Wednesday, January 27, 2010

அம்பரல்லா மசாலாக் குழம்பு


மாங்காய், நெல்லி, ஆப்பிள், அன்னாசி, இவற்றின் சுவையுடன் சேர்ந்த இனிய புளிப்புச் சுவையுடைய காய் இது. மாம்பழமும் அன்னாசியும் கலந்தது போன்ற வித்தியாசமான சுவையுடையது.

வீட்டுத் தாவரமாகவும்

40 அடி உயரம் வரை வளரக் கூடியது. நல்ல மழை வீழ்ச்சியும் குளிர்மையும் உள்ள சூழலில் நன்கு வளரும்.

ஆயினும் வீட்டுத் தாவரமாக வளரக் கூடிய குள்ள இனங்கள் உண்டு. மாடிவீட்டு பல்கனிகளில் பெரிய பீப்பா தகரங்கள் அல்லது பெரிய பிளாஸ்டிக் பாத்திரங்களில் வளர்க்கலாம்.


சிறிய தாவரமாக இருக்கும்போதே காய்க்கத் தொடங்கும். 2-4 வருடத்தில் அதிக காய்களைத் தரக் கூடியது. பச்சை நிறக் காயாக இருக்கும் இது பழுக்கும் போது மெல்லிய மஞ்சள் நிறமாக மாற்றமடையும்.


தென்னாசிய நாட்டுக்கான தாவர இனமாகக் கொள்ளப்படுகிறது. ஆசியாவிற்கு வெளியிலும் சில இடங்களில் அபூர்வமாகக் காணும் இனம் இது.

இதன் தாவரப் பெயர் Spondias dulcis ஆகும். ஆயினும் ஆங்கிலத்தில் Golden Apple, Wi-Tree, Otaheite Apple என்றெல்லாம் அழைப்பார்கள்.
பச்சையாகவும்

பச்சையாகவே உண்ணக் கூடியது. ஆயினும் பச்சை நிறக் காய் புளிக்கும். கடிக்கும் போது நொறு நொறுக்கும்.

பதப்படுத்தியும்

இக் காயில் ஊறுகாய், அச்சாறு, சட்னி செய்து கொள்ளலாம். பதப்படுத்தப்பட்டு போத்தல்களில் அடைக்கப்பட்டு சட்னிகள் பாவனையில் உள்ளன.

பானமாகவும்


தோல் நீக்கி துண்டங்களாக வெட்டி எடுத்து தண்ணீர் விட்டு அடித்தெடுத்து வடித்து உப்பு அல்லது சீனி சேர்த்து பானமாக பருகிக் கொள்ளலாம்.

போசாக்கு

விட்டமின் சீ, உடையது, அயன் கூடியளவு உண்டு. முக்கியமாக நார்ப்பொருள் அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்லது.

அம்பிரலா மசாலாக் குழம்பு

தேவையான பொருட்கள்


அம்பிரலா காய் - 5
பெரிய வெங்காயம் - 1
செத்தல் மிளகாய் - 2
கடுகு – ¼ ரீ ஸ்பூன்
கருவேற்பிலை, ரம்பை சிறிதளவு
மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியாப் பொடி - 2 ரீ ஸ்பூன்
சீரகப் பொடி -1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீ ஸ்பூன்
மசாலாப் பொடி சிறிதளவு
கெட்டித் தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1 கட்டி
ஒயில் - 2 ரீ ஸ்பூன்

செய்முறை

அம்பிரலாவைக் கழுவி தோலுடன் நாற்புறமும் துண்டங்களாக வெட்டியெடுங்கள்.
விரும்பினால் விதையுடன் கூடிய உட்பகுதியையும் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம்.

வெல்லத்தை காய்ச்சி வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் செத்தலை சிறு துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

ஓயிலில் கடுகு தாளித்து வெங்காயம் செத்தல் வதக்குங்கள். கருவேற்பிலை ரம்பை சேர்த்து கிளறுங்கள்.

அரைக் கப் தண்ணீர் விட்டு உப்புப் போட்டு காயைக் கொட்டி 2 நிமிடம் அவித்து எடுங்கள்.

மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி, மசாலப் பொடி, சேர்த்துக் கிளறுங்கள்.

கட்டித் தேங்காய்ப் பால் விட்டு, வடித்து எடுத்து வைத்த வெல்லத்தையும் சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.

மிகவும் இலகுவாக 5 நிமிடத்தில் புளிப்பு சுவையான அம்பிரலா மசாலாக் குழம்பு தயாராகிவிடும்.

உண்ண உண்ண

பிரியாணி, சாதம், புட்டுக்கு இனிப்புப் புளிப்பு சுவையுடன் சுவை சேர்க்கும்.

விதையுடன் இருக்கும் சதைப் பகுதி கடித்துச் சாப்பிடுவதற்குச் சுவை கொடுக்கும்.

அவசரத்தில் தும்புடன் கடித்து பல்லிடுக்கில் சிக்க விடாதீர்கள். மீன் சாப்பிட்ட பழக்கம் கைகொடுக்கும் அல்லவா? தும்புகள் வாயில் குத்தவும் வாய்ப்பிருக்கிறது.

மாதேவி

34 comments:

  1. பெயரும் காயும் வித்தியாசமாக இருக்கிறது! இதுவரை இப்படி ஒரு வகையை கேள்விப்பட்டது இல்லை. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. இந்த காயை நான் கேள்விப்பட்டதெய்ய் இல்லை மாதேவி.. பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. இதற்கு வேறு ஏதேனும் பெயர் இருக்கிறதா?

    ReplyDelete
  3. புதுவகையான காய்யாக இருக்கு. இதில் இருக்கும் நிறைய சத்துக்கள் தெரிந்துக்கொண்டேன். ஆனால் இந்த காய் இங்கு கிடைக்குமா என்று தெரியலையே.
    கிடைத்தால் கட்டாயம் செய்துவிடுகிறேன். நல்ல குறிப்பு.

    ReplyDelete
  4. சாப்பிடதுண்டு

    சமைச்சல்ல - முயற்சித்து பார்க்கிறேன் இங்கே கிடைக்குதான்னு ...

    ReplyDelete
  5. மாதேவி உங்கள் பதிவுகளில் தரும் தகவல்கள் அருமை. நல்ல பயனுள்ள விளக்கங்கள் தருகின்றீர்கள்.நான் இந்தக் காய் பற்றி இப்போதுதான் முதன்முறையாக கேள்விப் படுகின்றேன். அனேகமாய் இது கிச்சலிக்காய் வெரைட்டி என்று நினைக்கின்றேன். உங்களின் இலங்கைத் தமிழும் அருமை. ஒயிலில்,செத்தல் தும்பு போன்ற சொற்கள் பிரமாதம். நன்றி

    ReplyDelete
  6. நல்ல விளக்கமும் அருமையான குழம்புக்கும் நன்றிங்க

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  7. வாருங்கள் சந்தனமுல்லை.
    இங்கு இந்தக் காய் தாராளமாகக் கிடைக்கும்.
    கூடியதாக தென்பகுதி மக்களின் சமையலில் பெரும்பாலும் இடம்பெறும்.

    ReplyDelete
  8. இதன் தமிழ் பெயர் தெரியவில்லை.
    தெரிந்தால் கூறுகிறேன் தர்சினி.

    ReplyDelete
  9. நீங்கள் கூறியது போல காய் உவ்விடம் கிடைக்குமா தெரியவில்லை. பதப்படுத்திய சட்னி கிடைக்கலாம் Mrs.Faizakader.

    ReplyDelete
  10. நன்றி நட்புடன் ஜமால்.

    ReplyDelete
  11. வாருங்கள் பித்தனின் வாக்கு. நீங்கள் கூறியது போல கிச்சலிக்காய் வெரைட்டியாக இருக்கலாம்.

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.

    ReplyDelete
  13. அருமையான பதிவு, எனக்கும் அந்த காயின் பெயர் தெரிந்துகொள்ள ஆவல்..:))

    ReplyDelete
  14. இந்தக் காய் ஃபிஜியில் ஏராளமாகக்கிடைக்கிறது.

    மாங்காய் இல்லாத நாட்களில் இதுதான் அதுக்கு ஈடான வகை.

    ஆம்டா என்று சொல்கிறார்கள்.

    இதைத் தோல் சீவிட்டு, கேரட் துருவியில் துருவி, பச்சை மிளகாய் அரைச்சுக் கலந்து உப்பும் சேர்த்து ஒரு விதமான வகை செய்கிறார்கள் அங்கே உள்ள குஜராத்தி இனத்தவர்.

    சுவை சூப்பர்!

    ReplyDelete
  15. இந்தக் காயை நானும் அறிந்ததில்லை. நன்றி மாதேவி. எப்போதும் போலவே அதைப் பற்றிய சகல விவரங்களும் தந்திருக்கிறீர்கள். அருமை. கன்னட பெயரும் தெரிந்தால் சொல்லுங்கள்:)!

    ReplyDelete
  16. தமிழ்நாட்டில் இந்த காய் கிடைப்பதில்லை. படங்கள் அருமை.

    ReplyDelete
  17. நன்றி பலா பட்டறை.ஆவலுடன் காயின் தமிழ்பெயர் அறிய இருக்கும் உங்களுக்கு என்னால் சரியான பதில் தர முடியவில்லை :(((

    வலைவீசிக் கண்டுபிடிப்பது உங்கள் கைகளில் :))))

    ReplyDelete
  18. வாருங்கள் துளசி கோபால்.சரியாகச் சொன்னீர்கள் மாங்காய் போன்றதுதான்.

    இங்கும் நீங்கள் குறிப்பிட்டது போல குஜராத்தில் செய்வதுபோல "சம்பல்" செய்வார்கள் இதை பின்பு ஒரு குறிப்பாக எழுத நினைத்திருந்தேன்.

    கருத்துக்கட்கு நன்றி.

    ReplyDelete
  19. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    "கன்னட பெயரும் தெரிந்தால் சொல்லுங்கள்:)!

    :))))))))))

    ReplyDelete
  20. துபாய் ராஜா said...

    "தமிழ்நாட்டில் இந்த காய் கிடைப்பதில்லை. படங்கள் அருமை". மிக்க நன்றி.

    ReplyDelete
  21. இதுவரை கேள்விப்படாத காய்.

    விளக்கம் அருமை.

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி அக்பர்.
    நல்ல விளக்கம் எனக் கூறியது மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
  23. வருகைக்கு நன்றி சக்தி. சாப்பாடு தயாராக இருக்கிறது.

    ReplyDelete
  24. வித விதமாகச் சமையல் சொல்கிறீர்கள். மாதேவி.
    செய்து ஒரு பார்சலும் அனுப்பிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.:)

    ReplyDelete
  25. நன்றி வல்லிசிம்ஹன்.

    பார்சல் அனுப்பிவிடுகிறேன்.:)

    ReplyDelete
  26. புதுமையான ரெசிபி, நல்ல விளக்கத்துடன். எங்கோ பெயர் அடிபடுகிறது ஆனால் சமைத்ததில்லை.

    ReplyDelete
  27. சகோதரி பேச்சுலர்களுக்கு எளிய முறையில் செய்யும் சமையல் குறிப்புகளை தருவீர்களா? ரவை கிச்சடி எப்படி செய்வது என்று தங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் கூறவும்

    ReplyDelete
  28. வாருங்கள் ஜலீலா. காய் கிடைத்தால் சமைத்துப் பாருங்கள்.

    ReplyDelete
  29. வாருங்கள் siruthai.உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கேட்டது போல குறிப்புகள் தருகிறேன்.

    ReplyDelete
  30. அச்சோ....புளிக்குது மாதேவி.ஊர்ல சும்மா சாப்பிட்டுப் பாத்திருக்க்கிறன்.அதைக் கறி வைத்தோ பதப்படுத்தியோ பார்த்ததில்லை.கொழும்புப் பகுதியில்தான் இந்தக்காய் கூடுதலாகக் கிடைப்பதால் சிங்களவர்கள் பாவிப்பதாகக் கேள்விப்பட்ட்டிருகிறேன்.

    ReplyDelete
  31. வாருங்கள் ஹேமா. நீங்கள் கூறியது சரியானதுதான்.

    ReplyDelete
  32. இந்த காயை நான் கேள்விப்பட்டதெய்ய் இல்லை மாதேவி.. பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.

    ReplyDelete
  33. வாருங்கள் prabhadamu.
    காயைப் பற்றி இப்பொழுது அறிந்து கொண்டீர்கள்தானே.
    கிடைக்கும்போது சாப்பிட்டுப்பாருங்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்