் கலப்பர்.

அகத்திப் பூ பற்றி அறிய......கறியாகும் பூ


கராம்பு அவரை



கொடியினத் தாவரம் இது.


அவரை இனங்களில் ஒன்று. கராம்பு போன்ற தோற்றத்தில் பச்சைநிறமாக இருக்கும். கொத்தாக காய்த்திருக்கும். முன்பக்கம் வெள்ளை மொட்டுப்போல இருக்கும். வெள்ளை மொட்டை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும். புரதம், இரும்புச் சத்து, நார்ப்பொருள் சுண்ணாம்பு சத்து உள்ளது.

பால்க்கறி, சாம்பார், குழம்பு பொரியல், செய்து கொள்ளலாம்.

வேப்பம்பூ

மருத்துவத் தாவரமாக வேம்பு பயன்பட்டு வருகிறது.


 இத் தாவரம் முழுவதுமே பிரயோசனத்திற்கு உரியது. இலை, பூ, காய், பட்டை, மரம் என அனைத்தும் நோய்களுக்கு மருந்தாகின்றன.   வறுவல், பச்சடி, ரசம், வடகம் என சமையலில் சேர்த்துக் கொள்ளுவோம்.

வாழைப்பூ


சிறுநீரகக் கோளாறுகளுக்கு உகந்தது. வயிற்றுக் கடுப்பு, கை கால் எரிச்சலைப்போக்கும்.
வடை, கட்லட், பொரியல்,கூட்டு, காரக்கறி, பால்கறி எனப் பலவும் செய்யலாம்.


கற்றாளை


 உடலுக்கு குளிர்சியானது.மஞ்சள் நிறத்தை உடைய பூ இப்பூவில் காரப் பிரட்டல், பொரியல் செய்வார்கள். சுவையாக இருக்கும்.


பூசணிப் பூ


எங்கள் உள்ளுர் சமையலுடன் வெளிநாடுகளிலும் சமையலில் இடம் பிடித்துள்ளது. zucchini,  courgette பூக்களும் இவ்வகையைச் சார்ந்தவை.


பசியைத் தூண்டும் ஸ்ராட்டர் ( starter )க்கு உண்ணப் படுகின்றது. பிஸாவிலும் கலந்து கொள்கிறார்கள். பூசணிப்பூவில் பொரியல், டிப் ப்ரை, செய்துகொள்ளலாம்.  இறால் உடன் சேர்த்து கிரேவியாகவும் செய்து கொள்ளலாம். stuff செய்து பொரித்தும் உண்ணலாம்.

.
செவ்வரத்தம்பூ ( செம்பருத்திப் பூ )

மரத்தின் தாயகம் சீனா என்கிறார்கள். சீனரோஜா என்றும் அழைக்கிறார்கள். செம்பருத்தி ( Hibiscus rosa sinensis ) malvaceae குடும்பத்தைச் சார்ந்தது.

மலேசியாவின் தேசிய மரம் என்ற பெருமையையும் பெறுகிறது. இலங்கை இந்தியாவில் பெரும்பாலும் காணப்படுகிறது. சிவப்பு நிறத்தால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும். பசுபிக் தீவுகளிலும் உணவாக உட்கொள்ளப்படுகிறது. எங்கள் முன்னோர் சமையலில் முதலிடம் இதற்கு இருந்தது.

செடி இனத்தைச் சார்ந்தது. 5 அடி முதல் 10 அடி வரை வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கக் கூடிய தாவரம்.
  • இரத்த சோகையை சுகமாக்கும். 
  • கொழுப்பைக் கட்டுப்படுத்தும். 
  • பெண்களுக்கான மாதவிடாய் நோய்களைத் தடுக்கும். 
  • தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயுடன் பூக்களைப் போட்டுக் காச்சி கருமூடி வளர வைப்பார்கள். 
சட்னி, பச்சடி, சம்பல், பொரியல்,  செய்யலாம். சர்மப் பளபளப்பிற்கு நல்லது என்கிறார்கள். யூசாகவும், சுடுநீரில் போட்டும் இருமல் தணிய அருந்துவார்கள்.




சம்பல் செய்வோம்.

சேகரிக்க வேண்டியவை

சிவப்புச் செம்பருத்திப் பூக்கள் -  15- 20
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 6 - 7
தேங்காய்ப்பூ - 2 ரீ ஸ்பூன்
கெட்டித் தேங்காய்ப்பால் -1 டேபிள் ஸ்பூன்
தேசிச் சாறு -1/4  ரீ ஸ்பூன்
உப்பு –சிறிதளவு.

செய்வோம்


பூக்களைப் பறித்து காம்பையும் நடுவில் உள்ள மகரந்தத்தையும் நீக்குங்கள்.

பூச்சி, எறும்பு இருக்கின்றதா என நன்கு பார்த்துக் கொள்ளுங்கள்

பூக்களைக் கழுவி எடுங்கள்.

பூக்கள், பச்சை மிளகாய், வெங்காயங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

தேங்காய்பூ கலந்து உப்பு போட்டு எல்லாவற்றையும் சற்று மசித்து விடுங்கள்.

இறுதியாக தேசிப்புளி, தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து எடுத்து வையுங்கள்.

பார்க்க நல்ல சிவப்பு நிறமாக இருக்கும். உடனே சாப்பிடத்தோன்றும். சாப்பிட குளிர்ச்சியாக இருக்கும். கோடைக்கு சாப்பிட சிறந்தது.

குறிப்பு

செம்பருத்திப் பூக்கள் கிடைக்கவில்லை. அதனால் தக்காளி சம்பல் செய்து படம் போட்டுள்ளேன்.


பூக்களைப் பறியுங்கள் உண்டு மகிழுங்கள். நலம் பெறுங்கள்.

:- மாதேவி -:

33 comments:

  1. மிகவும் அழகான பூக்கள் ....
    அதுவும் சாப்பிட!

    பாராட்டுக்கள்.

    வாழைப்பூ படத்தில் படு சூப்பர்! ;))))

    ReplyDelete
  2. சாப்பிட இத்தனை வகைப் பூக்கள் இருக்கா !!!

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை... நல்ல குறிப்புகளுடன் ஒரு சம்பலும்..... பூக்களைப் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் அருமையாக விளக்கி உள்ளீர்கள்.... படங்கள் அனைத்தும் அருமை.....

    ReplyDelete
  4. அருமையான பதிவு!

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்கள். படங்கள், பகிர்வு, சம்பல் செய்யும் குறிப்பு அனைத்துக்கும் நன்றி மாதேவி.

    ReplyDelete
  6. அறியாத பல அரிய தகவல்கள்....

    பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
  7. மாதேவி....பூக்கலை ரசிப்பது ஒரு பக்கமிருந்தாலும் சமைப்பதையும் இவ்வளவு விபரமாகச் சொல்லி வச்சிருக்கிறீங்கள்.வேப்பம்பூ,வாழைப்பூ,அகத்திப்பூ,முருங்கைப்பூ,சிதம்பரத்தம் பூ,வெங்காயப்பூ ....இவைகளி ஊரில் சமைத்ததோடு சரி.ஆங்கிலப் பூக்களையும் சொல்லி அசத்திட்டீங்க.ஆரம்பம் படம் போட்டிருக்கிற ‘பூ’கண்டிருக்கிறன் இங்க.எப்பிடிச் சமிக்கிறதெண்டு தெரியாது !

    ReplyDelete
  8. செவ்வரத்தம் பூ சம்பல் எனது மனைவி சுவையாகச் செய்வா. சாப்பிட்டிருக்கிறேன்
    கற்றாளைப் பூச் சமையல் எனது அம்மா சிறுவயதில் செய்து தந்திருக்கிறா. சந்நதி அண்ணை என்பவர் வெற்றுக் காணிகளில் பறித்து வருவதாக ஞாபகம்.
    இப்பொழுது கற்றாளைப் பூக்களைக் காண்பதே இல்லை. ஏக்கம்தான் மிஞ்சுகிறது.

    ReplyDelete
  9. செவ்வரத்த்ம் பூ குழந்தைகளுக்குப் அணியும் கறுத்தப் பொட்டுத் தயாரிப்பிலும் உள்ளது

    ReplyDelete
  10. நல்ல தகவேலுள்ள பதிவு


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல் பதிவு . நன்றி

    ReplyDelete
  12. வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன்.

    நன்றாகச் சொன்னீர்கள் பூக்கள் பலவும் அழகுடன் மட்டுமல்லாது மருத்துவப் பயனுக்கும், சாப்பிடவும் உதவுகின்றன.

    வாழைப்பூ உடல் நலத்துக்கு நல்லது எல்லோரும் சாப்பிடவேண்டும் என்பதற்காகத்தான் நல்ல படமாகப் போட்டிருக்கின்றேன் :)))))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்.

    இன்னும் பலவகையான பூக்கள் இருக்கின்றன. நான் அறிந்தவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  14. மிக்க நன்றி விஜி.

    ReplyDelete
  15. வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் வரலாற்று சுவடுகள்.

    ReplyDelete
  16. மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  17. நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  18. வாருங்கள் ஹேமா.

    இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காகப் பகிர்ந்துள்ளேன். பல பழைய சமையல் முறைகளை மறந்துவிட்டோம்.

    இப்போதெல்லாம் சில வீட்டில் அடுப்புப் பத்தினால் அதிசயம்தான் ஹோட்டல் சாப்பாடு என்ற காலம் ஆகிவிட்டது.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. வாருங்கள் Muruganandan M.K.

    M.K. said...
    "கற்றாளைப் பூக்களைக் காண்பதே இல்லை. ஏக்கம்தான் மிஞ்சுகிறது"

    கத்தாளை முள்ளு கொத்தோடை குத்தும்.... என்று பாடிகொள்ள வேண்டியதுதான்:))))

    மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாருங்கள் Gnana.

    வருகைக்கு மகிழ்கின்றேன்.

    நினைவூட்டியதற்கு மிக்கநன்றி.

    ReplyDelete
  21. மிக்க நன்றி Easy (EZ) Editorial Calendar.

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Gnanam Sekar.

    ReplyDelete
  23. சிறப்பான பகிர்வு... நல்ல தொகுப்பு... பாராட்டுக்கள்...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    (தமிழ் பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றதால் கருத்திட தாமதம்)

    ReplyDelete
  24. நீங்கள் நலமா மாதேவி? எவரும் அதிகம் அறிந்திராத பல புதிய தகவல்களையும், பயனுள்ள தகவல்களையும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  25. பறிக்க வேண்டிய பூக்களை படங்களுடன் பட்டியலிட்டு சமையலையும் செய்து விட்டீர்கள். பதிவு அருமை. நீங்கள் செய்து காட்டிய சமையலும் அங்கே ருசியாகத்தான் இருந்திருக்கும்.

    ReplyDelete
  26. பூக்களில் இவளவு விஷயம் இருகிறதா! மிகவும் அருமை !

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  27. மிக மிக அழகாய். அந்த தாமரை போல இருக்கும் பூ அருமை

    ReplyDelete
  28. வித்தியாசமான பூக்கள் காட்டி கண்களி கொள்ளை கொண்ட மாதேவிக்கு வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
  29. எத்தனைவகை பூக்களைப்பற்றிய செய்திகள்!
    எல்லாம் அழகு. கண்களை கவர்கிறது.

    செம்பருத்திபூவில் புதிய பக்குவம் செய்து பார்த்து விடுகிறேன்.
    செம்பருத்தி டீ குடித்து இருக்கிறேன்.
    சமையல் செய்தது இல்லை. நன்றி மாதேவி.

    ReplyDelete
  30. பல புதிய தகவல்களையும், பயனுள்ள தகவல்களையும் தந்துள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
  31. அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்

    ReplyDelete
  32. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்